வேடப்பர் (முருகர்) கோவில், விருத்தாசலம்
முகவரி :
அருள்மிகு வேடப்பர் (முருகர்) கோவில்,
பெண்ணாடம் ரோடு,
விருத்தாசலம். 606 001
போன்: +91 8508017757
இறைவன்:
வேடப்பர் (முருகர்)
இறைவி:
வள்ளி, தெய்வானை
அறிமுகம்:
விருத்தாசலத்தில் இருந்து பெண்ணாடம் செல்லும் பாதையில் 3 கி.மீ தொலைவில் வேடப்பர் கோயில் அமைந்துள்ளது. தல விருட்சமாக உகா மரமும், தீர்த்தமாக மணிமுத்தாறும் விளங்குகின்றன. இது ஒரு வித்தியாசமான கோயில், பொதுவாக முருகன் கோவிலில் சிவன், பார்வதி சன்னதிகள் இருக்கும். ஆனால் இங்கு சுதையாலான குதிரைச்சிலைகள், யானைச் சிலைகளும், கருப்பசாமி, முனியப்பன் போன்ற கிராம தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன. கருங்கற்களால் கட்டப்பட்ட கருவறையில் உயர்ந்த பீடத்தின் மீது வேடப்பர் வள்ளி, தெய்வானை சமேதரராய் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். கருவறை மீது ஏகக்கலசம் தாங்கிய ஒரு நிலை விமானம் முகனின் பல்வேறு சுதைச் சிற்பங்களைத் தாங்கிய வண்ணம் காட்சியளிக்கிறது.
புராண முக்கியத்துவம் :
ஒவ்வொரு தலமாக இறைவனை வழிபட்டு வந்த சுந்தரமூர்த்தி நாயனார், விருத்தாசலம் வந்தபோது, ‘இதுவோ முதுகுன்றம்! பழமலை! அம்மையோ முதுமையான விருத்தாம்பிகை; இறைவனோ பழமலைநாதர்! ஊரும் கிழம்; இறைவன் இறைவியும் கிழம்! இவர்களைப் பாடாவிட்டால்தான் என்ன’ என்று பாடாமல் சென்றுவிட்டார்.
தன் தந்தையை அலட்சியப்படுத்திய சுந்தரருக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணினார் முருகப் பெருமான். அதற்காக ‘பழமலைநாதர்’ திருக்கோயிலின் எல்லையை சுந்தரர் தாண்டக்கூடாது என்று தெற்கே ‘வேடப்பர்’, மேற்கே ‘கொளஞ்சியப்பர்’, வடக்கே ‘வெண்மலையப்பர்’, கிழக்கே ‘கரும்பாயிரப்பர்’ என்று நான்கு திசைகளிலும் காவலாக நின்றார் முருகன். அப்போது, மேற்கு திசையை நோக்கி வந்த சுந்தரருக்கு எதிரே வேடுவ குமரனாகத் தோன்றினார். சுந்தரரை வழிமறித்து பொன்னையும் பொருளையும் பறித்துக்கொண்டு, “பழமலைநாதரைப் பாடிவிட்டு உன் பொருட்களைப் பெற்றுக்கொள்” என்று கூறிவிட்டார். தன் பிழைக்கு வருந்திய சுந்தரர் அதன் பின் பழமலைநாதரைப் போற்றிப் பாடினார்.
நம்பிக்கைகள்:
களவு போன பொருளை மீட்க பிராது எழுதி கட்டும் முறை நடைமுறையில் உள்ளது.
திருவிழாக்கள்:
செவ்வாய், சஷ்டி, கிருத்திகை ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடபெறுகின்றன. வைகாசி விசாகம், தைப்பூசம், கந்தசஷ்டி போன்ற வருட உற்சவங்களும் கொண்டாடப்படுகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி