முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் கோவில், தூத்துக்குடி
முகவரி :
முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் கோவில்,
முத்தாலங்குறிச்சி,
தூத்துக்குடி மாவட்டம் – 628619.
இறைவன்:
லட்சுமி நரசிம்மர்
அறிமுகம்:
தமிழகத்தில் லட்சுமி நரசிம்மர், ஒரு சில இடங்களில்தான் தனிச் சன்னிதியில் காணப்படுகிறார். அந்த வகையில் முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் முக்கியத்துவம் பெறுகிறார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள முத்தாலங்குறிச்சி, தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள மிகவும் பழமையான ஊர். இவ்வூரில் உள்ள சிவாலயத்தில் அருளும் இறைவன், ‘வீரபாண்டிஸ்வரர்’ என்னும் ‘முகில்வண்ணநாதர்’ என அழைக்கப்படுகிறார். தாயார் சிவகாமி அம்மையார். இந்த ஆலயம் தினமும் நடை திறக்க வாய்ப்பில்லை. அர்ச்சர் வீடு அருகில் இருப்பதால், யாராவது வந்தால் நடை திறந்து பூஜைகள் செய்யப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தூரத்தில் செய்துங்கநல்லூர் என்ற இடம் உள்ளது. அங்கிருந்து 6 கிலோ மீட்டர் தூரம் சென்றால் முத்தாலங்குறிச்சியை அடையலாம். செய்துங்கநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.
புராண முக்கியத்துவம் :
வீரபாண்டிய என்ற பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் என்பதால் சிவனுக்கு இப்பெயர் வந்ததாக சொல்லப் படுகிறது. எப்போதுமே மேக கூட்டங்கள் சுழலும் இடத்தில் தாமிரபரணி கரையில் இவர் அமர்ந்து இருப்பதால், முகில்வண்ணநாதர் என்ற பெயர் வந்தது. சுமார் 400 வருடங்களுக்கு முன்பு இந்த ஆலயம் மிக பிரமாண்டமாக இருந்துள்ளது. அதற்கு சாட்சி இக்கோவிலில் உள்ளே உள்ள பிரமாண்டமான விநாயகர், பைரவர், சிவகாமி அம்மாள் ஆகியோரின் சிலைகளாகும். 200 வருடங்களுக்கு முன்பு ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. எனவே பிற்காலத்தில் இவ்வூரை ஆட்சி செய்தவர்கள், இந்த கோவிலை சிறிதாக கட்டி அதனுள் அனைத்து தெய்வங்களை பிரதிஷ்டை செய்து விட்டார்கள்.
தற்போது கோவிலுக்குள் சிவலிங்கம், சிவகாமியம்மாள், பைரவர் உள்பட அனைத்து தெய்வங்களும் ஒரே வளாகத்துக்குள் உள்ளது. இந்த கோவிலில் இருந்து தாமிரபரணி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நந்தி, தற்போது வெளியே தெரிந்து, அதை ஊரில் மற்றொரு இடத்தில் வைத்து வணங்கி வருகிறார்கள். இதற்கிடையில் இந்த கோவில் வளாகத்தில் உள்ள மற்றொரு சன்னிதியில் மிகப்பிரமாண்டமாக லட்சுமி நரசிம்மர் உள்ளார். தமிழகத்தில் லட்சுமி நரசிம்மர், ஒரு சில இடங்களில்தான் தனிச் சன்னிதியில் காணப்படுகிறார். அந்த வகையில் முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் முக்கியத்துவம் பெறுகிறார். சிவன் கோவிலுக்கும், லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கும் இடையே விநாயகர் குடி கொண்டிருக்கிறார். 5 அடி உயரம் கொண்டவர். வெட்டவெளியில் வெயிலில் அமர்ந்து இருக்கிறார். இவருக்கு ‘வெயிலுகந்த விநாயகர்’ என்றும், ‘முக்குருணி அரிசி விநாயகர்’ என்றும் பெயர் உண்டு.
நம்பிக்கைகள்:
இங்கே இரணியனை வதம்செய்து விட்டு, வெற்றி களிப்பில் தனது மடியில் லட்சுமியை அமர வைத்து மிக சந்தோஷமாக இருக்கிறார், நரசிம்மர். எனவே இங்கு வந்து வணங்கி நின்றால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வதால் எதிரிகள் தொல்லை நீங்கும். நீண்ட நாள் பிரச்சினை தீரும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முத்தாலங்குறிச்சி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருநெல்வேலி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி