Wednesday Dec 18, 2024

மம்மியூர் ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில், கேரளா

முகவரி

மம்மியூர் ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில், பெரும்பிலவல்லி சாலை, குருவாயூர், மம்மியூர், திருச்சூர் மாவட்டம், கேரள மாவட்டம் – 680101.

இறைவன்

இறைவன்: மகாதேவர் / மம்மியூரப்பன் இறைவி: பார்வதி

அறிமுகம்

மம்மியூர் கோவில் அல்லது மம்மியூர் மகாதேவ க்ஷேத்ரம் என்பது தென் இந்தியாவில் உள்ள கேரளத்தில் அமைந்துள்ள குருவாயூர் கோவிலின் அருகாமையில் உள்ள பரமசிவன் கோவிலாகும். தான் தவமியற்றி வந்த இடத்தை விட்டுக் கொடுத்துக் கிருஷ்ணர் கோவில் அமைக்க உதவிய இறைவன் சிவபெருமான், அங்கிருந்து சிறிது தொலைவில் தனியாகக் கோவில் கொண்டார். இந்தக் கோவிலானது குருவாயூரில் இருந்து புன்னத்தூர் கோட்டைக்கு செல்லும் வழியில் கொட்டபடிக்கு அருகே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மம்மியூர் திருக்கோயிலில் ஆடைக்கட்டுப்பாடுகள் புராதனமானவை. பாரம்பரிய தென்னிந்திய உடையணிந்தோர் மட்டுமே இறைவழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவர். கேரளக் கட்டுமான முறையில் அமைந்த இக்கோவிலின் கருவறையில் சிவபெருமான் இடதுபுறத்தில் பார்வதி தேவியுடன் ‘உமா மகேஷ்வரர்’ ஆகக் காட்சியளிக்கிறார். இங்கிருக்கும் சிவபெருமான் ‘மகா தேவர்’ என்றும், ‘மம்மியூரப்பன்’ என்றும் அழைக்கப்பெறுகிறார். அருகில் இருக்கும் மற்றொரு கருவறையில் மகாவிஷ்ணு இருக்கிறார். இக்கோவில் வளாகத்தில், கணபதி, சுப்பிரமணியர், சாஸ்தா, பகவதியம்மன் மற்றும் நாக தேவதைகளுக்கும் தனித்தனிச் சன்னிதிகள் இருக்கின்றன. குருவாயூரப்பனை வழிபட வரும் பக்தர்கள் மம்மியூர் சிவன் கோவில் தரிசனம் பெறவேண்டும் என்பதே ஐதீகம், அப்படி செய்வதால் குருவாயூர் கோவிலுக்கு சென்றதன் முழு புண்ணிய பலமும் அந்த பக்தருக்கு கிடைக்கப்பெறும் என்பதே நம்பிக்கையாகும்.

புராண முக்கியத்துவம்

விஷ்ணுவின் தோற்றங்களில் ஒன்றான கிருஷ்ணர் அவதாரத்திற்கான நோக்கமும் காலமும் நிறை வடைந்து விட்டது. இதையடுத்து கிருஷ்ணர், அந்த அவதாரத்தில் இருந்து விலக, வைகுண்டம் சென்றார். அதன் பிறகு, துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணரால் வடிவமைக்கப்பட்ட அவரது உருவத்திலான சிலை கடலில் மிதக்கத் தொடங்கியது. கடலில் மிதந்த அந்தச் சிலையைக் கலியுகத்திலும் வழிபாட்டுக்கு உரியதாக மாற்ற வேண்டும் என்று விரும்பிய குரு பகவானும், வாயு பகவானும் அந்தச் சிலையை எடுத்துக் கொண்டு, அதை நிறுவச் சரியான இடத்தைத் தேடி அலைந்தனர். அப்போது, ஒரு குளக்கரையில் இறைவன் சிவபெருமான் அமர்ந்து தவம் இயற்றிக் கொண்டிருந்ததைக் கண்டனர். உடனே அவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த சிலையைச் சிவபெருமானுக்கு அருகில் வைத்துவிட்டு, அவரை வணங்கினர். அவர்கள் வந்ததை அறிந்த சிவபெருமான், அவர்களது விருப்பத்தையும் அறிந்தார். கிருஷ்ணர் கோவில்கொள்ள, தான் இருக்கும் இடமே சிறந்த இடம் என்று அவர்களிடம் தெரிவித்த சிவபெருமான், தானிருக்கும் இடத்தைக் கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்காக வழங்கினார். பின்னர், அங்கிருந்து சிறிது தொலைவில் தனக்கும் ஒரு கோவில் அமைத்துக் கொண்டார். சிவபெருமான் வழங்கிய இடத்தில் குருவும், வாயுவும் சேர்ந்து நிறுவிய கிருஷ்ணர் கோவில் இருக்கும் இடம் ‘குருவாயூர்’ ஆனது. தானிருந்த இடத்தை விட்டுக் கொடுத்த சிவபெருமானின் பெருமையைப் போற்றும் விதமாக, அவர் கோவில் கொண்ட இடம் ‘மகிமையூர்’ என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இது ‘மம்மியூர்’ என்று மாற்றம் கொண்டது என்று இக்கோவிலின் தல வரலாறு தெரிவிக்கப்படுகிறது.

நம்பிக்கைகள்

கலியுகம் தொடங்குவதற்கு முன்பே அமைந்த கோவில் என்று போற்றப்படும் இந்த ஆலயத்தில் தம்பதியர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை நீக்கி ஒற்றுமை ஏற்படச் செய்யும் தம்பதியர் ஒற்றுமைக்கான வழிபாடு, குடும்ப அமைதி மற்றும் குறைவற்ற செல்வம் வேண்டிச் செய்யப்படும் ‘ஏகாதச ருத்ராபிஷேகம்’ எனும் வழிபாடு, திருமணத் தடை நீக்கத்திற்கான உமாமகேஸ்வர வழிபாடு, ராகு வழிபாடு, நாக வழிபாடு என்று பல சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோவிலில் 120 வகையான சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குருவாயூர் சென்று குருவாயூரப்பனை வழிபடும் பக்தர்கள், குருவாயூர் கோவிலுக்கு அருகில் இருக்கும் இந்த மம்மியூர் மகாதேவர் கோவிலுக்கும் சென்று வழிபட வேண்டும். அப்போதுதான், குருவாயூர் கோவிலுக்கு வந்து குருவாயூரப்பனிடம் வேண்டிய பலனை முழுமையாகப் பெற முடியும் எனும் நம்பிக்கை இருப்பதால், இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது.

சிறப்பு அம்சங்கள்

இக்கோவிலில் மகாதேவனுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் ஒரே நேரத்தில் வழிபாடு செய்யப்படுகிறது. இரு அர்ச்சகர்கள் தனித்தனியே இருவருக்கும் ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான வழிபாடு செய்வது இக்கோவிலில் மட்டும்தான் என்கின்றனர். இக்கோவிலில் நாள்தோறும் காலை 6.45 மணி முதல் 7.45 மணி வரை வேதங்களில் முதலாவதாகக் கருதப்படும் ரிக் வேதத்தில் இருந்து சொல்லப்பட்ட மந்திரச் சொற்களைக் கொண்டு ‘ரிக் வேத தாரை’ எனும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இவை தவிர, இங்கு சிவபெருமான், மகாவிஷ்ணு ஆகியோருக்கான சிறப்பு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

திருவிழாக்கள்

இங்கு சிவபெருமான், மகாவிஷ்ணு ஆகியோருக்கான சிறப்பு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி, கும்பம் (மாசி) மாதத்தில் மகா சிவராத்திரி விழாவும், மகரம் (தை) மாதத்தில் வரும் ரேவதி நட்சத்திர நாளில் இந்த ஆலயத்தில் மகாவிஷ்ணு சிலை நிறுவப்பட்ட நாள் விழாவும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கன்னி (புரட்டாசி) மாதத்தில் வரும் நவராத்திரி விழாவில் சரஸ்வதி பூஜைக்கான நாளில், லலிதா சகஸ்ர நாம லட்சார்ச்சனை செய்யப்படுகிறது. விஜயதசமி நாளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானக் குழந்தைகளைக் கொண்டு சங்கீதார்ச்சனை நிகழ்வு நடத்தப்பெறுகிறது. இந்நாளில் குழந்தைகளுக்கான கல்வி தொடக்கத்திற்கான சிறப்பு வழிபாடும் (வித்யாரம்பம்) நடத்தப் பெறுகின்றன. விருச்சிகம் (கார்த்திகை) மாதம் முதல் நாளில் தொடங்கி 41 நாட்கள் நடைபெறும் ஐயப்பன் வழிபாட்டிற்கான மண்டல நாட்கள் மற்றும் கேரளாவில் ராமாயண மாதம் என்று அழைக்கப்படும் கர்க்கடகம் (ஆடி) மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. கணபதி சன்னிதியில் சிங்கம் (ஆவணி) மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவும், சுப்பிர மணியர் சன்னிதியில் துலாம் (ஐப்பசி) மாதம் வரும் பூசம் நட்சத்திர நாளில் சஷ்டி விழாவும், நாகர்கள் சன்னிதியில் கன்னி (புரட்டாசி) மாதம் வரும் ஆயில்யம் நட்சத்திர நாளில் ஆயில்ய வழிபாடும் சிறப்பு விழாக்களாக நடக்கின்றன. இதே போல் தனு (மார்கழி) மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் திருவாதிரைத் திருநாளிலும், சிங்கம் (ஆவணி) மாதத்தில் ரோகிணி நட்சத்திர நாளில் வரும் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ணர் தோற்ற நாளிலும், மேடம் (சித்திரை) மாதம் முதல் நாள் நடைபெறும் சித்திரை விசுத் திருநாளிலும் இக்கோவிலில் சிறப்பு விழாக்கள் நடத்தப்பெறுகின்றன. கேரள மாநிலம் முழுவதும் சிங்ஙம் (ஆவணி) மாதத்தில் விவ சாயிகள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் இல்லம் நிறா எனப்படும் நிறப்புத்தேரி விழா இங்கும் நடைபெறுகிறது. மேலும், சிவபெருமானுக்குரியதாகக் கருதப்படும் பிரதோஷ நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குருவாயூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

குருவாயூர் நிலையம்

அருகிலுள்ள விமான நிலையம்

கொச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top