Sunday Nov 24, 2024

மேலத்திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி (தென்திருப்பதி) திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அருள்மிகு வெங்கடாசலபதி (தென்திருப்பதி) திருக்கோயில், மேலத்திருவேங்கடநாதபுரம்,

திருநெல்வேலி மாவட்டம் – 627 006.

போன்: +91- 462 – 2341292, 2340075 97918 66946

இறைவன்:

திருவேங்கடமுடையான்

இறைவி:

 அலமேலு

அறிமுகம்:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல திருவேங்கடநாதபுரத்தில் அமைந்துள்ள வெங்கடாசலபதி கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை, செழிப்பு, சாப விமோசனம் மற்றும் நல்ல திருமண வாழ்க்கைக்கு இது ஒரு பிரார்த்தனா ஸ்தலமாகும். இக்கோயில் “தென் திருப்பதி” என்று போற்றப்படுகிறது மேலும் இந்த கோவிலுக்கு செல்வது திருப்பதிக்கு சென்றதற்கு சமமாக கருதப்படுகிறது. இது ஒரு அபிமான ஸ்தலம். இக்கோயிலை திருநன்கோவில் என்றும் அழைப்பர்.   

இது ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரமும் கூட. இது திருநெல்வேலி சந்திப்பிலிருந்து தென்மேற்கே சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் ஸ்வேத வராஹ மலையின் மேல் அமைந்துள்ளது. கீழ திருவேங்கடநாதபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வடக்கே சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

புராண முக்கியத்துவம் :

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதி “வைப்ராஜ்ஜியம்’ என்ற பெயரில் அடர்ந்த வனமாக இருந்தது. இங்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் வியாசமாமுனிவரின் முதன்மைச்சீடரான பைலர், ஸ்ரீநிவாஸப்பெருமாளை நினைத்து தவம் செய்தார். அங்கு பெருமாளின் திருவுருவமோ, சிலையோ ஏதுமில்லாததால் தன் மனதில் திருமாலை எண்ணிக்கொண்டே, கோடி மலர்களைத் தூவி வணங்கினார். ஏழாம் நாளில் பெருமாளை எண்ணி அவர் அர்ச்சனை செய்த மலர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து மிகப்பெரும் ஜோதியாக வானில் உயரே எழுந்தன.

ஜோதியின் நடுவே, காலடியில் தாமிரபரணி நதி தாய் வீற்றிருக்க, ஸ்ரீநிவாஸப்பெருமாள் எழுந்தருளி பைலருக்கு அருட்காட்சிதந்தார். அவரது அருள்வடிவமான திருக்கோலத்தைக் கண்டு தரிசனம் செய்து ஆனந்தக் கூத்தாடிய பைலர் வடக்கே திருப்பதி வெங்கடாஜலபதியாக குடிகொண்டு அருள்வது போல இவ்விடத்திலும் வீற்றிருந்து பக்தர்களுக்கு திருவருள் புரிய வேண்டுமென வேண்டிக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஸ்ரீநிவாஸர் ஏற்றுக்கொண்டார். ஸ்ரீதேவி, பூதேவி, அலர்மேலுமங்கை சமேதராக ஸ்ரீ நிவாஸப் பெருமாள் இங்கேயே தங்கினார்.

நம்பிக்கைகள்:

திருமணத்தடை, பிணிகள், பாவங்கள், நாகதோஷம் நீங்க, குழந்தைவரம் கிட்ட, நினைத்த செயல்கள் ஈடேற, வியாபாரம் செழிக்க, குடும்ப ஐஸ்வர்யம் பெருக இங்கு வேண்டிக் கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்:

பெருமாள் பூமிதேவியைக் காக்க போரிடச்செல்லும் போது, உலகையும், மக்களையும் காக்க தான் வைத்திருந்த ஆயுதங்களான சங்கு, சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு அவர் வரும்வரையில் உலகைக் காக்கும்படி பணித்துச் சென்றார். அதன்படி, சங்கு, சக்கரத்தைப் பெற்றுக்கொண்ட கருடாழ்வார் பெருமாள் திரும்பி வரும்வரையில் அவரது ஆயுதங்களுடன் உலகைக் காத்தார். இவ்வாறு, பெருமாள் தனது ஆயுதங்களைக் கொடுத்துச் சென்றதால் இங்கு வீற்றிருக்கும் கருடாழ்வார் தனது கைகளில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். திருப்பதியைப் போல அமைப்பில் ஒத்திருப்பதால் இத்தலம் “தென்திருப்பதி’ என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படுகிறது. வடக்கே வெண்கற்களால் ஆன ஏழு மலைகளுடன், காளஹஸ்தி, கீழ் திருப்பதி உடன் திருப்பதி வெங்கடாஜலபதியாக ஸ்ரீநிவாஸன் குடிகொண்டிருப்பதைப்போல, இவ்விடத்திலும் தென்காளஹஸ்தி எனப்படும் சங்காணி கைலாசநாதர் கோயில், ஏழு மலைகளுக்கு ஒப்பான மலைகளுடன் திகழ்கிறது.

வெண்கற்களாலான குன்றின் மேல் ஸ்ரீநிவாஸன் அருள்பாலிக்கிறார். திருப்பதியில் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியாக விழந்து ஆறாக ஓடுவது போல, இங்கே தாமிரபரணி நீர்வீழ்வீ ச்சியாக விழுந்து ஆறாக ஓடுகிறது. திருப்பதியில் பல தீர்த்தங்களுடன் புண்ணிய தீர்த்தமாக புஷ்கரணி இருப்பது போல இங்கும் பல தீர்த்தங்களுடன் சீனிவாசக்கட்டம் என்னும் தீர்த்தம் உள்ளது.

குழந்தை வரம்: பிற்காலத்தில், இப்பகுதியை ஆட்சி செய்த வெங்கடப்பநாயக்க மன்னருக்கு குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. பல தலங்களுக்கும் சென்று இறைவனை வணங்கியும் குழந்தை பாக்கியம் கிடைக்காத அவர், இத்தலத்திற்கு வந்தார். தாமிரபரணியில் நீராடி, சீனிவாச தீர்த்தக்கட்டத்தில் மூழ்கி எழுந்த போது கோயிலில் ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு படைத்து அவர்களின் பசியைப்போக்கினால் குழந்தைப்பேறு கிட்டும், என்று அசரீரிகேட்கப்பெற்றார். அதன்படி மன்னர் குழந்தைகளுக்கு உணவு படைத்து, ஸ்ரீநிவாஸன் என்ற அழகிய ஆண்குழந்தையைப் பெற்றார். குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்ற மன்னர் இக்கோயிலை பெரிய அளவில் கட்டி, காட்டை அழித்து, குடிநிலமாக மாற்றி தனது பெயரையே இவ்வூருக்கு சூட்டினார். அதனால் இவ்வூர் “திருவேங்கடநாதபுரம்’ ஆனது.

தாமிரபரணியின் வட கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் வீற்றுள்ள வெங்கடேசப் பெருமாளுக்கு 12 ஆழ்வார்களும் திருப்படிகளாக இருக்க விரும்பினார்களாம். கருவறைக்குச் செல்லும் திருப்படிகளாக அவர்கள் அமைந்துள்ளதாக ஐதீகம். வரம் தரும்படியான கோலத்தில் சங்கு, சக்கரங்களுடன் அற்புதமான கோலத்தில் ஸ்ரீனிவாசன் அருள்பாலிக்கிறார். சுவாமிக்கு முன்இடப்புறம் ஆஞ்சநேயர் காலை மடித்து இரண்டு கைகளை மேலே நோக்கியபடி வாகன கோலத்தில் காட்சிதருகிறார். இத்தலம், அமைப்பில் ஒத்திருப்பதால், அங்கு சென்று நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இத்தலத்தில் வந்து நிறைவேற்றுகின்றனர்.

திருவிழாக்கள்:

சித்திரையில் பிரம்மோற்சவம், புரட்டாசி சனிக்கிழமை, பாரிவேட்டை, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, தை- ஊஞ்சல் உற்சவம், பங்குனியில் கருடஉற்சவம்.

காலம்

1200 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மேலத்திருவேங்கடநாதபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top