Wednesday Dec 18, 2024

வெங்கட்டாம்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோயில், கடலூர்

முகவரி

வெங்கட்டாம்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோயில், வெங்கட்டாம்பேட்டை, குறிஞ்சிப்பாடி, மாவட்டம் – 607302.

இறைவன்

இறைவன்: வேணுகோபால சுவாமி இறைவி: ஆண்டாள்

அறிமுகம்

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அற்புதமான வைணவத் தலங்களில் வெங்கட்டாம்பேட்டை திருத்தலமும் ஒன்று. கடலூர் மாவட்டத்தில் உள்ளது குறிஞ்சிப்பாடி. இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தன்னை வழிபட்டு தவமியற்றிய சடமர்ஷனர் என்ற முனிவருக்கு, திருமால் காட்சி அருளிய இடமே வெங்கடாம்பேட்டை. இந்த வரலாற்றை பின்னணியாகக் கொண்டு கட்டப்பட்டதே இங்குள்ள கோவில். நின்ற நிலை, அமர்ந்த நிலை மற்றும் கிடந்த நிலை என மூன்று திருக்கோலங்களில் பெருமாள் காட்சி தரும் ஆலயங்களில், வெங்கட்டாம்பேட்டை ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலும் ஒன்று! கி.பி. 1464-ல் செஞ்சியை ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் என்னும் பாளையக்காரர் தனது பாசத்துக்குரிய சகோதரி வேங்கடம்மாளின் பெயரில் நிர்மாணித்த ஊர் இதுவாகும். அவரது பெயரால் ‘வெங்கடம்மாள்பேட்டை’ என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் ‘வெங்கடாம்பேட்டை’ என மருவியது.

புராண முக்கியத்துவம்

கிரேதா யுகம், திரேதா யுகம், துவார யுகம், கலியுகம் என யுகங்கள் நான்கு. இவற்றில் மூன்று யுகங்களோடு தொடர்புடையதாக விளங்குகிறது வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி ஆலயம். இவ்வாலயத்தில் திரேதா யுகத்தை நினைவுபடுத்தும் வகையில் அனந்தசயன ராமர் உள்ளார். துவாபர யுகத்தின் அடிப்படையில் வேணுகோபால சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். திரேதா யுகத்தில்தான் ராமபிரான் இலங்கை சென்று சீதாதேவியை மீட்டு வந்தார். அவ்வாறு திரும்பும்போது ராமேஸ்வரத்தில் சிவபூஜை முடித்துவிட்டு சித்ரகூடம் (சிதம்பரம்) வழியாக வந்துகொண்டிருந்தார். சீதாதேவியை இராவணன் கடத்திச் சென்றது முதலே ராமபிரானுக்கு ஓய்வு உறக்கமில்லை. அதன் முடிவில் இராவணனுடைய கடும்போரும் செய்தார். இவையெல்லாம் அவரிடம் களைப்பை ஏற்படுத்தியிருந்த காரணத்தால் சற்று இளைப்பாற எண்ணி தரையில் படுக்கச் சென்றார். இதைக் கண்டு மனம் பதைத்த லட்சுமணன் தன் முந்தைய வடிவான ஆதிசேஷன் உருவமெடுத்து, உடலை மெத்தையாகவும் சிரசை குடையாகவும் விரித்துப் படுக்க, அதன்மீது ராமபிரான் மேற்கு-கிழக்காக பள்ளி கொண்டார். சீதாதேவி அருகே இருந்து அவர் கால்களைப் பிடித்துவிட்டாள். அதே நேரத்தில் அயோத்தியிலிருந்த பரதன், குறித்த நேரத்தில் அண்ணன் வந்து சேரவில்லையே என மனம் வெதும்பி, தீ வளர்த்து அதற்குள் இறங்கி உயிர்விட ஆயத்தமானான். களைப்பால் சற்று கண்ணயர்ந்தபோதும் தன் உள்ளுணர்வால் இதையறிந்த ராமபிரான் உடனே கண்விழித்து, தான் சீதையுடன் வந்து கொண்டிருக்கும் செய்தியை பரதனிடம் காற்றினும் கடிது சென்று தெரிவிக்குமாறு அனுமனிடம் ஆணையிட்டார். அவ்வாறே சென்று அனுமனும் பரதனின் உயிரைக் காத்தான. இங்குள்ள ஸ்ரீராமனின் சயனக் கோலம். ஆதிசேஷன்மீது ஸ்ரீராமன் படுத்திருக்க, கால்பகுதியில் சீதை இருக்க, புறப்பட யத்தனிக்கும் தோரணையில் அனுமனும் உள்ளது அற்புதமான காட்சி, இந்த சந்நிதி வேணுகோபால சுவாமி சந்நிதிக்கு வடக்கே அமைந்துள்ளது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் இவ்வாலயம் அமைக்க திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவிலுக்கு மேற்கேயுள்ள ஒரு பகுதியில் அனந்தசயன ராமர் உள்ளிட்ட சிற்பங்கள் செய்யப்பட்டன. செய்து முடித்து அவற்றை ஆலயத்துக்குக் கொண்டுவரும் வழியில் ராமரின் விக்ரகம் மட்டும் பூமியில் புதைந்துவிட்டதாம். எனவே திருப்பணிகள் அப்படியே நின்றுவிட்டன. பல ஆண்டுகள் கடந்தன. சிற்றரசன் ஒருவன் தன் ஆட்சிக்குட்பட்ட இந்தப் பகுதியை தன் மகள் வேங்கடம் மாவுக்கு சீதனமாக வழங்கினான். அந்த இளவரசி நின்றுபோன கோவில் திருப்பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவேற்றி முடித்தாள். மூலவராக வேணுகோபால சுவாமி, தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். இதே காலகட்டத்தில் ஊருக்கு மேற்கே விவசாயி ஒருவர் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது கலப்பை எதிலோ சிக்க, காளைகள் அப்படியே நின்றுவிட்டன. உடனே அந்த விவசாயி மண்ணை அகழ்ந்து பார்க்க, அங்கே சயன ராமர் விக்ரகம் இருப்பதைக் கண்டார். பின்னர் ஊர் மக்கள் ஒத்துழைப்போடு சயன ராமர் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டார். கலியுக வரலாற்றின்படி ஐயப்பன் அவதாரத்தின் பொருட்டு மோகினி வடிவம் எடுத்தார் மகாவிஷ்ணு. அதைக் குறிக்கும் வண்ணம் இவ்வாலயத்துக்கு அருகே, பாச்சாபாளையம் பெருமாள் கோவிலில் மோகினி அவதார விக்ரகம் உள்ளது. இங்குள்ள ராமபிரான் சயனக் கோலத்திருவடிவத்தை வேறெங்கும் காண்பது அரிது.

நம்பிக்கைகள்

இவரை தரிசிக்கும்போது மனநிம்மதி உண்டாவதை நாம் அனுபவப்பூர்வமாக உணரலாம். பிரச்சினைகளில் சிக்கித் தவிப்போர், மன சஞ்சலத்தில் உள்ளோர் இவரை தரிசித்தால், மனதில் ஒரு தெளிவு தோன்றி புத்துணர்ச்சி உண்டாகும். காரணம், இலங்கைப் போரை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்து ராமபிரான் ஓய்வெடுத்த இடம் இது சீதையை மீட்டுவிட்டோம் இராவணன் என்ற அரக்கனை அழித்துவிட்டோம்; இனி அனைவருக்கும் நிம்மதி என்ற எண்ணத்தோடு ராமபிரான் துயில் மேற்கொண்டதால், ராமபிரானுக்கு ஏற்பட்ட அந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் அவரை தரிசிப்போருக்கும் கிட்டுகிறது.

சிறப்பு அம்சங்கள்

பெருமானைத் தான் நின்ற கோலம், அமர்ந்த கோலம், கிடந்த கோலம் என்று கண்டுள்ளோம். ராமபிரானின் சயன கோலத்தை மிக அரிதாகவே தரிசிக்கலாம். அந்த அற்புத தரிசனம் இங்கே கிடைப்பது நாம் பெற்ற பேறு. இங்கு வந்து வழிபடுவோருக்கு எல்லா பாக்கியங்களும் கிட்டும்.

திருவிழாக்கள்

இராவநவமி, வைகுண்ட ஏகாதசி

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வெங்கட்டாம்பேட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

கடலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top