விஷ்ணுபுரம் தர்மபுரீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
விஷ்ணுபுரம் தர்மபுரீஸ்வரர் சிவன்கோயில்,
விஷ்ணுபுரம், குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 609501.
இறைவன்:
தர்மபுரீஸ்வரர்
இறைவி:
தர்மாம்பிகை
அறிமுகம்:
விஷ்ணுபுரம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது திருவீழிமிழலையில் இருந்து தென்மேற்கில் 2 கிமீ தூரத்தில் காவிரியின் கிளை நதியான அரசலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள செழிப்பான ஊர். திருவீழிமிழலையில் நடந்த இறைவன் திருமணத்திற்கு வந்த விஷ்ணு இங்கு தங்கியதாக ஐதீகம். அதனால் விஷ்ணுபுரம் எனப்படுகிறது. இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன, கைலாசநாதர் கோயில் மற்றும் தர்மபுரீஸ்வரர் கோயில். கிழக்கு மேற்கில் நீண்டிருக்கும் அக்ரஹார தெருவின் மத்தியில் கைலாசநாதர் கோயில், தெருவின் கிழக்குப் பகுதியில் பெரிய குளத்தின் கரையில் அமைந்திருக்கிறது தர்மபுரீஸ்வரர் சிவாலயம்.
இங்கு இறைவன் பெயர் தர்மபுரீஸ்வரர் இறைவி தர்மாம்பிகை, இங்கு விநாயகர் பெயரும் தர்ம விநாயகர் என்பதே. கிழக்கு நோக்கிய கோயில் முகப்பில் சுதையுடன் கூடிய நுழைவாயில் உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கியும், அவரின் எதிரில் உள்ள மண்டபத்தில் நந்தி பலி பீடம் உள்ளது, ஒரு புறம் நாகர்கள் உள்ளனர். இறைவி தெற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார். இறைவன் கருவறை வாயிலில் தர்ம விநாயகர் உள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன் உள்ளார். பிரகாரத்தில் தென்மேற்கில் விநாயகர் சிற்றாலயம் ஒன்றும் அருகில் சுப்பிரமணியர் சிற்றாலயம் ஒன்றும் உள்ளது. சண்டேசர் சன்னதியும் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
வட இந்திய மன்னன் ஒருவனின் மகன் சுவேதகேது. அவனது ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள், 16 வயதில் அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று கூறினார்கள். அரசன் முனிவர்களிடம் ஆலோசனை செய்ய, அவர்கள் திருவீழிமிழலை தலத்திற்குச் சென்று சிவபூஜை செய்தால் காலமிருத்யுவை வெல்லலாம் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள். சுவேதகேது அதன்படி திருவீழிமிழலை தலம் வந்து இறைவனை தினமும் ஆராதித்து வந்தான். நாட்கள் சென்றன. சுவேதகேதுவின் உயிர் பிரிய வேண்டிய நேரம் வந்தது. உயிரை எடுக்க வந்த எமதர்மரைப் பார்த்த சுவேதகேது சிவலிங்கத்தை இறுகப் பற்றிக் கொண்டான்.
எமதர்மன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தையும் சேர்த்து சுற்றிக் கொள்ள, சுவேதகேதுவோடு, பெருமானையும் இழுத்தான் எமதர்மன். அப்போது சிவலிங்கத்திலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டு, எமனைக் காலால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததுபோல், சுவேதகேதுவைக் காப்பாற்றினார். பின் தேவர்கள் வேண்டுகோளின் பேரில் எமனை உயிர்ப்பித்து, இனி தன் பக்தர்கள் சிவபூஜையில் ஈடுபட்டிருக்கும் போது உயிரைப் பறிக்க வரக்கூடாது என்று ஆணையிட்டார். சிவலிங்கத்தின் மேல் பாசக்கயிறு விழ்ந்த பாவத்தை போக்க எமதர்மன் வழிபட்ட தலம் தான் இந்த விஷ்ணுபுரம். எமன் வழிபட்டதால் எம தர்மபுரீஸ்வரர் என வழங்கப்பட்டது, தற்போது தர்மபுரீஸ்வரர் என்றே வழங்கப்படுகிறது.
நம்பிக்கைகள்:
இக்கோயிலில் சிறப்பான ஒரு பிரார்த்தனையாக போகி அன்று இரவு இக்கோயிலில் தங்கி காலையில் எதிரில் உள்ள குளத்தில் நீராடி தைப்பொங்கலன்று இறைவனை தரிசித்தால் வேண்டுதல் யாவும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இங்கு பிறப்போர்க்கும் வழிபடுவோர்க்கும் துர்மரணம், மரண அவஸ்தை கிடையாது,
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
விஷ்ணுபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி