வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில், மதுரை
முகவரி :
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,
தெப்பக்குளம், வண்டியூர்,
மதுரை மாவட்டம் – 625 009.
போன்: +91-452 – 2311 475.
இறைவி:
மாரியம்மன்
அறிமுகம்:
வண்டியூர்மாரியம்மன்திருக்கோயில், கோயில் நகரமான மதுரையின் கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் ஆகும். இக்கோயிலுக்கு வடக்கே வைகை ஆறும், தெற்கே மாரியம்மன் தெப்பக்குளமும், மேற்கே தியாகராசர் கலைக்கல்லூரியும் அமைந்துள்ளன. பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக இங்கு அம்மன் வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய நிலையில் எருமை தலையுடன் உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் உள்ளார். மூலவராக மாரியம்மன் இருப்பதால் வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது. அரசமரத்தின் அடியில் விநாயகர் மற்றும் பேச்சியம்மன் மட்டும் இருக்கின்றனர். இரண்டு துவாரகபாலகர்கள் வாயில் நிற்க அம்மன் சன்னதியும், அதற்கு முன்புறம் அகலமான முற்றமும் கொண்டுள்ளது.
புராண முக்கியத்துவம் :
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகரினை மன்னன் கூண்பாண்டியன் ஆட்சி புரிந்து வந்தார். அப்போது மதுரையின் கிழக்கே, தற்போது கோயில் வீற்றிருக்கும் பகுதி மகிழ மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அக்காட்டினை குறும்பர் எனும் இனத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியையே அழித்துத் வந்தனர். நாளுக்கு நாள் அவர்களின் தொந்தரவு கூடுதலாகவே, ஓர் நாள் இப்பகுதிக்கு வந்த மன்னர் அவர்களின் கொட்டத்தினை அடக்கி விரட்டியடித்தார். அவர்களை விரட்டியபின் தனது வெற்றியினை ஆண்டவனுக்கு சமர்ப்பித்துத் வணங்கிட, அருகே வைகையில் கிடைத்த அம்பாளை தெற்கு கரையில் தற்போது கோயில் வீற்றுள்ள பகுதியில் வைத்துத் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
நம்பிக்கைகள்:
அம்மை நோய், தோல் நோய்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்துத் நோய்கள், தீராத வியாதிகள், மற்றும் நாள்பட்ட நோய்கள் தீர இங்கு வேண்டிக்கொள்ளப்படுகிறது. மேலும், இத்தலத்தில் வீற்றுள்ள அம்மனை வணங்கிட சகல சவுபாக்கியங்களும் பெருகி, குடும்ப பிரச்னைகளும், தொழில் பிரச்னைகளும் தீரும். பயம், திருமணத்தடை நீங்கி, குழந்தைப்பேறு கிட்டும் என நம்பப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
மதுரையின் காவல் தெய்வமாக அம்பிகை வீற்றிருக்கும் இக்கோயிலில் அம்பாள் மிகுந்த வரப்பிரசாதியாக அருளுகிறாள். இவளே ஆதிதெய்வமாகவும் வழிபடப்படுகிறாள். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த விசேஷங்கள் நடத்தினாலும், முதலில் இவளிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன்பின்பே நடத்துகிறார்கள். மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் விழா நடக்கும் முன்பு முதல் பூஜை இவளுக்கே செய்யப்படுகிறது. கோயிலுடன் சேர்ந்துள்ள இத்தெப்பம் மதுரை வட்டாரத்திலேயே மிகப்பெரிய தெப்பம் எனும் பெருமையினை உடையது. பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக இங்கு அம்மன் வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய நிலையில் எருமை தலையுடன் உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் அருள்பாலிக்கிறாள்.
தீர்த்த விசேஷம்: இத்தலத்தில் தரப்படும் தீர்த்தம் மிகவும் விசேஷமானது. அம்பிகைக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்ததை , மூலஸ்தானத்தில் பெரிய பாத்திரத்தில் எடுத்துத் வைக்கிறார்கள். கண்நோய், அம்மை போன்ற நோய் உள்ளவர்கள் இங்கு அம்பிகையை வணங்கி, தீர்த்தம் வாங்கிச் செல்கிறார்கள். இந்த தீர்த்தத்தை பருகினால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. ஒரு நாளில் மட்டும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இவ்வாறு தீர்த்தம் வாங்கிச் செல்வது சிறப்பம்சம். தோல் வியாதி உள்ளவர்கள் அம்பிகைக்கு உப்பு நேர்த்திக்கடன் செலுத்தி வேண்டிக்கொள்கிறார்கள். அம்பிகை, துர்க்கையின் அம்சம் என்பதால் இங்கு எலுமிச்சை தீபமேற்றியும் வேண்டிக்கொள்கிறார்கள்.
திருவிழாக்கள்:
தைப்பூசத்தன்று தெப்பத்திருவிழாவும், பங்குனி மாதத்தில் பத்துநாள் பிரமோற்சவத்திருநாளும், பூச்சொரிதல் திருவிழாவும், இக்கோயிலின் முக்கியத்திருவிழாக்களாக உள்ளது. தெப்பத்திருவிழாவின் போது மீனாட்சியம்மன் இங்குள்ள தெப்பத்தின் நடுவே உள்ள வசந்த மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
காலம்
1645 ஆம் ஆண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தெப்பக்குளம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை