Saturday Jul 20, 2024

திருக்கோகர்ணம் மகாபலேஸ்வரர் திருக்கோயில், கர்நாடகா

முகவரி

அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம்-576 234. உத்தர் கன்னடா மாவட்டம், கர்நாடகா மாநிலம். போன்: +91- 8386 – 256 167, 257 167

இறைவன்

இறைவன்: மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர் இறைவி: கோகர்ணேஸ்வரி

அறிமுகம்

திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் துளுவ நாட்டில் உள்ள தலமாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் கைலையிலிருந்து இராவணன் கொண்டுவந்தது என்பது தொன்நம்பிக்கை. இராவணன் எடுக்க முயலும் போது அந்த சிவலிங்கம் பசுவின் காது போல குழைந்ததால் கோகர்ணம் என்ற பெயர் பெற்றது. (“கோ” = பசு, “கர்ணம்” = காது) தீர்த்தம்:கோடி தீர்த்தம், தாம்ர குண்டம் புராண பெயர்:திருக்கோகர்ணம் ஊர்:திருக்கோகர்ணம்

புராண முக்கியத்துவம்

இத்தலத்தின் வரலாறு, விபீஷணன் ரங்கநாதரை இலங்கைக்கு கொண்டு சென்றதை கணபதி தடுத்ததை ஒத்துள்ளது. கணபதியைப் பார்த்தால் பக்தர்கள் தான் தலையில் குட்டிக் கொள்வார்கள். ஆனால், இத்தலத்தில் குட்டு வாங்கிய கணபதி இருக்கிறார். இங்குள்ள பிராணலிங்கத்தின் பெருமையை கேள்விப்பட்ட ராவணன் அதை இலங்கை கொண்டு செல்வதற்காக, கயிலை மலை வந்து, சிவனை வேண்டி கடும் தவம் இருந்தான். இதையறிந்த நாரதர் சொர்க்கலோகம் சென்று இந்திரனிடம், “”ராவணன் இந்த லிங்கத்தை கொண்டு சென்றால், தேவர்கள் பலமிழப்பார்கள். அதைத் தடுக்க வேண்டும்,”என்றார். உடனே இந்திரன் தேவர்களுடன் கைலாயம் சென்றான். அதற்குள் ராவணன் தன் தவத்தால் ஈசனை மகிழ்வித்து பிராணலிங்கத்தை பெற்று இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான். ஈசன் இந்த லிங்கத்தை ராவணனிடம் கொடுக்கும் முன், “”ராவணா! நடந்து தான் இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் எந்தக்காரணத்தை கொண்டும் இதை கீழே வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது திரும்ப வராது,”என கூறி அனுப்பியிருந்தார். அவனிடமிருந்து அந்த லிங்கத்தைக் கைப்பற்ற எண்ணிய விஷ்ணு, ராவணன் சந்தியாவந்தனம் செய்வதில் காலம் தாழ்த்த மாட்டான் என்பதை அறிந்து, கணபதியை அழைத்து,””நீ பிரமச்சாரி வேடத்தில் ராவணன் இருக்குமிடத்தில் சுற்றித்திரி. ராவணன் சந்தியாவந்தன நேரம் வந்தவுடன் லிங்கத்தை கீழே வைக்காமல் உன்னிடம் கொடுப்பான்.நீ அவனிடம், லிங்கத்தின் பாரம் தாங்க முடியாத சமயத்தில் நான் மூன்று முறை உன்னை அழைப்பேன். அப்போது நீ வராவிட்டால், லிங்கத்தை கீழே வைத்து விடுவேன் என்று சொல்,” என்றார். இவ்வாறு கூறிய விஷ்ணு தன் கரத்தை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் நிறுத்தினார். அப்போது மாலை வேளை போல் சற்றே இருள் கவிய, ராவணன் சந்தியாவந்தனம் செய்வதற்காக கையிலிருந்த லிங்கத்தை அருகில் நின்று கொண்டிருந்த கணபதியிடம் கொடுத்து விட்டு சென்றான். அப்போது தேவர்கள் மூன்று உலகங்களின் பாரத்தையும் அந்த பிராண லிங்கத்தின் மீது செலுத்தினர். இந்த லிங்கத்தின் பாரம் தாங்க முடியாத கணபதி மூன்று முறை ராவணனை அழைத்தார். அப்படி அழைத்தும் ராவணன் வராத காரணத்தினால் லிங்கத்தை கீழே வைத்துவிட்டார். உடனே அந்த லிங்கம் சப்த பாதாளங்களையும் தாண்டி கீழே சென்று ஊன்றி நிலைத்து விட்டது. இதனால் தேவர்கள் மகிழ்ந்தனர். சந்தியாவந்தனம் முடித்து வந்த ராவணன், லிங்கம் கீழே வைக்கப்பட்டிருந்ததை கண்டு கணபதியின் தலையில் கோபத்தில் குட்டினான். தன் 20 கைகளாலும் லிங்கத்தை தூக்கி பார்த்தான். முடியாமல் போனதால் அங்கேயே விட்டுவிட்டு இலங்கை சென்றான்.பிறகு தேவர்கள் தேவசிற்பியை அழைத்து லிங்கத்தை சுற்றி கோயில் அமைத்தனர். அதுவே கோகர்ண சிவன் கோயிலாகும். அதன் அருகிலேயே கணபதி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சிவனை மகாபலேஸ்வரர் என்றும், நதிவடிவிலுள்ள அம்பிகையை தாமிரகவுரி என்றும் அழைக்கின்றனர். கோகர்ணம்- பெயர் விளக்கம் முன்னொரு காலத்தில் படைக்கும் தொழிலை சிறப்பாக நிறைவேற்ற சிவன் கடும் தவம் இருந்தார். அப்போது அவரது நெற்றியிலிருந்து ருத்ரன் வெளிப்பட்டார். படைக்கும் தொழிலை சிறப்பாக செய்ய ருத்ரனே தகுதி வாய்ந்தவர் என்று அவரை வேண்டினார். ருத்ரரும் ஒப்புக்கொண்டு, தான் படைக்கும் சகல ஜீவராசிகளும் நல்ல குணத்துடனும் பலத்துடனும் விளங்க பாதாள உலகம் சென்று கடும் தவம் இருந்தார். இதற்குள் 3 யுகங்கள் கழிந்து விட்டன. எனவே பிரம்மா தானே உயிர்களை படைக்க தொடங்கினார். இதையறிந்த ருத்ரர் பயங்கர கோபத்துடன் பாதாள உலகிலிருந்து பிரம்மனிடம் வந்தார். ஆனால், அவரால் படைக்கப்பட்ட பெரிய உலகம் குறுக்கிட்டது. அவர் அதை நொறுக்கத் தொடங்கினார். பயந்து போன பூமாதேவி, “”இறைவா! தாங்கள் தயவு செய்து கோபம் குறைந்து, தங்கள் உருவை சிறிதாக்கி கொண்டு என் காதின் வழியாக மெதுவாக வாருங்கள்,”என கெஞ்சினாள். இவளது வேண்டுதலை ஏற்ற ருத்ரன் கட்டை விரல் அளவில் உடலை சிறிதாக்கி கொண்டு அவள் காதின் வழியே வெளியே வந்து, “”பூமாதேவியே! நான் பாதாள உலகில் இருந்து வெளியே வருவதற்கு நீ கருப்பையாக இருந்ததனால் இந்த இடம் “ருத்ரயோனி’ என்றும், அதற்கு காரணமான நீ “கோ’ (பசு) என்றும், உனது காது “கர்ணம்’ என்றும் வழங்கப்படும் என்றார். அன்றிலிருந்து இத்தலம் “கோகர்ணம்’ ஆனது. எனவே, இத்தலத்தை “காது துவார தலம்’ என்றும் அழைக்கிறார்கள்.

நம்பிக்கைகள்

சிவபார்வதி திருமணத்தலமாதலால், திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் ஓடும் நதியில் நீராடி சிவனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கம் மரணமடைந்தவர்களுக்காக இங்கு தினமும் பிசாசு மோட்சம் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கர்ண சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 267 வது தேவாரத்தலம் ஆகும்.கோயிலமைப்பு, தமிழ்நாட்டு அமைப்பினின்றும் வேறானது. தெற்கிலும், மேற்கிலும் வாயில்கள் உள்ளன.மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. தெற்கு வாயில் வழியாக உட்சென்றால் கோபுர வாயில் கடந்ததும் விசாலமான வெளிப் பிராகாரம். உள்வாயில் தாண்டியதும் ரிஷபதேவர் தரிசனம். அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கியது. பக்கத்தில் தாம்ரகுண்டமென்னும் தடாகம் உள்ளது. உட்புறம் மகாபலேஸ்வரர். கருவறை பக்கத்தில் தத்தாத்ரேயர், ஆதிகோகர்ணேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

திருவிழாக்கள்

மாசி சிவராத்திரியில் 9 நாள் திருவிழா. முதல் நாள் தேர்த் திருவிழாவும் 8ம் நாள் பிரமோற்ஸவமும் நடைபெறுகிறது. கார்த்திகை பவுர்ணமியில் திரிபுரதகன விழா.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

ஸ்ரீ ராமச்சந்திரபுரா மடம்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருக்கோகர்ணம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

உடுப்பி

அருகிலுள்ள விமான நிலையம்

மங்களூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top