மார்கட்வாலா ஆஞ்சநேயர் கோயில், புதுடில்லி
முகவரி :
மார்கட்வாலா ஆஞ்சநேயர் கோயில்,
ஜமுனா பஜார், காஷ்மீரி கேட்,
புதுடில்லி – 110006.
இறைவன்:
ஆஞ்சநேயர்
அறிமுகம்:
புதுடில்லில் உள்ள செங்கோட்டைக்குப் பின்புறம் அதாவது சதாரா என்ற ஊருக்கு செல்லும் வழியில் உள்ள நெடும் சாலையில் அமைந்து உள்ளது பழுதடைந்த கட்டிடத்தில் உள்ள புகழ் பெற்ற பகவான் அனுமான் ஆலயம். அந்த ஆலயம் மிகப் பழமையானது என்பதை ஆலயத் தோற்றமே தெரிவிக்கின்றது. இந்த ஆலயம் காஷ்மீரி கேட் பகுதியில் உள்ள பிரியதர்ஷினி விஹார் எனும் இடத்தில் உள்ளது. புது டில்லியில் இருந்து விமான நிலையம் செல்லும் நெடும் பாதையில் செங்கோட்டையின் பின்புறம் அதை ஒட்டிச் செல்லும் அதே பாதையில் ஒரு நெடிய பாலம் வரும். அந்த இடத்தை ஜமுனா பஜார் எனக் கூறுகின்றனர். அந்த பாலத்தின் அடியிலேயே சாலையைத் தள்ளி இடப்புறம் இந்த ஆலயம் இருப்பதை பார்க்க முடியும்.
அந்த ஆலயம் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என சிலரும், இல்லை ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆலயத்தில் உள்ள பண்டிதர்களும் கூறுகின்றனர். ஆனால் அந்த ஆலயத்தில் எந்த கல்வெட்டும் இல்லை என்றாலும், ஆராய்சியாளர்களின் கூற்றின்படி அந்த சிலையின் அமைப்பும், ஆலய அமைப்பும் பல்லவர்கள் ஆட்சி காலத்தை ஒட்டி இருப்பதினால் பாண்டவர்கள் காலத்தில் இங்கு கட்டப்பட்டு இருந்த ஐந்து ஆலயங்களில் இந்த ஆலயமும் ஒன்றாக இருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கின்றார்கள்.
ஆலயத்தில் பகவானை புகைப்படம் எடுக்க அனுமதிப்பது இல்லை. ஆலயத்தில் நுழைந்தால் வெளிச்சம் இல்லாத பெரிய அறை உள்ளது. அந்த அறையின் ஒரு மூலையில் புமிக்கு இருபது அடிகள் கீழ் கட்டப்பட்டு உள்ள அறையில் பகவான் அனுமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு புஜிக்கப்பட்டு வருகின்றது.
புராண முக்கியத்துவம் :
ஆலயத்தை ஒட்டிய ஒரு இடத்தில் சுடுகாடு அமைந்து இருப்பதினால் அதை சுடுகாட்டு பாபா என்ற அர்த்தம் தரும் வகையில் மர்கட்வாலா பாபா எனவே அழைக்கின்றனர். மர்க்கட் என்றால் மயானம் என்ற அர்த்தமாம். இங்கு கூறப்படும் ஒரு கிராமியக் கதையின்படி ராவணனுடன் போர் நடந்தபோது பகவான் லக்ஷ்மணர் மயக்கம் அடைந்து விழ அவரை மயக்கத்தில் இருந்து எழுப்ப சஞ்சீவினி மலையை எடுத்து வர பகவான் ஹனுமார் சென்றார். அப்போது திரும்பும் வழியில் யமுனை நதி நிறம்பி ஓடுவதைக் கண்டவர் அதன் கரையில் சற்று ஒய்வு எடுக்க எண்ணி இறங்க, அவர் இறங்கிய இடம் ஒரு சுடுகாடாக இருப்பதைக் கண்டார்.
பகவான் ஹனுமாரைக் கண்ட ஆவிகள் தமக்கு முக்தி தருமாறு அவரிடம் வேண்டடிக் கொள்ள, அவரும் அவர்களுக்கு முக்தி தந்த பின் கிளம்பியபோது அவர் யமுனா தேவியின் தரிசனத்தை பெற்றார். அவரை வாழ்த்திய யமுனா தேவி அவர் பிற்காலத்தில் அங்கு எழ உள்ள ஆலயத்தில் அமர வேண்டும் என்றும் அப்போது ஒவ்வொரு வருடமும் தாம் அந்த ஆலயத்துக்கு வந்து அவரை சந்திப்பேன் என்று அருள் புரிந்தாளாம். அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் யமுனா நதி பெருக்கெடுத்து ஓடும்போது, பூமியில் இருந்து வெளியாகும் யமுனா நதியின் நீர் ஆலயத்தில் நிறம்புகின்றதாம்.
நம்பிக்கைகள்:
இந்த ஆலயத்தில் சனிக் கிழமைகளிலும், செவ்வாய் கிழமைகளிலும் கூட்டம் அலை மோதுகின்றது. சில சமயங்களில் சுமார் 100 அல்லது 200 மீட்டர் தூரத்துக்கு அதிக அளவிலான மக்கள் வரிசையில் நிற்கின்றனர். இந்த ஆலயத்தில் சென்று வணங்கினால் கோரிக்கைகள் நிறைவேறும், தோஷங்கள் விலகும் எனவும் நம்புகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
ஆலயம் எழும்பிய காலம் தெரியவில்லை என்றாலும் அதன் பெருமையை கூறுகையில் அந்த சிலை யமுனை நதியில் இருந்து கிடைத்தது என்பதாக கூறுகின்றார்கள். அதாவது இப்பொழுது ஆலயம் உள்ள இடத்தில் ஒரு காலத்தில் யமுனை நதி ஓடிக் கொண்டு இருந்ததாகவும், அந்த நதிக்குள் சிலை புதைந்து கிடந்தது என்றும் கூறுகின்றார்கள். அதை ஒரு சிலை என்று கூறுவதை விட ஒரு பாறையில் செதுக்கப்பட்டுள்ள பகவான் ஹனுமாரின் உருவச் சிலை என்றே கூற வேண்டும். முன் ஒரு காலத்தில் யமுனை நதி இப்பொழுது ஆலயம் உள்ள இடம்வரை ஓடிக் கொண்டு இருந்ததாம். பின்னர் காலப் போக்கில் அந்த நதி மெல்ல மெல்ல திசை மாறி இந்த ஆலயம் உள்ள இடத்தில் இருந்து பதினைந்து கல் தொலைவில் சென்று விட்டதாம். அதனால் யமுனை நதி நகர்ந்து சென்று விட்ட இடங்களில் நகரம் விரிவாக்கப்பட்டு கட்டிடங்களும், பாலங்களும் கட்டப்பட்டு விட்டன. அப்பொழுதுதான் தரை மட்டத்திற்கு அடியில் சுமார் இருபது அடி ஆழத்தில் புதைந்து இருந்த இந்த சிலை வெளித் தெரிந்ததாம். முதலில் ஆலயம் என்று அமைக்கப்பட்டு இருக்காவிடிலும், அந்த பகவான் ஹனுமாரின் உருவச் சிலை தற்போது உள்ள இடத்தில் பூமிக்கடியில் திறந்த வெளியில் பூஜிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும் என்றும், பல காலத்திற்குப் பிறகு எவரோ அதை ஆலயமாக கட்டி உள்ளனர் எனவும் தெரிகின்றது.
அனுமான் ஆலயத்தைப் பற்றி கூறுகையில் அது அந்த ஊரைக் காக்கும் தெய்வம் என்று கூறுகின்றார்கள். அங்கிருந்து பதினைந்து கல் தொலைவில் ஓடும் யமுனை நதியில் எப்பொழுதெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றதோ அப்பொழுதெல்லாம் அந்த சிலையின் கீழ் நீர் ஊற ஆரம்பிக்குமாம். ஆனால் எத்தனைப் பெரிய வெள்ளத்திலும் சிலைக்கு அடியில் ஊறும் நீர் அந்த அனுமானின் மூக்குப் பகுதிக்கு மேல் உயர்வது இல்லையாம். என்று அந்த சிலையின் மூக்குப் பகுதிக்கு மேல் தண்ணீர் மட்டம் உயருமோ அன்று அந்த ஊர் அழிந்துவிடும் என்பதாக இங்கு வாய்மொழிக் கதை உள்ளது. காரணம் எதோ புராணம் ஒன்றில் அந்த செய்தி உள்ளதாகவும் அது எந்த புராணம் என அவர்களுக்கும் தெரியவில்லை எனவும், காலம் காலமாக வாய்மொழியாக கூறப்பட்டு வரும் செய்திகள்தான் அதற்கான ஆதாரம் எனறும் அங்குள்ள பண்டிதர்கள் கூறுகின்றனர்.யமுனையில் வெள்ளம் இல்லாத நாட்களில் சிலையின் அடியில் பொட்டு நீர் கூட காணப்படுவது இல்லை.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஜமுனா பஜார், காஷ்மீரி கேட்
அருகிலுள்ள இரயில் நிலையம்
டில்லி
அருகிலுள்ள விமான நிலையம்
புதுடில்லி