Wednesday Jul 24, 2024

திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு திருப்பயற்றுநாதர்/ முக்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பயத்தங்குடி – 610 101 நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4366 – 272 423, 98658 44677

இறைவன்

இறைவன்: திருப்பயற்றுநாதர் இறைவி: காவியங்கன்னி

அறிமுகம்

திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில் (திருப்பயற்றூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 78ஆவது சிவத்தலமாகும். இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு வாயில் வழியே உட்சென்றால் நந்தி, பலிபீடம் இருப்பதைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் தண்டபாணி சந்நிதி வடபுறம் தனியே உள்ளது. வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் சித்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவ மகரிஷி, வள்ளி தெய்வானையுடன் முருகர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மகாலட்சுமி, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், வீரமாகாளி, பைரவர், சூரியன், சந்திரன், சோமாஸ்கந்தர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கார்த்திகைச் சோமவார நாட்களில் சுவாமிக்கு விசேஷ ஆராதனைகள் செய்யப்படுகின்றன. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் வலக்கை அபயமும், இடக்கையில் ருத்ராக்ஷ மாலை, மற்றொரு வலக்கையில் தாமரை, இடக்கையைத் தொடையில் ஊன்றியவாறு, நான்கு கரங்களுடன் காட்சி தருகின்றாள். அம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் மிகவும் விசேஷமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

புராண முக்கியத்துவம்

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் சிறந்து விளங்கியது. அரபு நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டு மிளகு மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அந்நாளில் வணிகர் ஒருவர், மிளகு மூட்டைகளை ஏற்றுமதி செய்வதற்காக இவ்வூர் வழியாக வண்டியில் ஏற்றிவந்தார். அப்போது அருகில் சுங்கச்சாவடி இருப்பதை அறிந்தார். மிளகுக்கு சுங்க வரி விதிக்கப்படும். பயறு மூட்டைகளுக்கு சுங்கவரி இல்லை. இவர் கொண்டு செல்லும் மிளகு மூட்டைகளுக்கு சுங்கவரி கட்டினால் வணிகருக்கு வருமானம் ஏதும் கிடைக்காது. இதை உணர்ந்த வணிகர் மிகவும் வருந்தினார். சிவ பக்தராகியி இவர் இத்தல சிவபெருமானிடம் இறைவா! சுங்கவரி செலுத்தினால் எனக்கு பேரிழப்பு ஏற்படும். தங்கள் திருவருளால் இந்த மிளகு மூட்டைகளை, சுங்கச்சாவடி கடந்து போகும் வரை பயறு மூட்டைகளாக மாற்றிஅருள்புரியவேண்டும்,”என வேண்டினார். பின் அங்கேயே உறங்கினார். அடியாரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த இறைவன் மிளகு மூட்டைகளை பயறு மூட்டைகளாக மாற்றிவிட்டார். அடியவராக வணிகரின் கனவில் மிளகு பயறாக மாற்றப்பட்டதை அறிவித்தார். பொழுது விடிந்தது. கனவில் இறைவன் கூறியதை கேட்டு மகிழந்த வணிகர் நாகப்பட்டினம் நோக்கி பயணத்தை துவக்கினார். சுங்கச்சாவடி வந்தது. சுங்க அதிகாரிகள் அனைத்து மூட்டைகளையும் சோதனை செய்தனர். பயறுமூடைகளாக இருப்பதை அறிந்து வரி விதிக்காமல் அனுப்பிவிட்டனர். சுங்கச்சாவடி கடந்த பின் பயறு மூடைகள் அனைத்தும் மிளகு மூடைகளாக மாறிவிட்டன. வணிகர் மிளகு விற்ற பணத்தையெல்லாம், சிவன் சேவைக்கு செலவு செய்து இறைவனை அடைந்தார். இதனால் இத்தலம் “திருப்பயற்றூர்’ எனவும், இறைவன் “திருப்பயற்றுநாதர்’ எனவும் அழைக்கப்படுகிறார்.

நம்பிக்கைகள்

இப்பகுதி வியாபாரிகள் தங்கள் வியாபாரம் செழிக்க திருப்பயற்றுநாதரையும், கண் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மன் காவியங்கண்ணியையும் கருணா தீர்த்தத்தில் நீராடி வழிபடுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 141 வது தேவாரத்தலம் ஆகும். பைரவ மகரிஷி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளார். இங்கு துர்க்கை கிடையாது. வீரமாகாளி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். கண்திருஷ்டி மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபாடு செய்தால் பாதிப்பு விலகும் என்பது நம்பிக்கை. இத்தலவிநாயகர் சித்திபுத்தி விநாயகர் எனப்படுகிறார். கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோயில் சுற்றுப்பகுதியில் சித்திவிநாயகர், தெட்சிணாமூர்த்தி, பைரவ மகரிஷி, வள்ளி தெய்வானையுடன் முருகன், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மகாலட்சுமி, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், வீரமாகாளி, பைரவர், சூரியன், சந்திரன், சோமாஸ்கந்தர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன.

திருவிழாக்கள்

சித்ரா பவுர்ணமி, ஆடிவெள்ளி, தைவெள்ளி, மகா சிவராத்திரி.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்பயத்தங்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top