Tuesday Dec 24, 2024

அம்பலகாரன்பட்டி ஸ்ரீ வல்லடிகாரர் கோயில், மதுரை

முகவரி :

அம்பலகாரன்பட்டி ஸ்ரீ வல்லடிகாரர் கோயில்,

அம்பலகாரன்பட்டி,

மதுரை மாவட்டம்,

தமிழ்நாடு 625106

இறைவன்:

ஸ்ரீ வல்லடிகாரர்

அறிமுகம்:

 அம்பலகாரன்பட்டி, வல்லடிகாரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், அம்பலகாரன்பட்டியில் அமைந்துள்ள கோயிலாகும். இங்குள்ள மூலவர் ஸ்ரீ வல்லடிகாரர் சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது.

புராண முக்கியத்துவம் :

 பழங்கால முறைப்படி இந்தப் பகுதியில் பல கிராமங்களை உள்ளடக்கி, நாடு என்ற கட்டமைப்பில் அதன் கட்டுமானம் சிதையாமல் இன்றளவும் காத்து வருகிறார்கள். இப்படி அறுபது கிராமங்கள் கொண்ட வெள்ளலூர் நாட்டுக்குள் தான் வல்லடிக்காரர் குடி கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் வெள்ளலூர் நாட்டுக் கிராமங்களில் அளவுக்கு அதிகமாக வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. புயலாகப் பறக்கும் குதிரையில் பறந்து வரும் மாயாவி ஒருவர்தான் இந்த வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர். ஒரு கட்டத்தில் மாயாவியின் அட்டூழியத்தைத் தாங்க முடியாத கிராம மக்கள், தங்களை வாழ வைக்கும் ஏழை காத்த அம்மனின் வாசலுக்குப் போய், மாயாவியின் அட்டூழியத்தைத் தடுத்து நிறுத்துமாறு முறையிட்டனர்.

அதற்கு மனம் இரங்கிய ஏழைகாத்த அம்மன், மாயாவியை வழிமறித்து இனிமேல், நீ இந்த மக்களைத் துன்புறுத்தக் கூடாது. இதற்குக் கட்டுப்பட்டால், எனது எல்லைக்குள் உனக்கும் ஓரிடம் உண்டு. என்னை பூஜிக்கும் இந்த மக்கள் உனக்கும் கோயில் கட்டி வழிபடுவார்கள் என்று சொன்னாராம். அம்மனின் பேச்சுக்குக் கட்டுப்பட்ட மாயாவி, அந்த இடத்திலேயே பூமிக்குள் புதைந்து போனார். அதன் பிறகு கிராம மக்கள் வழிப்பறித் தொந்தரவு இல்லால் நிம்மதியாக நாட்களைக் கடத்தினர். பிறகொரு நாளில் வயலுக்குக் கஞ்சிப்பானை எடுத்துச் சென்ற பெண் ஒருத்தி, மாயாவி புதையுண்ட இடத்தைக் கடந்துபோது கால் இடறிக் கீழே விழுந்தாள். அதனால் பானை உடைந்து, கஞ்சி கீழே கொட்டியது.

இதைப் பொருட்படுத்தாத, அந்தப் பெண் மறுநாளும் தலையில் கஞ்சிப் பானையுடன் அந்த வழியாக வந்தாள். குறிப்பிட்ட அந்த இடத்தை அடைந்தபோது அன்றும் சொல்லி வைத்தாற் போல் கால் இடறி விழுந்தாள். பானை உடைந்தது. பிறகு, இதுவே தொடர்கதை ஆனது. இதனால் கோபம் அடைந்த அவள் கணவன், மண்வெட்டியுடன் கிளம்பி, தன் மனைவியின் காலை இடறிவிடும் கல்லைப் பெயர்த்தெடுக்க முயன்றான். ஆனால், அவனால் அந்தக் கல்லை இம்மியும் அசைக்க முடியவில்லை. மட்டுமின்றி, மண்வெட்டியின் வெட்டு விழுந்த இடங்களில் இருந்தெல்லாம் ரத்தம் பீய்ச்சியடித்தது. இதைக் கண்டு அலறி, மயங்கி விழுந்தவன் படுத்த படுக்கையானான்.

இந்த நிலையைக் கண்டு, என்னவோ ஏதோவென்று பதறிய கிராம மக்கள், கோடாங்கிக்காரரைக் கூட்டி வந்து குறி கேட்டனர். ஏழைகாத்த அம்மனால் அடக்கி வைக்கப்பட்ட மாயாவி அங்கு புதையுண்டு கிடக்கிறான். இது அவனது வேலைதான். அம்மன், அவனுக்கு வாக்குக் கொடுத்தது போல நீங்கள் அவனுக்கு ஆலயம் கட்டி வழிபட வேண்டும் என்று சொன்னார் கோடாங்கி. கோடாங்கி சொன்னபடி, மாயாவி புதையுண்ட அம்பலக்காரன்பட்டி எல்லையில் அவனுக்குக் கோயில் எழுப்பிய ஊர் மக்கள், கோயில் வாசலில் மாயாவியின் குதிரை ஒன்றையும் மண்ணால் செய்து வைத்தனர். இதற்கு சேமங் குதிரை எனப் பெயர். அந்த மாயாவிதான் இப்போது வல்லடிக்காரராக நின்று ஊர் மக்களை வாழ வைக்கிறார்.

நம்பிக்கைகள்:

திருமணத் தடை நீங்கவும், குழந்தை வரம் கிடைக்கவும் வல்லடிக்காரரிடம் சீட்டு எழுதிப் போட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள். குழந்தை வரம் வேண்டுபவர்கள், வல்லடிக்காரர் தோன்றிய இடத்திலுள்ள கூகமுத்தி மரத்தில் மரத் தொட்டில்களை கட்டி வைக்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

       இங்குள்ள பூதத்தின் தோள் மீது முன்னங்கால்களைத் தூக்கி வைத்தபடி கம்பீரமாக நிற்கும் சேமங்குதிரைக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒரு முறை வல்லடிக்காரர் கோயில் பக்கமாக குதிரையில் வந்த வெள்ளைக்கார துரை ஒருவர் இந்த சேமங் குதிரையைப் பார்த்துவிட்டு, இந்தக் குதிரை புல் தின்னுமா… கனைக்குமா? என்று கேலியாகக் கேட்டார். அப்போதைய நாட்டு அம்பலக்காரரான வீரண ன் அம்பலம், இதை கேட்டுக் கொண்டு நின்றிருந்தார். அப்போதும் விடாத வெள்ளைக்கார துரை, புல் தின்னாது… கனைக்காதுனு சொன்னா, இந்தக் குதிரையை இடிச்சு தள்ளிடலாமே என்று எகத்தாளமாகப் பேசினார்.

உடனே கோயிலுக்குள் ஓடிய வீரணன் அம்பலம், வல்லடிக்காரர் சன்னதியில் நின்று கண்ணீர் மல்க வேண்டினார். அப்போது கோயிலின் ஈசானிய மூலையில் கவுளி குரல் கொடுத்தது. அதை வல்லடிக்காரரின் உத்தரவாக எடுத்துக் கொண்ட அம்பலம், துள்ளிக் குதித்து வெளியே ஓடி வந்து ஒரு கூடை நிறையப் புல்லைக் கொண்டு வரச் சொல்லி, அதை குதிரைக்கு எதிரே வைத்தார். அந்தப் புல் அப்படியே இருக்க… துரையின் கண்களுக்கு மட்டும் குதிரை, புல் தின்பது போல் காட்சியளித்தது. அதைப் பார்த்த துரை திகைத்துப் போனார். மட்டுமின்றி சேமங்குதிரை அப்போது கணீரென்று கனைக்கவும் செய்தது. அதைக் கேட்டு மிரண்டு துரையின் குதிரை, பிடரி தெறிக்க ஓடத் தொடங்கியது. ஓடும்போது கோயிலுக்குப் பக்கத்திலுள்ள கண்மாய்க கரையில் கால் இடறிக் கீழே விழுந்தது. அதனால் குதிரை மேல் இருந்த துரையும் கீழே விழுந்தார். அதன் பிறகு குதிரையும் துரையும் எழுந்திருக்கவே இல்லை. துரையை பலி வாங்கிய அந்தக் கண்மாய் வெள்ளைக்காரன் கட்டிய கண்மாய். இப்போது அது வெள்ளக் கண்மாய் என்று வழங்கப்படுகிறது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு வல்லடிக்காரருடன் அவரது சேமங்குதிரையையும் பயபக்தியுடன் வழிபட ஆரம்பித்தனர்.

திருவிழாக்கள்:

மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அம்பலகாரன்பட்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top