Friday Jan 10, 2025

காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில், சிவகங்கை

முகவரி :

காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில்,

காரைக்குடி நகரம்,

சிவகங்கை மாவட்டம்,

தமிழ்நாடு – 630 001

தொலைபேசி எண்: +91 -4565 2438 861, 9942823907

இறைவி:

கொப்புடை நாயகி அம்மன்

அறிமுகம்:

 கொப்புடை அம்மன் கோயில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரின் மையத்தில் அமைந்துள்ள பழமையான மற்றும் மிகவும் பிரபலமான கோயிலாகும். கொப்புடைய நாயகி அம்மன் கோயில் காரைக்குடியின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இப்பகுதி முழுவதும் காரை மரங்கள் அடர்ந்த, செழித்த வனப்பகுதியாக இருந்திருக்கிறது. ஊராக அமைப்பதற்காக இந்த காட்டை அழித்து திருத்தி, மக்கள் குடியேற வசதியாக நகர் உண்டு பண்ணினார்கள். காரை வனப்பகுதியில் ஏற்பட்ட ஊரில் மக்கள் குடியேறியதால் இப்பகுதி காரைக்குடி ஆனது. கொப்புடை அம்மன் கிழக்கு திசையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கொப்புடை நாயகி அம்மன் கோவிலில், சிதம்பரம் சிவன் கோவில் மற்றும் காரைக்குடிக்கு நிகரான, மூல விக்ரகம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் கொப்புடை நாயகி அம்மன் கோவிலில், உற்சவர் மற்றும் மூலவர் ஒருவரே.

புராண முக்கியத்துவம் :

ஒரு காலத்தில் இப்பகுதி முழுவதும் காரை மரங்கள் அடர்ந்த, செழித்த வனப்பகுதியாக இருந்திருக்கிறது. ஊராக அமைப்பதற்காக இந்த காட்டை அழித்து திருத்தி, மக்கள் குடியேற வசதியாக நகர் உண்டு பண்ணினார்கள். காரை வனப்பகுதியில் ஏற்பட்ட ஊரில் மக்கள் குடியேறியதால் இப்பகுதி காரைக்குடி ஆனது. ஊர்கள் தோறும் சிறப்பான கிராம தேவதை கதை போன்றதே இத்தலத்திற்குரிய கதையும் ஆகும். செஞ்சை காட்டுப்பகுதியில் இக்கோயிலின் உபகோயிலான காட்டம்மன் கோயில் உள்ளது. இந்த காட்டம்மனின் தங்கையே கொப்புடையம்மன்.

கொப்புடையம்மனுக்கு பிள்ளைகள் இல்லை. ஆனால் காட்டம்மனுக்கோ ஏழு பிள்ளைகள். இந்த பிள்ளைகளைப் பார்க்க கொப்புடையம்மன் வரும்போது கொழுக்கட்டை முதலான உணவுப்பண்டங்களை தானே செய்து குழந்தைகளுக்கு கொடுக்க எடுத்து வருவாள். ஆனால் காட்டம்மன் மலடியான தன் தங்கை இப்பிள்ளைகளை பார்க்க கூடாது என்று நினைத்து பிள்ளைகளை ஒளித்து வைப்பாள். இதனை அறிந்த தங்கை கொப்புடையம்மன் ஒளித்து வைத்த பிள்ளைகளை கல்லாக்கிவிட்டு பின்னர் அங்கிருந்து கோபத்தோடு காரைக்குடி வந்து தெய்வமாகிவிட்டாள் என்று இக்கோயில் குறித்து வரலாற்று கதை சொல்லப்படுகிறது.

நம்பிக்கைகள்:

கொப்புடையம்மனை வணங்கினால் எல்லாவகை நோய்களையும் தீர்த்து வைக்கிறாள். தவிர விவசாயம் செழிக்கவும், தொழில் விருத்திக்காகவும், கல்யாண வரம் வேண்டியும், குழந்தை பாக்கியத்திற்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் பலன் நிச்சயம் என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

ஆதிசங்கரர் வழிபட்ட தலம் : ஆதிசங்கரரே வந்து வழிபாடு செய்த காரைக்குடி அம்மனுக்கு கொப்புடையாள் என்று பெயர். கொப்பு என்றால் கிளை என்று பொருள். இவள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் ஜுவாலைக் கிரீடத்துடன் பஞ்சலோக உற்சவ திருமேனியாக காட்சி தருகிறாள். இதில் வலது கை அபயம் அளிக்கும் தோற்றத்துடனும், வலது மேல்கை சூலத்தை ஏந்தியபடியும் இடது மேல் கை பாசமேந்தியபடியும் இடது கீழ்கை கபாலத்தை தாங்கியும் விளங்குகிறது.

கிழக்கு பார்த்த துர்க்கை : அம்மன் ஸ்ரீ சக்கரத்தின் மீது இருப்பதால் மிகவும் சக்தி வாய்ந்தவளாக இருக்கிறாள். பொதுவாக காளி, துர்க்கை போன்ற உக்கிர தெய்வங்கள் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும். ஆனால் இங்கு அம்மன், துர்க்கை அம்சத்துடன் கிழக்கு பார்த்து வீற்றிருக்கிறாள். எனவே இவளை வணங்கினால் கல்வி, செல்வம், வீரம் என மனிதனுக்கு தேவையான மூன்றையுமே வாரி வழங்குவாள். இக்கோயிலில் மற்றுமொரு விசேஷம் என்னவென்றால், காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி அருள்பாலிக்கிறார்.

கட்டுத்தேர் : இக்கோயிலில் செவ்வாய்ப் பெருந்திருவிழா தேரோட்டம் மிகவும் விசேஷமானது. பனைமரச் சட்டங்களாலான இத்தேர் தையிலான் கொடி கொண்டு இணைத்து முறுக்கேற்றி கட்டப்படும். எட்டாம் நாள் திருவிழா காலையில் அம்மன் தேரில் ஏறி பிற்பகலில் புறப்பாடு நடக்கும். தேர் புறப்பட்டு கண்மாய் வழியாகவே சென்று மாலையில் காட்டம்மன் கோயிலில் எழுந்தருளும். 9ம் நாள் திருநாளில் அங்கிருந்து புறப்பட்டு கோயில் வந்து சேரும். தேர் வரும் பாதை கண்மாய் பகுதியாக இருப்பதாலும், சில காலம் கண்மாயில் நீர் இருந்தால் நீரில் செல்ல நேர்வதாலும் முன்னோர்கள் வயிரத்தேர் செய்யாமல் சட்டத்தேராகவே செய்துள்ளனர். கரடு முரடான பாதையில் கண்மாய்க்குள் செல்லும்போது ஏற்படும் ஆட்டத்தால் பாதிப்பேற்படாமல் இருக்க இயற்கையான தையிலான் கொடி கொண்டு சட்டங்களை இணைத்துக்கட்டுதல் நுட்பமான அறிவுத்திறனை காட்டுவதாக அமைந்துள்ளது.

திருவிழாக்கள்:

சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் முடிய 10 நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய் கிழமை வந்தால் அதில் இரண்டாவது செவ்வாய் கிழமையும், ஐந்து செவ்வாய் கிழமை வந்தால் அதில் மூன்றாவது செவ்வாய் கிழமையும் கொப்புடையம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும். சித்திரை வருடப்பிறப்பு, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஆடிச்செவ்வாய், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, பங்குனி தாராபிஷேகம் ஆகியன இக்கோயிலின் சிறப்பான திருவிழா ஆகும். வாரத்தின் ஒவ்வொரு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காரைக்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

காரைக்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top