லிங்கத்திருமேனி மீது சூரிய ஒளி ஆரியபட்டி கோவிலில் அதிசயம்
திருப்பூர் : காங்கயம் அருகே ஆரியபட்டியில் உள்ள பழம்பெருமையும், பல்வேறு சிறப்புகளும் வாய்ந்த மாதேஸ்வரன் கோவிலில் சூரிய ஒளி மூலவர் மீது விழும் அதிசயம் காணப்படுகிறது. காங்கயம் அருகே ஆரியபட்டியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாதேஸ்வரன் கோவில் உள்ளது. மாதவன் என்கிற விஷ்ணு பூஜித்த சிவன் என்பதால் இவரை மாதேஸ்வரன் என்றும் மாதேசிலிங்கம் என்றும் அழைக்கின்றனர். இங்குள்ள விஷ்ணு தீர்த்தம் கிணறு தோற்றத்தில் இருந்தாலும் அது பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ளது.
மூலவரான சிவலிங்கம் சிவாச்சாரியர்களால் காசியிலிருந்து பானலிங்கமாக, உளி கொண்டு செதுக்காமல் இயற்கையாகவே அமைந்த லிங்கமாக கொண்டு வந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கட்டுடைக்கும் கால பைரவர் சிலை வேறு எங்கும் இல்லாத வாகன அமைப்புடன் காட்சி தருகிறார்.
கோவிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது ஆண்டில் இரு குறிப்பிட்ட காலத்தில் சூரிய ஒளி நேரடியாக விழும் அதிசயம் நிகழ்கிறது.
அவ்வகையில், பிப்., 4 முதல் 24ம் தேதி வரை 20 நாட்கள் மற்றும் அக்., மாதம் 16 முதல் நவ., 8 ம் தேதி வரை 22 நாட்கள் என மொத்தம் 42 நாட்கள் சூரிய ஒளி விழுகிறது. இந்த அதிசயத்தை கண்டு எம்பெருமானை தரிசிக்க, தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.