Monday Dec 09, 2024

அருள்மிகு காளிகாட் காளி திருக்கோயில், மேற்கு வங்காளம்

முகவரி

அருள்மிகு காளிகாட் காளி திருக்கோயில், காளிகாட், கொல்கத்தா, மேற்கு வங்காளம் – 700 026.

இறைவன்

சக்தி: காளி, பைரவர்: நகுலேஷ்வரர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: வலது கால் விரல்

அறிமுகம்

காளிகாட் காளி கோயில் இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவின் காளிகாட் என்னும் பகுதியில் அமைந்துள்ள கோயில். இத்தலம் ஒரு சக்தி பீடமாக கருதப்படுகிறது. இக்கோவில் ஆதி கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆதி கங்கை ஹுக்ளி நதியின் பழைய தடம். இக்கோவிலின் காளி தெய்வத்தை அனைத்து மதப்பிரிவினரும் வழிபடுகின்றனர். தற்போதைய கோயிலமைப்பு 200 ஆண்டு பழைமையானதாக இருந்த போதிலும் இத்தலத்தைப் பற்றிய குறிப்பு 15 மற்றும் 17 ஆம் நூற்றாண்டு இலக்கியப்பதிவுகளிலும் உள்ளது. பழைமையான முதலாம் குமாரகுப்தா காலத்திய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது, இத்திருத்தலத்தின் பழைமைக்குச் சான்றாக உள்ளது. சிறு குடிசையாக இருந்த திருக்கோயில் சிறு கோயிலாக மானசிங் அரசரால் 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் கட்டப்பட்டது. பின்னர் சபர்ணா ராய் சௌத்ரி குடும்பத்தினர் முன்னிற்று தற்போதைய கோயிலமைப்பை 1806 ஆம் ஆண்டில் கட்டினர். கல்கத்தாவில் பல காளி கோவில்கள் அமைந்திருந்தாலும் இந்த காளி தேவியின் ஆலயம் மட்டுமே கல்கத்தா காளி கோவில் என்றே அழைக்கப்படுகிறது. எட்டுத் திக்குகளிலும் புகழ் பெற்ற இவ்வாலயத்தை பல நூல்களில் காலேஸ்வரம் என்று குறிப்பிட்டுள்ளனர். இக்கோவில் ஒரு சக்தி பீடமாகவும் விளங்குகிறது. அன்னையின் உடற்கூறுகளில் வலது காலின் விரல்கள் (கட்டை விரல் தவிர்த்து) அல்லது பாதம் விழுந்ததாகக் கருதப்படும் காளிகாட் என்னும் இத்தலம், சக்தி பீடமாக விளங்குகிறது. காளி காட்டில் அமைந்துள்ள மகாசக்தி பீட நாயகியை காளி என்றும், க்ஷேத்ரபாலகரை நகுலேஷ்வரர் என்றும் அழைக்கின்றனர்.

புராண முக்கியத்துவம்

இக்கோவிலின் தல வரலாறு இன்னொரு விதமாகவும் உள்ளது. காளிகாட் காளி கோயிலைச் சுற்றி முன்பு காடு மண்டி வளர்ந்திருந்ததாம். அந்தக் காலத்தில் இந்த தேவியை ஆத்மராம் என்கிற பக்தன் ஆழ்ந்த பக்தியோடு ஆராதித்து வந்தான். மாலை நேரத்தில் பாகீரதிக் கரையில் அவன் ஜெபம் செய்யும்போது கண்களைப் பறிக்கும் ஒளிக்கதிர் ஒன்று திடீரென்று தோன்றியது. அதைக் கண்டு வியந்தான் ஆத்மராம். ஒளி வந்த இடத்தை மறுநாள் காலையில் வந்து பார்த்த போது, தெளிவான தண்ணீருக்கு அடியில் மனிதக் கால் விரல்கள் போல் வடிக்கப்பட்ட சிறு கல் ஒன்றைக் கண்டான். அத்துடன் அவன் அன்றிரவு ஒரு கனவும் கண்டான். அந்தக் கல்லில் தென்பட்ட விரல்கள் தாட்சாயிணியின் வலக்கால் விரல்கள் என்று உணர்ந்து, அதை எடுத்து வந்து தேவியின் பாதங்களை ஒட்டி வைத்து அதற்கும் பூஜை செய்யத் தொடங்கினான். அந்தப் புனித இடமே காளி தேவியின் மகா சக்தி பீடமாயிற்று. கல் கிடந்த இடத்தின் அருகிலேயே ஆத்மராமுக்கு ஒரு சிவலிங்கமும் கிடைத்தது. சிவலிங்கத்துக்கு நகுலேஷ்வர பைரவர் என்று நாமம் சூட்டி காளி சிலையின் அருகிலேயே அமைத்து வழிபட்டான். விரல்கள் போல் காணப்பட்ட அந்தக் கல், பின்னர் ஒரு வெள்ளிப் பேழைக்குள் வைக்கப்பட்டு இப்போதைய காளி சிலையின் அடியில் வடகிழக்கு மூலையில் வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின.

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி

காலம்

1000 to 2000

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காளிகாட்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஹௌரா

அருகிலுள்ள விமான நிலையம்

கொல்கத்தா

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top