Tuesday Jul 23, 2024

உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருச்சி

முகவரி

அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருக்கற்குடி, உய்யக்கொண்டான் மலை-620 102 திருச்சி மாவட்டம். போன் +91-4364 223 207 , 94431 50332, 94436 50493

இறைவன்

இறைவன்: உச்சிநாதர், இறைவி: அஞ்சனாட்சி

அறிமுகம்

உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இது தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரதும் பாடல் பெற்ற சிறப்புப் பெற்றது. நந்திவர்ம பல்லவனால் அமைக்கப்பட்ட இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள நான்காவது சிவத்தலமாகும்.

புராண முக்கியத்துவம்

மிருகண்டு முனிவர் நெடுங்காலம் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தார். தனக்கு ஒரு மகன் வேண்டும் என தவம் இருந்தார். சிவபெருமான் அவரிடம், “”உனக்கு ஞானமற்ற அங்கஹீனம் உள்ள, ஆனால் நூறு வயது வாழும் மகன் வேண்டுமா? அல்லது அழகும், அறிவும் மிக்க, 16 வயது வரையே ஜீவித்திருக்கும் மகன் வேண்டுமா என கேட்டார். குழம்பிப்போன மிருகண்டு தனக்கு ஞானபுத்திரனே வேண்டும் என்றார். மகனும் பிறந்தான். அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டனர். பதினாறு வயதும் வந்தது. எமன் துரத்தினான். மார்க்கண்டேயர் பல க்ஷேத்திரங்களுக்கும் சென்று ஓடி ஒளிந்தார். இறுதியாக உய்யக்கொண்டான் திருமலைக்கு வந்தார். தன்னை எமன் துரத்துவதை சொன்னார். இறைவன் அந்தச்சிறுவனை பாதுகாத்தார். இதன்பிறகே அவர் திருவேற்காடு தலத்தில் சிரஞ்சீவி என்னும் பட்டம் தந்தார்.

நம்பிக்கைகள்

பிரயாணங்களின் போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்க ஜேஷ்ட தேவி வழிபாடு செய்யப்படுகிறது. இத்தலத்தை வழிபடுவோர் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் (ஒரு வகையான தோஷம்) நீங்க இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

இக்கோயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. இவளை “மூதேவி’ என்பார்கள். லட்சுமியின் சகோதரி இவள். இவளைப் பார்த்தாலே காரியங்கள் நடக்காது என்பார்கள். இது தவறான கருத்தாகும் என சொல்லப்படுகிறது. இந்த தேவியை தரிசித்தால் விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். மேரு (மலை) வைத்து பூஜை செய்பவர்கள் ஒன்பது படிக்கட்டுகளை அமைப்பார்கள். இந்த மலைகளை நவாபரணம் என சொல்வதுண்டு. இதில் இரண்டாவது ஆபரணமாக ஜேஷ்டாதேவி விளங்குகிறாள். திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு. அதுபோல, உய்யக்கொண்டான் திருமலையிலும் ஜேஷ்டாதேவி இருக்கிறாள். ஆனால் இரு புறமும் இரண்டு குழந்தைகளை வைத்திருக்கிறாள். ஒரு குழந்தை நந்திகேஸ்வரர் குழந்தை வடிவத்தில் இருப்பதுபோல உள்ளது. இவரை “மாடன்’ என்கிறார்கள். மாடு போன்ற வடிவத்தில் உள்ளதால் மாடன் என்ற பெயர் ஏற்பட்டதாம். மறுபுறத்தில் அழகிய பெண் இருக்கிறாள். இவளை வாக்தேவதை (சேடி) என்கிறார்கள். ஆதிபராசக்தியே இங்கு ஜேஷ்டாதேவியாக இருக்கிறாள். அவள் தனது சேடியான (பணிப்பெண்) வாக்தேவதையையும் அழைத்து வந்திருக்கிறாள். மாறுபட்ட இந்த அம்பிகையை வழிபட்டு வாழ்வில் நிகழ இருக்கும் விபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம். சிறப்பம்சம்: 50 அடி உயர மலையில் இந்த கோயில் இருக்கிறது. கோயிலைச் சுற்றி பொன்னொளி ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோண கிணறு, நாற்கோண கிணறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. தேவி அஞ்சனாட்சி என வழங்கப்பெறுகிறாள். இவள் மை தீட்டப்பெற்ற கண்களைக் கொண்டவள். மற்றொரு அம்பிகை பாலாம்பிகை எனப்படுகிறாள். இரண்டு அம்மன்களுக்கும் தனித்தனி வழிபாடு நடக்கிறது. மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சுவாமி “உஜ்ஜீவநாதர்’ எனப்படுகிறார். எண்ணிய விருப்பங்களை ஈடேற்றுவதால் “கற்பகநாதர்’ என்றும் இவருக்கு பெயர் உண்டு. சுவாமி சுயம்பு வடிவில் உள்ளார். 50 அடி உயர மலையில் பாறையில் மிக அருமையாக கட்டப்பட்டுள்ளது இந்த கோயில் இராவணனுடைய சகோதரர்களில் ஒருவன் கரன். இவன் இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்றான். இக்கோயிலுக்கு மூன்று வாசல்கள் உள்ளன. இரண்டு தெற்கு நோக்கியும், ஒன்று கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது. விசேஷ நடராஜர் மார்க்கண்டேயரின் உயிரைக் காப்பதாக வரம் கொடுத்ததால் சிவனுக்கு, “உயிர்கொண்டார்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவரே ஜீவன்களுக்கு ஆதாரமாக இருப்பதால் உஜ்ஜீவனநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆடி பவுர்ணமியன்று இரவில், மார்க்கண்டேயருக்கு சிவன் காட்சி தந்ததாக ஐதீகம். எனவே, அந்நாளில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். தவிர, பவுர்ணமிதோறும் இரவில் சிவனுக்கு தேன், பாலபிஷேகம் நடக்கும். சாரமா முனிவரால் பட்டம் சூட்டப்பட்ட மன்னன் இங்கு சிவதரிசனம் செய்தபோது, சிவன் அவனுக்கு ஆனந்த தாண்டவ தரிசனம் காட்டியருளினார். பாதத்தை மட்டுமே பிடிமானமாகக் கொண்டு, இந்த நடராஜர் சிலை விசேஷமாக வடிக்கப்பட்டுள்ளது. சூரியபூஜை விசேஷம் மலைக்கோயில் ஓம் வடிவில் அமைந்துள்ளது. உஜ்ஜீவநாதர், அஞ்சனாட்சி அம்பாள் இருவரும் மேற்கு நேக்கியுள்ளனர். இவர்களது சன்னதிக்கு நடுவே கிழக்கு நோக்கி பாலாம்பிகை இருக்கிறாள். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் (ஒரு வகையான தோஷம்) நீங்க இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். தை மாதத்தில் ஓர்நாள் மாலையில் சிவலிங்கம், அஞ்சனாட்சி அம்பிகை மீது சூரிய ஒளி விழும். அந்நாளில் இருந்து 90 நாட்களுக்கு ஒருமுறை என, வருடத்தில் 4 முறை இங்கு சூரியபூஜை நடக்கும். பிரகாரத்தில் இடர்காத்தவர் என்ற பெயரில் சிவலிங்கம் இருக்கிறது. திருநாவுக்கரசர் தேவாரத்தில் இத்தலத்து சிவனை, இப்பெயரில் குறிப்பிட்டுள்ளார். இங்குள்ள சுப்ரமணியரிடம் அருணகிரிநாதர், “திருப்புகழ் பாடும் அறிவைக்கொடு!’ என வேண்டிப் பாடியுள்ளார். வைகாசி விசாகத்தன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று சுவாமி புறப்பாடும் உண்டு. கந்தசஷ்டியின்போது தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன், ஊருக்குள் சென்று ஐந்து கோயில் சுவாமிகள் சந்திக்கும் வைபவம் நடக்கும். சக்தி கணபதி, நால்வர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, நவக்கிரகம், பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர். ஞானவாவி தீர்த்தம் பிரகாரத்தில் உள்ளது. இக்கோயிலில் இருந்து கி.மீ., தூரத்தில் அருணகிரிநாதர் திருப்புகழ் பாட முருகன் அருள் பெற்ற வயலூர் கோயில் உள்ளது.

திருவிழாக்கள்

பங்குனியில் பிரம்மோற்ஸவம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, தைப்பூசம்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருச்சி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top