மாமல்லபுரம் (மகாபலிபுரம்) கடற்கரை கோயில், செங்கல்பட்டு
முகவரி :
மாமல்லபுரம் (மகாபலிபுரம்) கடற்கரை கோயில்,
மகாபலிபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம்,
தமிழ்நாடு 603104
இறைவன்: சிவன், விஷ்ணு
அறிமுகம்:
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் என்பது தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோயில் ஆகும். இது முதலாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக்கோயில் 45 அடி உயரம் கொண்டது. இக்கோயிலில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் சோமாசுகந்தர் மற்றும் பள்ளிக்கொண்ட நிலையில் ஜலசயன பெருமாள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றனர்.
மாமல்லபுரத்தில் வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் இது மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது கி.பி. எட்டாம் நூற்றாண்டு (700-728) முதல் கருங்கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட கோயிலாகும். இக்கோயிலின் உருவாக்கத்தின் போது இந்த இடம் துறைமுகமாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது இந்த இடத்தைப் பல்லவ அரசமரபின் இரண்டாம் நரசிம்மவர்மன் ஆண்டு கொண்டிருந்தார்.
இக்கடற்கரைக் கோயிலை 1984ல் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. இக்கடற்கரை கோயில், தென்னிந்தியாவின் கற்களால் கட்டுமானம் செய்யப்பட்ட கோயில்களில் மிகவும் தொன்மையானதாகும்.
புராண முக்கியத்துவம் :
மார்க்கோபோலோ மற்றும் அவருக்குப்பின் ஆசியாவிற்கு வந்த ஐரோப்பிய வணிகர்கள் இந்த இடத்தை ஏழு அடுக்கு தூபிகள் என்று அழைத்தனர். அந்த ஏழு அடுக்கு தூபிகளில் ஒன்று இந்தக் கடற்கரை கோயில் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலானது அவர்களது கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல ஒருவேளை செயல்பட்டிருக்கலாம். இக்கோயிலானது அடுக்கு தூபி போல காணப்படுவதால், அடுக்கு தூபி எனும் பெயர் கப்பல் மாலுமிகளுக்கு நன்றாக அறிந்த பெயராகி போனது.
7 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் குகைக் கோயில்கள் மற்றும் ரதங்கள் உள்ளிட்ட பல கட்டடக் கலை படைப்புகளை ஆரம்பித்து வைத்தார். அந்த கட்டடக்கலை படைப்புகளின் உச்ச நிலையாக இந்த கட்டமைப்பு கோயில் வளாகம் கருதப்படுகிறது. குடைவரை கோயில் அமைப்புகளை செதுக்கும் கட்டடக்கலை படைப்பானது பின்வந்த காலங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதனை நாம் அதிரனசந்த குகை, பிடாரி இரதங்கள் மற்றும் புலிக்குகை ஆகியவற்றின் மூலம் அறியலாம்.
கடற்கரை கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் வளாகத்தின் நேர்த்தியான கட்டமைப்பை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு, மன்னன் ராஜசிம்மன் (கி. பி.700–28) என்று அழைக்கப்பட்ட பல்லவ அரசமரபின் இரண்டாம் நரசிம்மவர்மனையே சாரும். கடலில் மூழ்கிப்போன கோயில் வளாகங்களில் மீதமிருக்கும் கடைசி கோயில் வளாகம் என்று இது இப்போது ஊகிக்கப்படுகிறது; 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கியபோது இந்த கோயில் வளாகத்துடன் தொடர்புடைய கடலில் மூழ்கிப்போன எஞ்சிய கோயில்களின் அமைப்பானது வெளியே தெரிந்தது. கடற்கரைக் கோயிலின் கட்டட அமைப்பானது அவர்களை வெற்றிகொண்டு தமிழகத்தை ஆண்ட சோழர்களாலும் சோழர்கள் கட்டிய கோயில்களில் பின்பற்றப்பட்டது.
சோழமண்டல கடற்கரையை தாக்கிய 2004 ஆம் ஆண்டு சுனாமி முழுவதுமாக கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சிதைந்துபோன ஒரு பழைய கோயிலை வெளிக்காட்டியது. இந்நிகழ்வு ஐரோப்பியர்கள் தங்களது டைரிகளில் ஏழு அடுக்கு தூபிகள் என்று குறிப்பிட்ட பகுதியின் ஒரு பகுதியே மகாபலிபுரம் என்ற ஊகத்தை புதுப்பித்தது அந்த ஏழு அடுக்கு தூபிகளில் 6 கோயில்கள் கடலுக்குள் மூழ்கியே இருக்கின்றன. சுனாமியானது மேலும் சில பண்டைய சிங்கங்கள், யானைகள் மற்றும் மயில்களின் கற்சிற்பங்களை வெளிக்காட்டியது. இச்சிற்பங்கள் 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர் காலத்தின் போது சுவர்கள் மற்றும் கோயில்களை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டன.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதியன்று இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியானது கோயில் மற்றும் அதனை சுற்றி இருந்த தோட்டத்தை தாக்கிய போதும் கடற்கரைக் கோயிலானது பெரிய அளவிற்கு சேதத்திற்கு உள்ளாகவில்லை. ஏனெனில் நீர் மட்டமானது சில நிமிடங்களிலேயே சாதாரண நிலைக்குத் திரும்பியது. கோயிலின் அடித்தளமானது கடினமான கருங்கற்களால் கட்டப்பட்டிருந்ததால் சுனாமியால் உருவான அலைகளை தாக்குப் பிடித்தது. கோயிலைச் சுற்றி கடற்கரையில் எழுப்பப்பட்டிருந்த தடுப்பு அமைப்புகளும் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருந்தன.
காலம்
கி.பி. எட்டாம் நூற்றாண்டு (700-728)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மகாபலிபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை