Friday Jan 10, 2025

சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அரும்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை அஞ்சல் – 609 702 நன்னிலம் வட்டம். நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +9-4366-270 073

இறைவன்

இறைவன்: அயவந்தீஸ்வரர் இறைவி: உபய புஷ்ப விலோசனி

அறிமுகம்

திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 81ஆவது சிவத்தலமாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இது அயோகந்தி என்றும் கூறப்படுகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் வட்டத்தில்அமைந்துள்ளது. திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலம் எனப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

திருநீலநக்க நாயனார் அவதரித்ததும், திருத்தொண்டு புரிந்ததும் இத்தலமேயாகும். ஒரு சமயம் நாயனார் தன் மனைவியாருடன் இத்தல இறைவனை வழிபடத் திருக்கோவிலுக்குச் சென்றார். அப்போது ஒரு சிலந்திப் பூச்சி இலிங்கத்தின் மீது விழுந்தது. மனைவியார் அன்பு மேலீட்டினால் அப்பூச்சியை வாயால் ஊதி அகற்றினார். இதைப் பார்த்த நாயனார் தமது மனைவியாரின் இச்செயல் தகாதது என்று எண்ணி அவரைத் துறந்தனர். மனைவியாரும் வீடு செல்லாது கோவிலில் கவலையுடன் இருந்தார். அன்று இரவு வீட்டில் நாயனார் தூங்குகையில் சிவபெருமான் அவருடைய கனவில் தோன்றி அவர் மனைவியர் ஊதின இடத்தை தவிர ஏனைய இடமெல்லாம் சிலந்தியின் கொப்புளம் இருப்பதைக் காட்டி அவ்வம்மையாருடைய அன்பின் பெருக்கை வெளிப்படுத்தி அவரை நாயனாரோடு கூட்டுவித்த பெருமை வாய்ந்த தலமாகும்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, செல்வ வளம் பெருக இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

மூலவர் அயவந்தீசுவரர் சுயம்புலிங்கமாக மேற்குநோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல அம்மன் இருமலர்க்கண்ணம்மையின் நெற்றியில், சிவனைப்போல நெற்றிக்கண் இருப்பது சிறப்பு. அர்த்தநாரீஸ்வரத் திருமேனி ரிஷபத்தின் தலைமீது ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் இருப்பது சிறப்பம்சமாகும்.திருநீலநக்க நாயனார் அவதார தலம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 144 வது தேவாரத்தலம் ஆகும். திருநீலநக்க நாயானரின் அவதாரத் தலம். கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, நர்த்தனகணபதி, லிங்கோற்பவர், பிரம்ம, பிட்சாடனர், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரத் திருமேனி ரிஷபத்தின் தலைமீது ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் இருப்பது தரிசிக்கத்தக்கது. இம்மூர்த்தங்களுடன் அகத்தியரும் உள்ளார். ருத்ர வியாமளா தந்திர’ ஆகம முறைப்படி நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆவணி மூலவிழா சிறப்பாக நடைபெறுகிறது. 1945ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள இக்கோயிலுக்குப் பக்கத்தில் திருமருகல், திருநள்ளாறு முதலிய திருமுறைத் தலங்கள் உள்ளன. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது திருநீலநக்கர் வரவேற்று அவருடைய நட்பைப் பெற்றதும் இத்தலமேயாகும்.

திருவிழாக்கள்

ஆவணி மூல விழா, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சீயாத்தமங்கை

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top