வல்லநாடு திருமூலநாதர்
தாமிரபரணி கரையில் உள்ள வல்லநாடு பகுதியை, 16-ம் நூற்றாண்டில் சீமாறன் வல்லப பாண்டியன் ஆண்டு வந்தான். அதனால் அந்த பகுதியை, ‘சீமாறன் சீவல்லப வள நாடு’ என்று, அவன் பெயரிலேயே அழைத்தனர்.
ஒரு முறை வழக்கம் போல, நாட்டை சுற்றி வந்து கொண்டிருந்தான் மன்னன். ராஜன் குளத்தை சுற்றி வந்தபோது, கரு மேகங்கள் சூழ்ந்து, மழைக்கான அறிகுறியை பறைசாற்றின. மறுகணமே, வானில் மின்னல் பளிச்சிட்டு, இடியுடன் கூடிய மழை கொட்டியது. தானும், தான் வந்த குதிரை மற்றும் பரிவாரங்களும் நனையாதபடி ஒரு இடத்தில் ஒதுங்கி நின்றான், மன்னன். திடீரென்று அவனுக்கு குளக்கரையில் இருந்த சுயம்பு லிங்கத்தின் நினைவு வந்தது.
“என்னையும், என் நாட்டையும் வளப்படுத்திக் கொண்டிருக்கும் இறைவனை மறந்து விட்டேனே. அவர் தானே வளர்ந்த மேனியராய், எந்த பாதுகாப்பும் இன்றி தனித்து இருக்கிறாரே. இந்த அடை மழையால் அவருக்கு பாதிப்பு வந்து விடுமோ” என்று நினைத்த மன்னன், உடனடியாக அந்த இடத்திற்குச் சென்றான்.
அங்கு மழையில், சுயம்பு லிங்கம் கரைந்து கொண்டிருந்தது. அதைக் கண்டு பதைபதைத்து போனான் மன்னன். ஆனாலும், ‘ஒரு அரசன் நினைத்தால் ஆகாத காரியம் என்ன இருக்கிறது’ என்ற அகந்தையில், அந்த லிங்கத்தை சுற்றி தன்னுடைய பரிவாரங்களை நிறுத்தி பாதுகாத்தான்.
அவர்கள் எவ்வளோ முயற்சித்தும் லிங்கத்தை மழையில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. அருகில் இருந்து ஓலைகளை கொண்டு வந்து, சிறிய குடில் அமைத்தார்கள். ஆனால் திடீரென்று ஏற்பட்ட சூறாவளியில், அந்த குடில் இருந்த இடம் தெரியாமல் பறந்து போனது.
என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்ற மன்னன், அவனது கவுரவத்தை நிலைநாட்டும் மணி முடியை (வைர கிரீடம்) எடுத்து, சுயம்பு லிங்கத்தின் மீது வைத்தான். எந்த விந்தை.. உடனடியாக அடை மழை நின்றது. சுழன்றடித்த சூறாவளி காற்றும் நின்று போனது. மண்ணை ஆளும் மன்னனுக்கு மணி முடி தேவையா? இந்த உலகையே ஆளும் இறைவனுக்குத் தான் மணி முடி வேண்டும் என்று மன்னன் கருதியதால் அவனது அகந்தை அழிந்தது.
உடனடியாக அந்த இடத்தில் கோவில் கட்ட நினைத்தவன், மிகப் பெரிய ஆலயத்தை நிர்மாணித்தான்.
உலகிற்கு மூலமாக இருப்பதால், அந்த இறைவனுக்கு ‘திருமூலநாதர்’ என்று பெயரிட்டான். இறைவனுக்கு அருகிலேயே, இறைவியையும் பிரதிஷ்டை செய்தான். அந்த அன்னைக்கு ஆவுடையம்மாள் என்று திருநாமம் சூட்டினான். மன்னருக்கு திருமூலநாதர் தனது திருவிளையாடல் மூலம் ஞானத்தினை அளித்த காரணத்தினால், இத்தல இறைவனை ‘ஞான ஹிருதேயேஸ்வரர்’ என்றும் அழைக்கிறார்கள்.
கல்வெட்டின் படி இந்த கோவில் அமைந்த ஊர் ‘செயங்கொண்ட பாண்டிய புரம்’ என்றும், ‘செயங்கொண்ட பாண்டிய நல்லூர்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டு குறிப்புகளின் படி இது 1500 ஆண்டுகளுக்கு முந்தைய ஆலயம் என்று அறியப்படுகிறது. இந்த ஆலயம் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இத்தல இறைவனின் மீது மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் மட்டும் சூரிய ஒளி விழும்படி கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. ஆலயத்தின் பிரதான வாசல் வழியாக சூரிய ஒளி உள் நுழைந்து, கருவறையில் உள்ள மூலவரின் மீது படுவது போல் அமைந்திருக்கும் கட்டிடக் கலையை பாராட்டாமல் இருக்க முடியாது.
பிரதான சன்னிதியில் திருமூல நாதர் உள்ளார். தானே முளைத்த லிங்கம் இவர். எனவே அபிஷேகத்தில் கரைந்து விடக்கூடாது என்பதால், மேல் பகுதியில் குவளையுடன் காட்சி தருகிறார். கேட்ட வரம் தரும் இவரது மூர்த்தி சிறியதாக இருந்தாலும், கீர்த்தி பெரியது. கருவறைக்கு முன்பாக கொடிமரம் மற்றும் நந்தி உள்ளது. வலதுபுறம் சொக்கர் – மீனாட்சிக்கு தனி சன்னிதி காணப்படுகிறது. திருவாதிரை காட்சி மண்டபத்தில் தெற்கு நோக்கி உள்ளது. இந்த மண்டபத்தின் முன்னால் உள்ள தூணில் கோவிலை உருவாக்கிய அரசனும், அரசியும் சிலை வடிவில் உள்ளனர். அவர்களுக்கு அருகில் வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் உருவாக்கிய, தாமரை வடிவிலான நவக்கிரக ஸ்தூபி காணப்படுகிறது. அதன் எதிரே வசந்த மண்டம் உள்ளது.
இத்தல இறைவனை வழிபட்டால் மன நலம் குன்றியவர்கள் விரைவில் குணம் அடைவார்கள் என்று பக்தர்கள் சொல்கின்றனர். இருதய பலவீனம் உள்ளவர்களும் இந்த இறைவனை வழிபடலாம்.
நெல்லை – தூத்துக்குடி மெயின் ரோட்டில் 15 கிலோமீட்டர் தொலைவில் வல்லநாடு உள்ளது. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் கலியாவூர் சாலையில் சென்றால், திருமூலநாதர் ஆலயத்தை அடையலாம். வல்லநாட்டில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.