Sunday Dec 29, 2024

ஆவணியாபுரம் அவணீஸ்ஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி :

அருள்மிகு அவணீஸ்ஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில், ஆவணியாபுரம்,

திருவண்ணாமலை மாவட்டம் – 604503.

இறைவன்:

அவணீஸ்ஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர்

இறைவி:

மங்களாம்பிகை

அறிமுகம்:

 பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகக் கருதப்படுவது திருவண்ணாமலை. இந்த ஊரில் தான் அமைந்துள்ளது சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏற்ற அந்த சிவதலம். இத்தலத்தின் கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் பெரிய ஆவுடையாரைக் கொண்டுள்ளது. அதன் மேல் மரகதத் திருமேனி அமைந்திருப்பதே இக்கோவிலில் சிறப்பாக கருதப்படுகிறது. குறிப்பாக, சிம்ம ராசிக்காரர்களுக்கு உரிய தலமாக கருதப்படும் இக்கோவிலில் வந்து வழிபடுவதன் மூலம் தொழில், வர்த்தகம், குடும்பம் என அனைத்திலும் தலைசிறந்தவராக உருவெடுக்கலாம் என்பது நம்பிக்கை. திருவண்ணாமலையில் இருந்து காஞ்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 66 கிலோ மீட்டர் அவலூர்பேட்டை, சேத்துப்பட்டு கடந்தால் இத்தலத்தை அடையலாம். வேலூர், காஞ்சிபுரம், வந்தவாசி என சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து அவணியாபுரம் செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.

புராண முக்கியத்துவம் :

                 அத்திரி முனிவர் – அனுசூயா தம்பதிகளின் புத்திரர் ஏரண்டர். அவர் காகபுஜண்டரின் சீடர். இம்முனிவர் சிவனை வேண்டி தவம் செய்வதற்கு தகுந்த இடம் தேடி அலைந்தார். ஓரிடத்தில் சிம்மம் ஒன்று அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்துடன் ஒரு மலையையும், அதை யொட்டிய வனப்பகுதியையும் கண்டார். அதுவே சரியான இடம் என்றுணர்ந்த முனிவர் அங்கேயே கடுந்தவம் புரிந்தார். முனிவரின் தவத்தில் மகிழ்ச்சியுற்ற இறைவன் அவருக்கு காட்சியளித்து அருள் புரிந்தார். அந்த இடமே முற்காலத்தில் சிம்மபுரம் என்றழைக்கப்பட்டு, தற்போது ஆவணியாபுரம் என்று அழைக்கப்படுகிறது.

ஏரண்ட முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டு, சிம்மபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் வீற்றிருந்த அந்த ஆலயம் நாளடைவில் சிதிலமடைந்து மண்ணோடு மறைந்து போனது. பிற்காலத்தில் ஆதிசங்கர பகவத்பாதர் பாரத நாடு முழுவதும் புண்ணிய யாத்திரை மேற்கொண்டபோது இப்பகுதிக்கு வந்ததாகவும், அப்போது அவருடைய கனவில் ஏரண்ட முனிவர் தோன்றி, தான் சிம்மபுரீஸ்வரரை பிரதிஷ்டை செய்த விவரத்தை உணர்த்தியதாகவும், சங்கரரும் மண்ணில் புதையுண்டு போன அந்த லிங்கத்தை கண்டெடுத்துத் தமது திருக்கரங்களாலேயே திரும்பப் பிரதிஷ்டை செய்ததாகவும் செவி வழிச் செய்தி ஒன்று கூறுகிறது. ஆதிசங்கரர் பூஜித்துத் வழிபட்ட அந்த ஈசனுக்கு அவணீஸ்வரர் என்று பெயர் சூட்டி, ஆலயம் எழுப்பி வழிபாட்டினை தொடர்ந்து வந்துள்ளனர்.

நம்பிக்கைகள்:

வியாபார விருத்தி, திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற தடைகளை நிவர்த்தி செய்யும் தலமாகவும் திகழ்கிறது.

சிறப்பு அம்சங்கள்:

கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் பெரிய ஆவுடையாரைக் கொண்டுள்ளது. ஆவுடையார் மேல் அமைந்துள்ள பாணம் மரகதத் திருமேனி என்பது சிறப்பு. தெற்கு நோக்கி அம்பாள் சன்னிதி உள்ளது. மங்களாம்பிகை என்ற திருப்பெயருடன் அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். இறைவன் சன்னிதிக்கு முன் நந்தீஸ்வரர் அழகிய வடிவத்துடன் காட்சியளிக்கிறார். மேலும் பன்னிரு கரங்களுடன் காட்சியளிக்கும் ஆறுமுகக் கடவுள் மிக அழகாக உள்ளது. இக்கடவுள் பெருமாள் அம்சம் கொண்டது. கையில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சியளிப்பது வேறு எங்கும் காணமுடியாது.    

கோயிலில் கிடைத்த கல்வெட்டு மூலம் பல்லவ மன்னர் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனுக்கு அவனிநாராயணன் என்ற சிறப்பு பெயர் உண்டு. அம்மன்னனால் இவ்வூர் அவனிநாராயணசதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் உருவாக்கப் பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கல்வெட்டுக்களிலும் இவ்வூர் நாராயணமங்கலம் என்றே காணப்படுகிறது. கி.பி. 9 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கர் கருதுகிறார்.

திருவிழாக்கள்:

பங்குனி உத்திரம், மகாசிவராத்திரி, அன்னாபிஷேகம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

காலம்

கி.பி. 9 ம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆவணியாபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top