Saturday Jan 18, 2025

வல்லம் யோக நரசிம்மப்பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி :

அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில்,

வல்லம், தஞ்சாவூர் மாவட்டம் – 613403.

போன்: +91 9943732491, 9790069745, 9976436133

இறைவன்:

மாதவ யோக நரசிம்மப்பெருமாள்

இறைவி:

கமலவள்ளி

அறிமுகம்:

 வல்லம் மாதவ யோக நரசிம்மப்பெருமாள் கோயில் தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பகுதியில் உள்ள வைணவக்கோயிலாகும். தஞ்சாவூர்திருச்சி நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து கிழக்கே உள்ள வல்லம் என்ற இடத்தில் உள்ளது. மாதவப் பெருமாளுக்கும், யோகநரசிம்மருக்கும் இப்பகுதியை ஆண்ட வல்லப சோழன் என்பவரால் கோயில் தோற்றுவிக்கப்பட்டது. அவன் பெயராலேயே இத்தலம் வல்லபபுரி, வல்லம் என வழங்கப்பட்டது. கி.பி. 1118 முதல் 1136 வரை சோழ நாட்டை ஆண்ட மன்னன் விக்கிரம சோழனால் எடுத்து கட்டப்பட்டது. இத்தலத்தின் பெயர் கல்வெட்டுகளில் விக்கிரம சோழ விண்ணகரம் என வழங்கப்படுகிறது.

புராண முக்கியத்துவம் :

                 சப்த ரிஷிகளுள் ஒருவரான கவுதமர் வனப்பகுதி ஒன்றில் ஆசிரமம் அமைத்து, தனது மனைவியுடன் நியதிகள் தவறாமல் பூஜைகள் செய்தபடி வாழ்ந்து வந்தார். தமது தவ வலிமையால் அவர் உருவாக்கிய கிணறு, கோடையிலும் நீர் நிறைந்து இருந்தது. அதில் நீரெடுக்க வந்த சிலர் கிணறை மாசுபடுத்தவே, அவர்களை கடிந்துகொண்டார் கவுதமர். அதனால் அவர் மீது பொறாமை கொண்ட அவர்கள், ஆசிரமத்தை விட்டு அவரை விரட்ட வழி தேடினர். அதற்காக விசேஷ பூஜைகள் செய்து விநாயகரை வேண்டினர். வயதான இரு பசுக்களின் வடிவில் அங்கே தோன்றினார் கணபதி. ஆசிரமத்தின் அருகே கவுதமர் பயிரிட்டு இருந்த வயலில் புகுந்து மேய்ந்தன பசுக்கள். அதைக் கவுதமர், ஒரு தருப்பையை எடுத்துத் ஏவினார். உடனடியாக பசுக்களின் உடலில் இருந்து விநாயகர் வெளியேறி மறைய, இரு பசுக்களும் இறந்தவைபோல் விழுந்தன. அதைக் கண்ட பொறாமைக்காரர்கள், கவுதமர் பசுவதை செய்துவிட்டதாக குற்றம் சாட்டினர். விரட்டினர். பாவம் தொலைவதற்காக சிவனை நோக்கி தவமிருந்தார், கவுதமர் காட்சி தந்த ஈசன், அவர் பிழைஏதும் செய்யவில்லை என்று சொல்லி, ஆசி தந்து அருளினார்.

அதோடு, விரைவில் அவரது ஆசிரமத்திற்கு நரசிம்மப் பெருமாள் எழுந்தருள்வார் என்றும் கூறி மறைந்தார். மனநிறைவோடு ஆசிரமம் திரும்பிய கவுதமர், தமது ஆசிரமத்தில் இருந்த மாதவப் பெருமாளை மனமுருகி வழிபட்டார். இந்த மாதவப் பெருமாள் கவுதமருக்கு இந்திரனால் அளிக்கப்பட்டவர். ஒரு சமயம் தேவராஜனான இந்திரன், வலன் எனும் அசுரனை முசுகுந்தச் சக்ரவர்த்தியின் உதவியுடன் வென்றான். துணை இருந்த முசுகுந்தருக்கு அன்பளிப்பாக தியாகேசர் வடிவைத் தருவதாகச் சொன்னவன், அதனை தர மனமின்றி ஏமாற்ற நினைத்தான். அதனால் அவனைப் பாவம் சூழ்ந்தது. பாவம் நீங்கிட சிவனைத் துதித்தான். அவரோ திருமாலை வழிபடச் சொன்னார். அதன்படி பூஜிக்க உகந்த தலத்தைத் தேடியவன், கவுதமர் இருந்த வனத்தில் ஓரிடத்தில் எழுந்தருளி இருந்த எம்பெருமானைக் கண்டு ஆராதித்தான். பாவ விமோசனம் பெற்றபின்னர், தான் ஆராதித்த விக்ரகத்தினை கவுதமரிடம் அளித்துத்ச் சென்றான். தேவர்கோன் வழிபட்டதால், தேவாதிராஜன் என்றே அழைக்கப்பட்டார் பெருமாள். மாதவம் புரிந்தோர்க்கும் கிட்டாத பாக்யம் தனக்குக் கிட்டியதால் மகிழ்ந்த கவுதமர், தமது ஆசிரமத்தில் அப்பெருமாளை வைத்துத் மாதவப் பெருமாள் என்ற திருநாமத்துடன் விசேஷமாக வழிபட்டு வந்தார். சிவபெருமான், நரசிம்மர் வருவார் என்று சொன்ன வார்த்தைகள் பலிக்கும் காலமும் வந்தது. நரசிம்ம அவதாரம் செய்த திருமால், இரண்யனை அழித்த பின்னர், அசுரர்களின் பிடியில் இருந்து அகிலத்தை காத்திட வலம் வந்தார். அப்போது வல்லாசுரன் என்னும் அரக்கன், மக்களைத் துன்புறுத்துத் வதை அறிந்து, அவன் தங்கியிருந்த கோட்டையை அழித்துத், அவனையும் மாய்த்துத் விட்டு அங்கே இருந்த தீர்த்தத்தில் நீராடினார். பின்னர் அங்கே இருந்த கவுதமரின் ஆசிரமத்திற்கு வந்து யோகத்தில் அமர்ந்தார். பெருமாளையும் நரசிம்மரையும் தரிசித்த தேவர்கள், முனிவர்கள் என யாவரும் அத்தலத்திலேயே தங்கி அருள வேண்ட, அப்படியே வரமளித்தனர். நரசிம்மரால் சம்ஹரிக்கப்பட்ட போது, வல்லாசுரன் கேட்ட வரத்தின்படி அவன் பெயரால் வல்லம் என வழங்கப்பட்ட தலம், இன்றும் அதே பெயருடன் விளங்குகிறது. இது புராணம் கூறும் செய்தி.

நம்பிக்கைகள்:

பக்தர்கள், கடன் தொல்லை நீங்கவும், காற்று கருப்புகளால் ஏற்பட்ட உபாதைகள் நீங்கவும் நரசிம்மரை வேண்டுவது வழக்கமாக உள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

                காலப்போக்கில் கோட்டை அழிந்து விட்டாலும் இன்றும் கோட்டை பெருமாள் கோயில், நரசிம்மர் கோயில் என்றே அழைக்கப்படும் இத்தலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் மாதவப் பெருமாள் சேவைசாதிக்க தெற்கேபார்த்த திருவடிவுடன் தரிசனம் தருகிறார் யோக நரசிம்மர். கிழக்கு பார்த்துத் அமர்ந்து அருளும் மாதவப் பெருமாள் சன்னதிக்கு முன்பாக கொடிமரமும் பலிபீடமும் இருக்கின்றன. மடைப்பள்ளி அருகே ராமபிரானின் திருவடிகள் உள்ளன. கருவறை சுவரில் மாதவப் பெருமாளை வணங்கும் வகையில் தேவேந்திரனும், கவுதம முனிவரும் உள்ளன.

மாதவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கிய நிலையில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். அமர்ந்த கோலத்தில் யோக நரசிம்மர் உள்ளார். திருச்சுற்றில் ஆழ்வார் சன்னதிகளும், ஆண்டாள் சன்னதியும் உள்ளன. கோயிலுக்குக் கிழக்கே கௌதம தீர்த்தம் உள்ளது. திருச்சுற்றில் ராகு, கேது சன்னதி, சக்கர கணபதி மற்றும் நர்த்தன கணபதி சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, ராமர், சீதை, லட்சுமணர் சன்னதி, அய்யப்பன் சன்னதி, வாகுளாதேவி தாயார் சன்னதிகளும் காணப்படுகின்றன.ஆழ்வார் சன்னதியில் தேசிகன், நம்மாழ்வார், ராமானுஜர், திருமங்கையாழ்வார் உள்ளனர்.

திருவிழாக்கள்:

சித்திரை வருடப் பிறப்பு, நரசிம்ம ஜெயந்தி, ஆடிப்பூரம், புரட்டாசி 4-ம் சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி, பொங்கல், கனுநாள், ஸ்ரீராமநவமி நாட்களில் விசேஷ ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

காலம்

1200 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வல்லம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top