Monday Dec 23, 2024

குடவாசல் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில், குடவாசல், திருவாரூர் மாவட்டம். போன்: +91 94439 61467, 81482 65469

இறைவன்

இறைவன்: ஸ்ரீநிவாசப் பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி

அறிமுகம்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசலில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். குடவாசல் என்பது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடமுருட்டி மற்றும் சோழ சூடாமணி ஆகிய இரண்டு காவிரியாற்றின் இரு பங்கீடுகளுக்கு இடையே அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். ஸ்ரீநிவாச பகவான் தனது மனைவிகளான ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவியுடன் காட்சியளிக்கிறார். குடவாசல் கோவிலின் தனிச்சிறப்பு என்னவென்றால், உலகிலேயே ஸ்ரீநிவாச பகவானின் ஒரே சன்னதி இங்குதான் உள்ளது. இக்கோயில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று கூறப்படுகிறது. இந்த கோவிலில் ஸ்ரீநிவாஸரை வழிபடுவது, திருப்பதியில் பாலாஜியை வழிபடுவதற்கு சமமான புண்ணியத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. வெள்ளி திருமஞ்சனம் மற்றும் வியாழன் நேத்ர தரிசனம் திருப்பதி கோவிலுக்கு நிகரானவை. இங்குள்ள ஸ்ரீநிவாசப் பெருமாளை திருப்பதி ஸ்ரீநிவாசனின் தம்பியாகக் கருதப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

முன்னொரு காலத்தில், வடதிசைக்கு அதிபதியான குபேரன் மகாவிஷ்ணுவை வணங்கி, நான் எப்பொழுதும் தங்களைத் தரிசித்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தை அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதற்கிணங்கிய மகாவிஷ்ணு, கலியுகத்தில், கடத்துவாரபுர – க்ஷத்திரம் எனப்படும் திருக்குடவாயில் தலத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளி அனுக்ரகம் செய்கிறேன் என்று கூறினார். அதன்படியே தேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசராக – திவ்ய மங்கள விக்ரக வடிவில் பூமிக்கடியில் எழுந்தருளினார். இந்நிலையில், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் இப்பகுதிக்கு வந்தபோது, இங்கே ஒரு வைணவ ஆலயம் அமைக்க வேண்டும் என்று எண்ணினார். அதற்காக தன்னுடன் வந்திருந்த வேத பண்டிதர்களுடன் ஆலோசனை செய்தார். பூமி பூஜை செய்து முதலில் குளம் வெட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான நாளும் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய இரவில், ஒரு வைணவ அன்பரின் கனவில் தோன்றிய திருப்பதி ஏழு மலையான், குளம் வெட்ட நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தில் – ஈசான்ய பாகத்தில் தேவி, பூதேவியுடன் விக்ரகமாக நான் பூமிக்கடியில் உள்ளேன். பாலை ஊற்றி மண்ணைக் கரைத்து விக்ரகத்தை சேதப்படுத்தாமல் வெளியில் எடுத்து, எளிமையாக கோயில் கட்டி வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்யுங்கள். திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்னும் சம்பிரதாயத்துடன் பிரார்த்தனைத் தலமாக ஒப்பிலியப்பன் கோயிலும்; தம்பி என்ற சம்பிரதாயத்துடன் பிரார்த்தனைத் தலமாக இந்த குடவாயில் கோயிலும் பிற்காலத்தில் சிறப்பு பெறும் என்று கூறி மறைந்தார். கண்விழித்த அந்த அன்பர் ஓடிச்சென்று கிருஷ்ண தேவராயரிடம் தான் கண்ட கனவைக் கூற, அதிசயித்த மன்னன் குடம் குடமாகப் பால் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். பின்னர் சுபமுகூர்த்தத்தில் பூமிபூஜை செய்து, பொன் ஏர் பூட்டி ஈசான்ய பாக நிலத்தை உழத் தொடங்கினர். ஓரிடத்தில் ஏர் தடைப்பட்டு நின்றது. அந்த இடத்தில் குடங்களிலிருந்த பாலை ஊற்றச் சொன்னார் மன்னர். அப்படியே செய்யப்பட, அங்கே வடக்கு நோக்கி எழுந்தருளியிருந்த பெருமாளின் திருமேனியைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்து நின்றனர். பூஜை செய்து அந்த விக்ரகத்தை எடுத்து, பெருமாள் அருளியபடியே வடக்கு நோக்கிய ஆலயம் அமைத்து, திருமலையைப் போன்றே வைகானஸ ஆகமப்படி பிரதிஷ்டை செய்து வைத்தார் கிருஷ்ண தேவராயர். ஆலயப் பராமரிப்புக்கு வேண்டிய நிலங்களை நிவந்தமாகக் கொடுத்து, நித்திய பூஜைகளைச் செய்து வருவதற்கு சில குடும்பங்களை அங்கேயே குடியமர்த்தினார் கிருஷ்ண தேவராயர்.

நம்பிக்கைகள்

கடன் தொல்லைகள் நீங்க, தொழில் விருத்தியும் பொருள் சேர்க்கையும் உண்டாக, கல்வியில் சிறந்து விளங்க, இங்கு வழிபடுகின்றனர். திருமணத் தடை உள்ளவர்கள் தங்கள் ஜாதகத்தை வைத்து 12 வாரம் சனிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களும் இங்கு வந்து வழிபட விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சிறப்பு அம்சங்கள்

பூலோகத்தில் பிரளய காலம் நெருங்க ஆரம்பித்த வேளை, அச்சமடைந்த பிரம்மா மகாவிஷ்ணுவிடம் சென்று சதுர் வேதத்தையும், சிருஷ்டிக்கான வித்துக்களையும் பாதுகாத்து தரச்சொன்னார். அமிர்தம் மற்றும் மண் கலந்து செய்த குடம் ஒன்றில் சிருஷ்டிக்கான வித்துக்களை நடுவிலும், அதைச் சுற்றி சதுர்வேதங்களையும் வைத்து, அமிர்தத்தையும் அதனுடன் சேகரித்து அதன் மேல் மாவிலை, தேங்காய் வைத்து மேருமலையில் உச்சியில் வைத்து ஆராதித்து வருமாறு மகாவிஷ்ணுயோசனை கூறினார். பூலோகத்தில் பிரளயம் ஏற்பட்டு கடல்நீரால் சூழப்படும் போது அந்தக் குடமானது தென்திசை நோக்கி மிதந்து சென்று ஓரிடத்தில் நிலைபெறும். அமிர்த குடம் நிலை பெற்ற இடத்திற்குச் சென்று உமது சிருஷ்டி வேலையைத் தொடங்கலாம் என்றார் மகாவிஷ்ணு. அதன்படியே அமிர்தகுடம் சென்றடைந்த ஸ்தலம் தான் குடவாசல். அந்த குடத்தை உருட்டி வந்த நதியின் பெயர் குடமுருட்டி நதி. மகாவிஷ்ணு உத்தரவுப்படி தனது சிருஷ்டித் தொழிலை பிரம்மா மீண்டும் தொடங்கிய இடம்தான் குடவாயில். அதுவே தற்போது மருவி குடவாசல் என்றானது. கும்பகோணத்திலிருந்து குடவாசல் வரும் வழியில் குடவாசலுக்கு 1 கி.மீ. முன் குடமுருட்டி ஆறு உள்ளது. இங்கு தாயாருக்கு தனி சன்னதி இல்லாமல் எப்போதும் பெருமாளுடன் இணைந்து திருமணக்கோலக் காட்சி தருகிறார். மூலவர் ஸ்ரீநிவாசப் பெருமாள் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். வடக்கு திசைக்கு அதிபதி குபேரன். இங்கே, பரம்பொருளை வடக்கில் இருந்தபடி குபேரன் வணங்கி வழிபடுவதாகவும், அந்த குபேரனுக்கு சகல செல்வங்களையும் வாரி வழங்குவதற்காக ஸ்ரீநிவாசப்பெருமாள் வடக்கு பார்த்தபடி எழுந்தருள்வதாகவும் சொல்வர். பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று வடக்கு நோக்கிய சொர்க்கவாசல் திறக்கப்படும். அன்று பெருமாளை வழிபடுவதால் கிடைக்கும் பலனை வடக்கு நோக்கிய இத்தலத்தில் தினமும் பெறலாம். இவ்வாலயத்தில் நடைபெறும் எல்லா வழிபாடுகளும் வைபவங்களும் திருப்பதி – திருமலையில் நடப்பது போன்றே நடத்தப்படுகின்றன. திருமலையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் திருமஞ்சன தரிசனம் காண முடியாதவர்கள் இத்தலத்துக்கு வந்து கண்டு மகிழலாம். இதனால் நம் இல்லங்களில் மகாலட்சுமியின் அருளுடன் ஐஸ்வர்யம் பெருகும். பெருமாளுக்கு சனிக்கிழமை உகந்த தினமாகும். அந்த நாளில் விரதம் இருந்து இவரை வணங்கினால், பெருமாள் குபேர சம்பத்தைத் தந்தருள்வார் என்பதில் ஐயமில்லை. திருமலை பெருமாளைப்போலவே இத்தலத்துப் பெருமாளும் சர்வ அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இங்கு நடைபெறும் ஏகாந்த சேவையும் (அர்த்த சாம பூஜை) சிறப்பு வாய்ந்தது. பக்தர்கள் தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம். வியாழக் கிழமைகளில் நேத்ர தரிசனம் கண்டு மகிழலாம். ஒவ்வொரு மாதமும் பெருமாளின் திருநட்சத்திரமான திருவோணத்தில் சன்னதியில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் லட்சுமியுடன் கூடிய ஸ்ரீநிவாசர் தீப வடிவமாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அட்சய திருதியை அன்று இங்கு கருடசேவை நடைபெறுகிறது. இங்கே கோயில் கொண்டிருக்கும் யோக நரசிம்மருக்கும் (மூலவர்) லட்சுமி நரசிம்மருக்கும் (உற்சவர்) பிரதோஷ காலத்தில் தீபமேற்றி வழிபட்டால், கடன் தொல்லைகள் நீங்கும்; தொழில் விருத்தியும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். கல்விக் கடவுளானஹயக்ரீவருக்கும் இங்கு சன்னதி உண்டு. மாணவ மாணவிகள் வியாழக் கிழமைகளில் இவரை வலம் வந்து ஏலக்காய் மாலை சாற்றி அர்ச்சனை செய்தால் கல்வியில் சிறக்கலாம். இங்குள்ள ஆஞ்சனேயர் காரிய சித்திக்காக நூதன முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஐந்து வெற்றிலை, ஐந்து பாக்கு, ஐந்து பழங்களை வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயருக்கு சமர்ப்பித்து தொடர்ந்து ஐந்து வாரங்களும்; அமாவாசை நாட்களில் தொடர்ந்து ஐந்து மாதங்களும் வழிபடுபவர்களுக்கு எண்ணிய காரியங்கள் கைகூடுகின்றன. வெண்ணெய், காப்பு, வடைமாலை சாற்றி வேண்டுதலை நிறைவு செய்யலாம். ஞாயிற்றுக் கிழமை காலையில் நீராடி, வெறும் வயிற்றுடன் இங்குள்ள கருட பகவானுக்கு தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், பிள்ளைப் பேறில்லாதவர்களுக்கு பிள்ளைப் பேறு கிட்டும் என்கிறார்கள்.

திருவிழாக்கள்

புரட்டாசி பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, திருவோணம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குடவாசல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top