Tuesday Jan 07, 2025

காரைக்குடி ஸ்ரீ முத்து மாரி அம்மன் திருக்கோயில், சிவகங்கை

முகவரி :

காரைக்குடி ஸ்ரீ முத்து மாரி அம்மன் திருக்கோயில்,

காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்,

தமிழ்நாடு – 630 001,

தொலைபேசி: +91 4565 232199

இறைவி:

முத்து மாரி அம்மன்

அறிமுகம்:

தமிழ்நாடு மற்றும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து மாரி அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்குள்ள மூலவர் ஸ்ரீ முத்து மாரி அம்மன் என்று அழைக்கப்படுகிறார். காரைக்குடி நகரின் மையத்தில் இக்கோயில் உள்ளது.

புராண முக்கியத்துவம் :

செட்டிநாட்டுச் சீமையின் முக்கிய நகரான காரைக்குடி நகரின் மையப்பகுதியில் உள்ள உள்ளது முத்துமாரியம்மன் கோயில். 1956ம் ஆண்டு நவம்பர் 8ம் நாள் லலிதா என்ற 8வயது சிறுமி காரைக்குடி அருகிலுள்ள மீனாட்சிபுரத்திற்கு உடல் முழுவதும் அம்மையுடன் வந்தாள். சமயபுரத்தில் இருந்து தனியாக வந்த அந்த சிறுமியை மக்கள் பார்த்தார்கள். சிலநாளில் சிறுமியின் வாயிலிருந்து கிளம்பிய வார்த்தைகளெல்லாம் அருள்வாக்காக வெளிவந்து பல அற்புதங்களை நிகழ்த்தியது. சிலநாளில் அந்த சிறுமியின் உடல் மீதிருந்த அம்மை முத்துக்கள் போல் முளைத்தது. சிறுமி படுத்த படுக்கையானாள். பலபேர் சிறுமியை கிண்டலடித்தனர். அதை அவள் பொருட்படுத்தவில்லை.

நம்பிக்கைகள்:

இங்கு முக்கிய பிரார்த்தனையாக திருமணத்தடை, குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்திக்கின்றனர். முத்துமாரி அம்மனுக்கு, தாவிவரும் வேல்போட்டு, காவடியும் பால்குடமும், முளைப்பாரி மதுக்குடமும், தீச்சட்டி பூமிதியும், நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். அதுமட்டுமின்றி பக்தர்கள் இத்தலத்தில் தக்காளியை தங்களது காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

 ஒருநாள் தன்னை ஏளனப்படுத்திய ஒருவரை, உன் தோட்டத்தில் ஒரு கிணறு இருக்கிறது; அந்தக்கிணற்றடியில் இருக்கும் தக்காளிச்செடியில் ஒரே ஒரு தக்காளி இருக்கும். அதைப்பறித்துக் கொண்டு வா என்றாள். அவரோ! சிரித்தபடியே,என் வீட்டிலா? கிணற்றடியிலா? தக்காளிச் செடியா? எனக்கே தெரியாமல் செடியாவது, பழமாவது எனக் கிண்டலாகப் பதில் கூறினார். சிறுமியோ,நீ போய்ப் பார். தக்காளியைக் கொண்டு வா எனக் கூறினாள். அவர் தனது வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு கிணற்றடியில் திடீரென முளைத்திருந்த தக்காளிச் செடியில் ஒரே ஒரு பெரிய தக்காளிப்பழம் மட்டும் இருந்தது. அப்போது தான் அவருக்கு அந்த தெய்வச் சிறுமியின் மகிமை புரிந்தது.

உடனே தக்காளிப்பழத்தை பறித்து சிறுமியிடம் கொடுத்து அவளது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். அன்று முதல் பக்தர்கள் இத்தலத்தில் தக்காளியை தங்களது காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். ஒருநாள் அந்த தெய்வச்சிறுமி, நான் மகமாயியாக இதே இடத்தில் இருந்து அருள்பாலிப்பேன். எனக்கு கோயில் அமைத்து வழிபட்டால் நோய்நொடிகள் தீரும். மனமகிழ்ச்சி கூடும். கன்னியருக்கு மணமாகும். தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல நலன் வீடுதேடி வந்து சேரும் எனக்கூறி முக்தியடைந்தாள். அவளை முத்துமாரியாகக் கருதி மக்கள் வழிபட்டனர். 1956ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி அன்னை முத்துமாரியம்மன் கோயில் அமைந்தது.

திருவிழாக்கள்:

      மாசி மாதக் கடைசி செவ்வாய் கிழமை அம்பாளுக்கு காப்புக்கட்டி விழா துவங்கும். பங்குனி முதல் செவ்வாய் எட்டாம் நாளில் அம்பாளுக்கு பொங்கல் வைத்தல், மது முளைப்பாரி, கரகம், அக்கினிச்சட்டி எடுத்தல் சிறப்பாக நடத்தப்படும். பால்குடங்கள், பூக்குழி இறங்குதல் நடக்கின்றது. பல்லாயிரக் கணக்கானோர் நேர்த்திக்கடன் செலுத்துவர். மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், நேர்த்திக்கடன் நேர்ந்து பால்குடம் எடுப்பது சிறப்பு. திருவிழா அன்று காலை முத்தாளம்மன் கோயில் ஊரணியில் நீராடிய பக்தர்கள், அங்கிருந்து பால்குடங்களை ஏந்தி கொப்புடையம்மன் கோயில் வீதி , செக்காலை ரோடு, முத்துப்பட்டணம் வழியாக முத்துமாரியம்மன் கோயிலை அடைவார்கள். அம்மனுக்கு பால் அபிஷேகம் ஆனந்த வெள்ள அருவியாக நடக்கும். கோயிலில் கரகம், மது, முளைப்பாரி, மறுநாள் காலை 9.30 மணிக்கு கோயில் காவடி, பால்குடம், பூக்குழி இறங்குதல், மாலை முளைப்பாரி புறப்படும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து அம்மன் திருவீதி உலா, சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும்.

காலம்

500-1000ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காரைக்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

காரைக்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top