Tuesday Oct 08, 2024

பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர் – 609 203. பாண்டூர் போஸ்ட் வழி- நீடூர், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91 4364 250 758, 250 755

இறைவன்

இறைவன்: ஆபத்சகாயேசுவரர் இறைவி: பிருகன் நாயகி

அறிமுகம்

திருஅன்னியூர் – பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. சூரியன், வருணன், அக்கினி தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).சங்ககாலத்தில் அன்னி. அன்னி மிஞிலி ஆகிய பெருமக்கள் வாழ்ந்துவந்த ஊர் இது. இவர்களது பெயரால் அமைந்த ஊர் இது. இத்தலம் தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில்அமைந்துள்ள 22ஆவது சிவத்தலமாகும். இத்தலத்திலுள்ள இறைவன் ஆபத்சகாயேஸ்ரர், இறைவி பெரிய நாயகியம்மை.

புராண முக்கியத்துவம்

பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன், தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்கள், அசுரனிடமிருந்து தங்களை காத்தருளும்படி சிவனை வேண்டச் சென்றனர். அவர் யோகத்தில் இருந்ததால் மன்மதனின் உதவியால் அவரது யோகத்தை களைத்தனர். கோபம் கொண்ட சிவன், மன்மதனை எரித்து விட்டார். மனம் கலங்கிய ரதிதேவி, சிவனிடம் தன் கணவனை மீட்டுத் தரும்படி வேண்டினாள். அவர் தகுந்த காலத்தில் மன்மதன் உயிர்பெற்று அவளுடன் சேர்வான் என்றார். கணவன் விரைவில் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக இத்தலத்தில் சிவனை எண்ணி தவமிருந்து வழிபட்டாள். மன்மதன் மீண்டும் உயிர்பெற்ற பிறகு, இங்கு ரதியுடன் சேர்ந்து வழிபட்டான். இருவருக்கும் காட்சி தந்த சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.

நம்பிக்கைகள்

பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க, மனக்குறைகள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

இரட்டை தெட்சிணாமூர்த்தி: இத்தலத்தில் சுவாமி அக்னியின் வடிவில் இருப்பதாக ஐதீகம். எனவே, இவருக்கு அக்னிபுரீஸ்வரர் என்றும் பெயர் உண்டு. முன்னோர்களுக்கு ஆத்மசாந்தி பூஜை செய்பவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. கார்த்திகை மாதத்தில் சுவாமியை, ரதி வழிபட்ட வைபவமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. அம்பாள் பெரியநாயகிக்கு தனி சன்னதி இருக்கிறது. ஆடிப்பூரம், ஆவணி மூலம் நட்சத்திரத்தன்று திருமணத்தடை உள்ள பெண்கள், அம்பாளுக்கு வளையல் கட்டி பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். இதனால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அருகருகே இரண்டு தெட்சிணாமூர்த்தி சன்னதி இருக்கிறது. இதில் மேதா தெட்சிணாமூர்த்திக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது காலுக்கு கீழே நந்தியும் இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. புதிதாக பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பவர்கள், இவ்விரு தெட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்கிறார்கள்.

திருவிழாக்கள்

மகாசிவராத்திரி, வைகாசிவிசாகம், திருக்கார்த்திகை.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பொன்னூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top