Wednesday Dec 25, 2024

முடிகண்டநல்லூர் பூமிநாதர் சிவன்கோயில், கடலூர்

முகவரி :

முடிகண்டநல்லூர் பூமிநாதர் சிவன்கோயில்,

முடிகண்டநல்லூர், ஸ்ரீமுஷ்ணம் வட்டம்,

கடலூர் மாவட்டம் – 608702.

இறைவன்:

பூமிநாதர்

இறைவி:

பூமாதேவி

அறிமுகம்:

 சென்னை-கும்பகோணம் பிரதான தேசியநெடுஞ்சாலையில் சேத்தியாத்தோப்பின் அருகில் உள்ள குமாரகுடியில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்லும் சாலையில் இரண்டு கி.மீ. தூரம் சென்றால் கூடலையாத்தூர் பிரிவு சாலை உள்ளது அந்த பிரிவினை ஒட்டியே இந்த முடிகண்டநல்லூர் சிவன்கோயில் உள்ளது. ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து 12கிமீ. தூரத்தில் உள்ளது. இந்த பிரிவில் இருந்து கூடலையாத்தூர் எனும் பாடல்பெற்ற சிவாலயத்தினை மூன்று கிமீ-யில் அடையலாம். பிற சிவன்கோயில்களுக்கு இல்லாத பல சிறப்புக்கள் இக்கோயிலுக்கு உள்ளது. மிகசில கோயில்களிலேயே பூமிநாதர் எனும் பெயரில் வீற்றிருந்து அருள்பாலிப்பார். பூமிநாத சுவாமி 16 விதமான தோஷங்களை விலக்கி நலம் அருள்பவர் என்று அகத்திய மாமுனிவர் தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் மிகவும் சிறப்பு வாய்ந்த இக்கோயில் அதன் பெருமை அறியப்படாமல் மக்கள் வருவாரின்றி உள்ளது.

புராண முக்கியத்துவம் :

முதலாம் பராந்தக மன்னர் காலத்தில் வீரநாராயணபுரம் என்றழைக்கப்பட்ட காட்டுமன்னார்கோயிலை தலைமையிடமாக கொண்டு 161 கிராமங்கள் இயங்கின, அதில் முடிகண்டநல்லூரும் ஒன்று. “முதலாம் இராஜராஜ சோழன் எனும் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவரான. இவரது காலம் சோழ மரபினரின் பொற்காலம் என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். பல ஊர்கள் முடிகண்டநல்லூர், முடிகொண்டான் என இருந்தாலும் இராஜராஜ சோழனுக்கு முடிகொண்டான் என முதலில் பெயர் சூட்டப்பட்டது இந்த ஊரில்தான் எனப்படுகிறது.

கோயில் சிறிய கோயில் தான், இறைவன் மேற்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இறைவன் இறைவி இருவரின் முன்னம் நந்திகள் வீற்றிருக்கின்றன. பூமிநாதரின் சன்னதி வாயிலில் விநாயகர் மற்றும் முருகன் வீற்றிருக்கின்றனர். கருவறை கோட்டங்களில் துர்க்கை மற்றும் தென்முகன் உள்ளனர். வடகிழக்கில் நவக்கிரக சன்னதி உள்ளது. சண்டேசர் வழமையான பாகத்தில் உள்ளார்.

#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

நம்பிக்கைகள்:

நிலம் வாங்கும் முன்போ அல்லது கட்டட பணியில் தடை என்றாலோ, நிலத்தின் வட கிழக்கு மூலையில் இருந்து பிடிமண் எடுத்து, அதை மஞ்சள் துணியில் கட்டி, பூஜையறையில் வைத்து வணங்கி வரவேண்டும். பிறகு, வாஸ்து நாளில் இங்கு அந்தப் பிடிமண்ணை வைத்து ஸ்ரீபூமிநாதருக்கு பூஜை செய்து விட்டு, வணங்கினால், பிரச்னைகள் விலகி, கட்டடப் பணிகள் குறைவின்றி நடைபெறும் என்பது உறுதி.

சிறப்பு அம்சங்கள்:

முதல் சிறப்பு – இது ஒரு மேற்கு பார்த்த சிவன் கோயில். மேற்கு நோக்கிய சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். இரண்டாவது சிறப்பு – பூமாதேவி வணங்கிய பூமிநாதர். மூன்றாவது சிறப்பு – இறைவன் பூமிநாதர் மனை அல்லது நிலம் வாங்குபவர்கள் இங்குள்ள பூமிநாதரையும் இறைவியையும் பிரார்த்தித்தால், விரைவில் வீடு- மனை வாங்கும் யோகம் கிடைப்பது உறுதி. அமாவாசை நாளில் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு. அதிலும், அமாவாசையும் புதன்கிழமையும் சேர்ந்து வரும் நாளில், வீடு- மனை தொடர்பான சிக்கல்களில் இருப்பவர்களும், வாங்க வேண்டும் என்கிற ஆவலில் இருப்பவர்களும் வழிபடுவது கூடுதல் பலனைத் தரும்.

மண்ணச்சநல்லூர், செவலூர் போன்ற ஊர்களில் பூமிநாதர் இறைவன் கிழக்கு நோக்கி உள்ளார் ஆனால் முடிகண்டநல்லூர் எனும் இத்தல இறைவன் மட்டுமே மேற்கு நோக்கிய கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். பூமியை உரிமை கொள்ளவைக்கும் இறைவன் இங்கு வீற்றிருப்பதாலேயே பெரும் நிலப்பரப்பை வெற்றி கண்ட சோழருக்கு இத்தலத்தில் முடிகொண்டசோழன் எனும் பட்டம் தரப்பட்டது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

முடிகண்டநல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கடலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top