Monday Dec 23, 2024

சித்தன்னவாசல் குகை கோவில்

முகவரி

சித்தன்னவாசல் குகை கோவில், சித்தன்னவாசல் குகை ரோடு, மதிய நல்லூர், தமிழ்நாடு 622 101.

இறைவன்

இறைவன்: தீர்த்தங்கரர்

அறிமுகம்

புதுக்கோட்டை நகரிலிருந்து 12 கி.மீ தொலைவில் சித்தன்னவாசல் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள மலையில் சமணர் குகைக்கோவில் ஒன்று உள்ளது. இக்குகைக் கோவிலின் உள்ளே ஒரு சிறு அறையும் வெளியே ஒரு தாழ்வாரமும் உள்ளன. குகைக்கோவிலின் சுவர்களில் சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளன. சித்தன்னவாசலும், இதனருகிலுள்ள அன்னவாசலும் பல நூற்றாண்டுகளாகச் சிறந்த சமண மையங்களாக விளங்கின. சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 – 1200 ஆண்டு பழமையானவை. புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் செல்லும் வழியில் சுமார் 16 கிலோ மீட்டரில் அமைந்த இவ்விடத்தை தமிழக அரசும், தொல்லியல் துறையும் பாதுகாத்து வருகிறது. சுமார் 70 மீட்டர் உயரமே உள்ள இக்குன்றுகளின் மேல் சமணர்களின் படுக்கையும், தவம் செய்யும் இடமும், பல இடங்களில் குடைவறைகளும் காணப்படுகின்றன. சிறு மற்றும் பெரும் பாறைகளும் உள்ள இடம் சமண முனிவர்கள் தவம் செய்த இடமாக அறியப்படுகிறது. இவ்விடத்தின் மிக அருகில் உள்ள ஏலடிப்பட்டம் என்ற இடத்தில் சமணர்களின் படுக்கைகளும், தமிழ் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. அறிவர் கோயில் எனப்படுகின்ற சமண கோயில் ஒன்றும் இங்குள்ளது.

புராண முக்கியத்துவம்

சித்தன்னவாசல் ஓவியங்கள் சமணர்களின் குகைக்குள் தான் வரையப்பட்டு இருக்கிறது. இந்தக் கோவிலுக்கு ‘தென்னிந்தியாவின் அஜந்தா குகை’ என்ற ஒரு சிறப்புப் பெயரும் இருக்கிறது. புதுக்கோட்டையில் அன்னவாசல் என்ற ஊருக்கு முன்னதாக உள்ளது இந்த சித்தன்னவாசல் என்ற ஊர். ‘அன்னவாயில்’ என்பது காலப்போக்கில் மாறி ‘அன்னவாசல்’ ஆக அழைக்கப்பட்டு வருகிறது. அன்ன வாசலின் முன் பகுதியில் தான் சித்தன்னவாசல் அமைந்திருக்கிறது. ‘சித்தனம் வாசஹ்’ இந்த வடமொழிச் சொல்லிலிருந்து வந்தது தான் இந்த சித்தன்னவாசல். ‘துறவிகள் இருப்பிடம்’ என்பது தான் இதன் அர்த்தம். சிறிய, பெரிய பாறைகளைக் கொண்ட இந்த இடம் சமண முனிவர்கள் தவம் செய்த இடமாக கூறப்படுகிறது. மலைக்கு மேலே ஏற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. படிகளில் ஏறி கிழக்குப்பக்கமாக நோக்கினால் புகழ் பெற்ற சமணர் படுக்கைகள் நம்மால் காணமுடியும். மொத்தமாக ஏழு படுக்கைகள் இருக்கின்றது. அதில் தலை வைத்து படுத்துக் கொள்ள, கல்லாலான மேடைகளும் செதுக்கப்பட்டுள்ளது. இந்த படுக்கையின் மீது தான் சமணமுனிவர்கள் படுத்து உறங்கிய தாக கூறப்படுகிறது. இதில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ்மொழி கல்வெட்டுகள் கிபி எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுக்குரிய தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப் பட்டுள்ளது. அந்த கல்வெட்டுகளில் சமணத்துறவிகள் பெயர்களானது காணப்படுகிறது. இந்தப்பகுதி ஏழடிப்பட்டம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. கிபி பத்தாம் நூற்றாண்டு வரையில் இந்த குகையில் சமணமுனிவர்கள் தங்கியிருந்தார்கள் என்பதற்கு இங்குள்ள கல்வெட்டுகள் தான் ஆதாரம்.

காலம்

2 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சித்தன்னவாசல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

புதுக்கோட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top