விளாங்காடு ஆதிமூல நாராயணப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி :
விளாங்காடு ஆதிமூல நாராயணப்பெருமாள் திருக்கோயில்,
விளாங்காடு கிராமம்,
அச்சரப்பாக்கம் அருகில்,
மதுராந்தகம் வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம் – 603201.
போன்: +91 9840344082
இறைவன்:
ஆதிமூல நாராயணப்பெருமாள்
இறைவி:
ஸ்ரீதேவி, பூதேவி
அறிமுகம்:
தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுராந்தகம் வட்டத்தில், அச்சரப்பாக்கம் அருகில் உள்ள விளாங்காடு என்னும் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீதேவி பூதேவி சமதே ஆதிமூல நாராயணப்பெருமாள் அருள்பாலிக்கிறார். இத்தல பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உற்சவரும், மூலவரும் அச்சில் வார்த்ததுபோல இருப்பது பெருமை. கஜேந்திர மோஷஸ்தலமும், ஸ்ரீ நாரதமுனி, ஸ்ரீ பிருகு மகரிஷிக்கு நவக்கிரக மண்டல ரகசியங்களை போதித்தருளிய திருத்தலமுமாதலால் நவக்ரஹதோஷம் மற்றும் மூதாதையர் (பித்ருக்கள்) தோஷம் மற்றும் சாப நிவ்ருத்தி ஸ்தலமாகும். கருடன் மற்றும் ஆதிசேஷனின் கடாக்ஷம் உள்ளதால் ஸர்ப்பதோஷ நிவ்ருத்தி ஸ்தலமுமாகும்.
புராண முக்கியத்துவம் :
கஜேந்திரனுக்கு பெருமாள் மோட்ஷம் கொடுத்த இடம் சுபித்யாரண்ய ஷேத்திரம். இங்குதான் நாரதர், பிருகு முனிவர் ஆகியோருக்கு கோள்களின் கோச்சாரம், அவற்றின் சாதக பாதகங்கள், மனித வாழ்க்கையில் நவக்கிரஹங்கள் எப்படி சம்பந்தப்பட்டு உள்ளன என்பதைப் பற்றி பெருமாள் உபதேசித்ததாக புராணம் கூறுகின்றன. பூகர்ப மகரிஷி அங்கு பெருமாள் திருமேனியை சிலா ரூபமாக வடித்து, அருகில் தனது பெயரில் திருக்குளத்தை ஏற்படுத்தினார். அக்குளம் பூகர்ப தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. அங்கு பூமாதேவி தினமும் பெருமாளை ஆராதித்து வந்தார். கோள்களின் சுழற்சியும், அதன் பலனையும் மற்றவர்களுக்கு எடுத்து சொல்லும் ஜோதிடர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து பெருமாளை தரிசித்து, அருள்வாக்கு கூறினர். அத்தலம் காலப்போக்கில் விளாங்காடு என அழைக்கப்பட்டது.
போரால் அழிந்த கோவில்: விஜயநகர அரசர்கள் காலம் வரை ஆதிமூல நராயணப் பெருமாள் கோவிலில் ஐந்து கால பூஜைகளும், பஞ்ச பருவ விழாக்களும், பிரம்மோற்சவமும் விமர்சையாக நடந்ததாக வரலாறு கூறுகின்றன. விஜயநகர ராஜ குருவாக வியாசராஜரும், ராகவேந்திரரும் ஆதிமூல நாராயணப் பெருமாளை தரிசித்து சென்றதாக செவி வழித் தகவல்கள் கூறுகின்றன. புதுச்சேரி பிரஞ்ச் படைகளும், ஆங்கிலேய, ஆற்காடு நவாப் படைகளும் இடையே ஏற்பட்ட பூசலில் விளாங்காடு கடுமையாக பாதிக்கப்பட்டது. யுத்த காலத்தில் பூஜைகள் நிறுத்தப்பட்டன. ஆதிநாராயணர் கோவிலும், அதனை சுற்றி இருந்த குடியிருப்புகளும் பழுதுபட்டன. காலப்போக்கில் கோவில்முழுவதும் சிதலமடைந்தது. ஒரு கட்டத்தில் அங்கு கோவில் இருந்த சுவடே இல்லாமல் போனது. பின்னாளில், அங்கு மாட்டு தொழுவம் உருவானது.
கிரஹதோஷ நிவர்த்தி தலம்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விளாங்காடு பகுதியில் அய்யப்ப பக்தர்கள் பூஜை செய்துக் கொண்டு சென்றனர். அதில், ஒரு பக்தருக்கு ஆவேசம் வந்து, மாட்டுத் தொழுவம் இருந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலைகளை அடையாளம் காட்டினார். அது, ஆதிமூல நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் சிலை என்பது தெரியவந்தது. ஊர் மக்கள் சேர்ந்து அங்கு ஒரு குடில் அமைத்து, சிலைகளை வழிபடத் துவங்கினர். அடுத்து, சிறிய கோவில் எழுப்பப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அக்கோவிலில் நடை திறக்கும் பல நாட்களில் ஆதிமூல நாராயணர் மூலவர் மேல் பாம்பு ஒன்று படை எடுத்து நிற்கும் காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. பெருமாளை ஆதிசேஷன் இன்றும் வழிபட்டு வருவதாக கருதுகின்றனர். இக்கோவில் உற்சவர் சிலை சுவாமிமலையில் இருந்து தருவிக்கப்பட்டது. இக்கோவிலில் அருள் பாலிக்கும் ஆதிமூல நாராயணப் பெருமாள் கிரஹ தோஷங்களை நிவர்த்திப்பவர் என பக்தர்கள் நம்புகின்றனர். அதனால் தான், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஜோதிடர்கள் அதிகளவில் வந்து வழிபாடு நடத்துகின்றனர்.
நம்பிக்கைகள்:
கிரஹதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்கின்றனர். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
இத்தலம் குறித்தது பிரபல ஜோதிட வல்லுனர்களிடம் பிரசன்னம் பார்த்த போது, இத்தலத்தை வராஹேக்ஷத்திரம் என்றும், புராண காலத்தில் மகாலட்சுமி பூஜித்துள்ளார் என்றும் தெரியவருகிறது. அதன் காரணமாக இன்றும் கூட இங்குள்ள தீர்த்த குளம் முழுவதும் தாமரை மலர்கள் மட்டுமே மலர்வது சிறப்பு. அத்துடன், இத்தலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தலம் மிகச்சிறந்த பரிகாரத்தலமென்றும் கூறுகின்றனர்.
திருவிழாக்கள்:
கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
விளாங்காடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை