வாயலூர் திருப்புலிஸ்வரர் மற்றும் வைகுண்டபெருமாள் திருக்கோயில், செங்கல்பட்டு
முகவரி
வாயலூர் திருப்புலிஸ்வரர் மற்றும் வைகுண்டபெருமாள் திருக்கோயில், வாயலூர், செங்கல்பட்டு மாவட்டம் – 603 102.
இறைவன்
இறைவன்: திருப்புலிஸ்வரர் மற்றும் வைகுண்டபெருமாள் இறைவி : பார்வதி தேவி, ஸ்ரீதேவி, பூதேவி
அறிமுகம்
தொண்டை மண்டலத்தில் , மழைக்காலத்தில் பொழியும் சொற்ப நீரை கடலில் கொண்டு சேர்க்கும் பாலாற்றின் முகத்துவாரத்தில் அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் வாயலூர் . இந்த ஊரின் மத்தியில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட அழகிய திருப்புலிஸ்வரர் மற்றும் வைகுண்ட பெருமாள் கற்றளிகள் பழைய வரலாற்றுச் சுவடுகளை தன்னகத்தே தாங்கிக் இன்றளவும் வசீகரிக்கும் அழகிய வகையில் அமைந்துள்ளது. பெரிய ஆலமரத்தின் நிழலின் வழியாக போடப்பட்ட பாதையில் சென்று கிழக்கு நோக்கி அமைக்கப்பட்ட முகப்பு வாசல் வழியாக உள்ளே சென்று இந்த ஒருங்கே அமைந்த இரண்டு கற்றளிகளையும் காணலாம். பிரம்ம சத்திரியர்கள் என்று நம்பப்படும் பல்லவப் பேரரசர்கள் பிரம்மா முதல் முதலாம் பரமேஸ்வரவர்மன் வரை உள்ள மன்னர்களின் பெயர்களும் சிதைந்த நிலையிலுள்ளது. இக்கோவில் தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளது.
புராண முக்கியத்துவம்
உள்ளே நுழைந்ததும் வலது புறத்தில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய விஜயநகர காலத்தை ஞாபகப்படுத்துகின்ற பதினாறுகால் கால் விழா மண்டபம் இத்திருக்கோயிலை அலங்கரிக்கின்றது. உள்ளே நுழைந்து நேரே சென்றால் ஸ்ரீதேவி பூதேவியுடன் வைகுண்ட பெருமாள் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார். சண்டிகேஸ்வரர், சாஸ்தா, ஆடு முகத்துடன் தட்ஷன் வீரபத்திரரை வணங்கும் சிலை, தவ்வைத்தாய் , மஹாலஷ்மி தேவி இன்னும் சிதிலமடைந்த சில சிலைகள் உள்ளது. அதற்கு அடுத்துள்ள மூலஸ்தானத்தில் வைகுண்ட பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்பாலிக்கின்றார். இந்த திருக்கோவிலுக்கு பக்கத்தில் பலி பீடம், மகா நந்தி எதிரில் அமைந்திருக்க , திருப்புலிஸ்வரர் திருக்கோயிலும் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் உள்ள மகா மண்டபத்தில் இரண்டு அழகிய துவார பாலகர்கள் காவல் புரிய உள்ளே கஜபிருஷ்ட அமைப்பில் அமைந்துள்ள கருவறையில் திருப்புலிஸ்வரர் லிங்க வடிவாகவும், அதற்குப் பின்னால் பல்லவர்களின் கோயில்களின் கலையம்சமாக விளங்கும் சோமாஸ்கந்தர் ( அமர்ந்த நிலையில் சிவன் மற்றும் பார்வதி அவர்கள் மடியில் குழந்தை முருகன் ) அழகான சிலை ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது . இங்குள்ள மகா மண்டபத்தில் சற்று வித்தியாசமான முறையில் சூரியன் இடதுபுறத்திலும் பைரவர் வலதுபுறத்திலும் நின்று சிவனை வழங்கி நிற்கின்றார்கள். தூங்கானைமாடம் வடிவில் அமைந்துள்ள இந்த கோயிலின் கோஷ்ட தெய்வங்களான நர்த்தன விநாயகர்,தக்ஷிணாமூர்த்தி தெற்கு திசையிலும், விஷ்ணு மூர்த்தி மேற்கு திசையிலும் , நான்முகன் மற்றும் அழகிய விஷ்ணு துர்கா வடக்கு திசையிலும் நின்று அருள் பாலிக்கின்றனர். இந்த இரட்டை கற்றளிக்குப் பின்புறத்தில் தெற்கிலிருந்து வடக்காக சீரான இடைவெளியில் முறையே மகா கணபதி , அங்கையற்கண்ணி மற்றும் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் கடவுளுக்கு தனித்தனியாக அழகிய சிறு கற்றளிகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு காணப்படுகின்ற ஒவ்வொரு சிலைகளிலும் சிற்பக் கலைஞர்களின் கைவண்ணம் மிளிர்கிறது என்றாலும் , வடமேற்கு மூலையில் அமைந்துள்ள வள்ளி மற்றும் தெய்வயானையுடன் மயில் மீது அமர்ந்த நிலையில் பன்னிரண்டு கைகளும், ஆறு முகங்களும் கொண்ட முருகனின் சிரித்த முகத்துடன் கூடிய தத்துரூபமான சிலை சிற்பியின் திறனுக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக அமைகின்றது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வாயலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கல்ப்பாக்கம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை