Friday Nov 15, 2024

மறுவீடு செல்லும் வைபவம்

ஆழ்வார்குறிச்சிக்கு தெற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது கீழஆம்பூர் என்ற எழில்மிகுந்த சிறிய கிராமம். பழங்காலத்தில் இந்த ஊர் `சினேகபுரி’ என்று அழைக்கப்பட்டது. அப்போது அங்கு வாழ்ந்து வந்த அந்தணர் ஒருவரின் கனவில் சிவசைலநாதர் தோன்றி, `இங்குள்ள அக்ரஹாரத்தின் நடுவில் அமைந்துள்ள கிணற்றில் நான்கு கைகளுடன் அம்பாள் ஜலவாசம் செய்து வருகிறாள். அவளை என் இருப்பிடத்துக்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்வாயாக” என கூறிவிட்டு மறைந்தார். இதனால் மெய்சிலிர்த்துப்போன அந்த அந்தணர், விடிந்ததும் ஊர் மக்களை கூட்டி இறைவன் கனவில் வந்து தனக்கு பணித்த விவரங்களை கூறினார். இதைத்தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த கிணற்றுக்குள் இருந்து அம்பாள் சிலையை வெளியே எடுத்தனர்.

பின்னர் ஈசனின் ஆணைப்படி சிலையை சிவசைலம் கொண்டு சென்று அங்குள்ள கோவிலில் வைத்து பிரதிஷ்டை செய்தனர். அம்பாள் தங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்பதால், கீழ ஆம்பூர் கிராம மக்கள் ஆண்டுதோறும் சிவசைலநாதரையும், பரமகல்யாணியையும் தங்கள் ஊருக்கு `மறுவீடு’ அழைக்கிறார்கள். `வசந்த உற்சவம்’ எனப்படும் இந்த மறுவீடு வைபவம் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் ஒரு நன்னாளில் நடைபெறுகிறது. சிவசைலத்தில் இருந்து சுவாமி-அம்பாள் சிலைகளை கீழ ஆம்பூரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு கொண்டு வருவார்கள். அங்கு 3 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்பிறகு சுவாமியும் அம்பாளும் மீண்டும் சிவசைலத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பெண் வீட்டார், புதுமண தம்பதியை மறுவீடு அழைத்து எப்படி நன்றாக உபசரித்து கணவன் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்களோ அதேபோல் கீழ ஆம்பூர் கிராம மக்கள் சிவசைலநாதரையும், பரமகல்யாணி அம்மனையும் தங்கள் ஊருக்கு வரவேற்று உபசரித்து வாஞ்சையுடன் அனுப்பி வைப்பது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ஆகும். Readmore @ https://lightuptemples.com/sivasailam-sivasailanathar-temple-thirunelveli/

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top