Friday Dec 27, 2024

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம்- 603 301. காஞ்சிபுரம் மாவட்டம். போன் +91- 44 – 2752 3019, 98423 – 09534.

இறைவன்

இறைவன்: ஆட்சீஸ்வரர், இறைவி: உமையாம்பிகை

அறிமுகம்

அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மூலவர் ஆட்சீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியாக காட்சியளிக்கிறார். இத்தலத்தில் சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளன. இரண்டு சந்நிதிகள் இத்திருத்தலத்தில் உள்ளன.கண்ணுவ முனிவர், கௌதம முனிவர் வழிபட்ட திருத்தலம். இங்கு இடம்பெற்ற பல்வேறு தரப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டின் தொண்டை மண்டலப் பிரதேசத்தில் 6 ஆம் 7 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இப்பாத்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இத்தொண்டை மண்டலப் பிரதேசம் சங்க காலத்தில் பல்லவர்களின் அரசியல் செல்வாக்கு தழைத்தோங்கிய பிரதேசமாகக் காணப்படுகின்றது. திருச்சி-சென்னை அதிவேக பாதையில் 79 ஆவது கிலோமீற்றர் தொலைவில் அச்சிறுபாக்கம் அமைந்துள்ளது. திருச்சி-சென்னை உடனான பகையிரதப் பாதையில் அச்சிறுபாக்கமே தலைமையகமாகும்.

புராண முக்கியத்துவம்

பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்வன்மாலி ஆகிய திரிபுர (மூன்று) அசுரர்கள் சேர்ந்துகொண்டு தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தனர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். தேவர்களுக்கு இரங்கிய சிவன், வானுலகு மற்றும் பாதாள உலகை இணைத்து தேராக்கி அதில் ஏறி அசுரர்களை அழிக்கச் சென்றார். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு அல்லது மனதில் நினைத்துவிட்டோதான் செல்ல வேண்டும் என்பது நியதி. சிவனுக்கும் இந்த நியதி பொருந்தும். ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களோ சிவனே நம்முடன் இருக்கும்போது வேறென்ன துணை வேண்டும்? என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர். கோபம் கொண்ட விநாயகர், தேரின் அச்சை முறித்து சிவனை செல்லவிடாமல் தடுத்து விட்டார். தேர் அங்கேயே நின்றது. இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார். தந்தை சொல்கேட்ட விநாயகர் தேர் அச்சை சரியாக்கினார். பின் சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமென்பதால் இத்தலம் “அச்சு இறு பாகம்’ என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் “அச்சிறுப்பாக்கம்’ என்றானது. சிவன் “அட்சீஸ்வரர்’ என்றும், “ஆட்சிபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

நம்பிக்கைகள்

ஆட்சிபுரீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமைத் திறன், பதவி உயர்வு கிடைக்கும் என்பதும், சுவாமி அட்சரம் எனும் எழுத்தின் வடிவமாக இருப்பதால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பதும் நம்பிக்கை. இங்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதில் கலந்துகொண்டால் தோஷங்கள், ஜென்ம வினைகள், தொழில் தடைகள், மனக்குழப்பங்கள் நீங்கும் என நம்புகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

கண்ணுவ முனிவர், கவுதம முனிவர் இங்கு வழிபட்டுள்ளனர். விலகிய கோபுரம்: பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்று கொண்டிருந்தபோது இத்தலத்தின் அருகே அவனது தேர் அச்சு முறிந்தது. பணியாளர்கள் சக்கரத்தை சரிசெய்து கொண்டிருந்த போது தங்க நிறமான உடும்பு ஒன்று சென்றதைக் கண்ட மன்னன், அதனை பிடிக்கச் சென்றான். உடும்போ, ஒரு சரக்கொன்றை மரத்தினுள் புகுந்து கொண்டது. காவலர்கள் மரத்தை வெட்டியபோது, ரத்தம் வெளிப்பட்டது. உடும்பு வெட்டுப் பட்டதாக நினைத்த மன்னன் மரத்தின் அடியில் தோண்டிப்பார்த்தான். எவ்வளவோ தேடியும் உடும்பு மட்டும் அகப்படவில்லை. அன்றிரவில் மன்னனுக்கு காட்சி தந்த சிவன், உடும்பு மூலமாக தான் திருவிளையாடல் புரிந்ததை வெளிக்காட்டி இவ்விடத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதை உணர்த்தினார். அவருக்கு இங்கேயே கோயில் கட்ட விருப்பம் கொண்டான் மன்னன். அப்போது அங்கு “திரிநேத்ரதாரி’ எனும் மூன்று கண்களை உடைய முனிவர் ஒருவர் வந்தார். தீவிர சிவபக்தரான அவரைப் பற்றி அறிந்து கொண்ட மன்னன் இத்தலத்தில் சிவாலயம் கட்டித்தரும்படி கூறிவிட்டு தனது யாத்திரையை தொடர்ந்தான். நெடுநாட்கள் கழித்து மன்னன் திரும்பி வந்தபோது கோயில் மத்தியில் நந்தி, கொடி மரத்துடன் ஆட்சிபுரீஸ்வரருக்கு ஒரு கருவறையும், அவருக்கு வலது பின்புற பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் நேரே உமை ஆட்சீஸ்வரருக்கு ஒரு மூலஸ்தானமுமாக கட்டி வைத்திருந்தார். (இக்கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் பார்வதியுடன், சிவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார்). புரியாத மன்னன் காரணம் கேட்டான். “”உமை ஆட்சி செய்த ஈஸ்வரனே, உடும்பு வடிவாக்கி என்னையும் ஆட்சி செய்தார். எனவே, உங்களுக்கு காட்சி தந்த “உமை ஆட்சீஸ்வரருக்கு’ பிரதான வாயில் கொண்டு ஒரு கருவறையும், “எமை ஆட்சி செய்த ஈஸ்வரருக்கு’ பிரதான கருவறையுமாக வைத்து கோயில் கட்டினேன்” என்றார் திரிநேத்ரதாரி. மன்னனும் ஏற்றுக்கொண்டான். சுயம்பு லிங்கமாக இருக்கும் எமையாட்சீஸ்வரரே இங்கு பிரதானம். திருவிழாக்களும் இவருக்கே நடக்கிறது. ராஜகோபுரத்தில் இருந்து கொடிமரமும், நந்தியும் விலகியே இருக்கிறது. பிரகாரத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடியீஸ்வரர் சன்னதியில் சிவனை வணங்கிய கோலத்தில் திரிநேத்ரதாரி இருக்கிறார். இம்மரத்தில் சித்திரை மாத திருவிழாவின் போது மட்டும் பூக்கள் மலர்வது சிறப்பு. அச்சு முறித்த விநாயகர்: சிவனின் தேர் அச்சை முறித்த விநாயகர் “அச்சுமுறி விநாயகராக’ கோயிலுக்கு வெளியே தனிச்சன்னதியில் மேற்கு திசையை பார்த்து அமர்ந்திருக்கிறார். அருணகிரிநாதர் இவ்விநாயகரை தரிசித்து விட்டு “”அச்சிறு பொடி செய்த” என்று இவரது சிறப்புக்களை பாடித்தான் திருப்புகழை துவங்கியுள்ளார். புதிய செயல்கள் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக்கொண்டால் அச்செயல் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், பவுர்ணமியில் விசேஷ பூஜைகள் நடக்கிறது.

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அச்சிறுபாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top