ராதாநல்லூர் சதாசிவமூர்த்தி சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
ராதாநல்லூர் சதாசிவமூர்த்தி சிவன்கோயில்,
ராதாநல்லூர், சீர்காழி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609114.
இறைவன்:
சதாசிவமூர்த்தி
இறைவி:
சாந்தநாயகி
அறிமுகம்:
சீர்காழியில் இருந்து கருவி முக்குட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலை NH32-ல் கருவிக்கு சற்று முன்னால் காவிரி செல்கிறது அதன் வடகரையில் இடதுபுறம் சிறிய சாலை கிழக்கு நோக்கி செல்கிறது. அதன் இருபுறமும் பசுமை மாறாத காய்கறி பருத்தி தோட்டங்கள் வழி மூன்று கிமி தூரம் சென்றால் ராதாநல்லூர் அடையலாம். சிறிய கிராமம் மிகவும் அமைதியாக இருக்கிறது. கோயிலும் சிறிது தான். இறைவன் சதாசிவமூர்த்தி பெரிய லிங்க வடிவில் அமர்ந்துள்ளார்.
கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். அவரின் வலது புறம் விநாயகர் தனி சிற்றாலயம் கொண்டுள்ளார். இவரின் முன்னர் நீண்ட முகப்பு மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தின் வெளியில் அம்பிகை சாந்தநாயகி தெற்கு நோக்கி தனி ஆலயம் கொண்டுள்ளார். பிரகாரத்தில் தான் ராசி நட்சத்திர தேவதைகள் உள்ளனர். அவர்களுடன் முருகன் வள்ளி தெய்வானை சகிதமாக சிற்றாலயம் கொண்டுள்ளார். வடகிழக்கில் பைரவர் நவகிரகம், சூரியன் உள்ளனர். நவ கிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகளையும் துன்பங்களையும் தீர்க்க நம்முடைய நட்சத்திர ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதன் மூலம் பாதிப்புகளை குறைக்கலாம்.
புராண முக்கியத்துவம் :
சைவ எல்லப்ப நாவலர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்புலவர். எல் என்னும் சொல் வெளிச்சத்தைக் குறிக்கும். இதனால் எல்லப்பன் என்னும் பெயர் கதிரவனைக் குறிக்கும் பெயர் என்பதை உணரலாம். சைவ சமயத்தையும் தமிழையும் தம் உயிரென கருதி தொண்டாற்றிய சைவ எல்லைப்ப நாவலர் என்ற அன்பர் பதினாறாம் நூற்றாண்டில் சதாசிவமூர்த்திக்கும் அம்பிகை சாந்தநாயகிக்கும் கோயில் ஒன்றை எடுப்பித்தார் தமது நிலங்களில் பெரும்பகுதியை கோயில்களுக்கும் திருமடங்களுக்கும் அளித்த பெருந்தகை வாழ்ந்த ஊர் இது. காலப்போக்கில் அவர் அமைத்திட்ட கோயில் சிதைந்துவிட ஊர் மக்கள் ஒன்றிணைந்து இக்கோயிலை உருவாக்கி உளள்னர். பிற தலங்களில் இருந்து புதுமையாக 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் அதனதன் தேவதைகளை சிலைவடிவமாக்கி சன்னதி எடுப்பித்து உள்ளனர். ஒவ்வொரு தேவதைகளின் பெயர்களும் அதன் ராசி / நட்சத்திரங்களின் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ராதாநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி