Saturday Jan 18, 2025

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

முகவரி

அருள்மிகு மீனாட்சி சோமசுந்தரர் திருக்கோவில் மதுரை PIN – 625001 PH:0452-2349868

இறைவன்

இறைவன்: சுந்தரேஸ்வரர் (சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர்) இறைவி: மீனாட்சி

அறிமுகம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலே, தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது. இத்தலத்தில், முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது. சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில், முக்கியமான 4-ஆவது தலமாகத் திருவாலவாய் உள்ளது.[2] இந்த நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலத்தின் பெயரைக் கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும்.[2] அதனால், சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தினைச் ‘சிவன் முக்திபுரம்’ என்றும் அழைக்கின்றனர்.[2] இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும்.[2] இதனை, ராஜமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர்.[2] இத்தலம் 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் உள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான் மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274-ஆவது சிவாலயமாகவும், 192-ஆவது தேவாரத்தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். தேவலோகத்தின் அரசனான இந்திரனால், இக்கோயில் கட்டப்பட்டது என்பது நம்பிக்கை. இராமர், இலட்சுமணன், வருணன், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் போன்றவர்களால் இச்சிவாலயம் வழிபடப்பட்டுள்ளது. இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம், பிரசித்தி பெற்றதாகும்.

புராண முக்கியத்துவம்

விருத்திராசூரனைக் கொன்றமையால், இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, கடம்பவனத்தில் இருந்த இந்தச் சிவலிங்கத்தைப் பூசித்துத் தனது தோஷத்தைப் போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து, முதலில் இந்தக் கோவிலையும், பின் மதுரை நகரத்தையும், குலசேகரப் பாண்டிய மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் கனவில், சிவபெருமான் தோன்றிக் கூறியதால், அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி, புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில், அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 2500 வருடங்கள் பழமையான மதுரை நகரானது, தமிழ் இலக்கிய வரலாற்றிலும், இந்து சமய வரலாற்றிலும் முக்கியத்துவமானது. மதுரை நகரானது, திருவாலவாய் ,சிவராஜ தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. மதுரை திருப்பாற்கடலைத் கடைந்த போது, நாகம் உமிழ்ந்த விஷத்தை, இறைவன் ‘மதுரம்’ (அமிழ்தம்/தேன்) ஆக்கினமையால், இத்தலம் ‘மதுரை’ என்று பெயர் பெற்றதென்பர்.[சான்று தேவை] நான்மாடக்கூடல் மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு, சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும், நான்கு மாடங்களாகக் கூடி, மதுரையைக் காத்ததால் ‘நான்மாடக்கூடல்’ என்ற பெயரும் மதுரைக்கு உண்டு என்கிறார்கள் சிலர். ஆலவாய் சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு, வட்டமாகத் தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு, இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால், ‘ஆலவாய்’ என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.

நம்பிக்கைகள்

சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும்.

சிறப்பு அம்சங்கள்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில், எட்டுகோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 32 கற்சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும், கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. இத்திருக்கோயில், கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில், நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய, நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன. இவற்றுள் இராஜ கோபுரம் (கிழக்குக் கோபுரம்) கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்குக் கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் கி.பி. 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோபுரம், காளத்தி முதலியாரால், கி.பி. 1570-ல் கட்டப் பெற்று, கி.பி. 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம், கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று, திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. கலையழகு மிக்க மண்டபங்கள் : கோயிலின் அழகிய சிற்ப வேலைப்பாடுகள், ஒவ்வொரு மண்டபத்திற்கும் வேறுபட்டு, அழகிய நுணுக்கங்களைக் கொண்டும், தனித்தனிச் சிறப்புக்களையும் உள்ளடக்கியுள்ளன. அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் வீரவசந்தராயர் மண்டபம் புது மண்டபம்: கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே, 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது. (இந்த புது மண்டபம், முழுவதும் சிறு வணிகக்கடைகளை உள்ளடக்கியதாக உள்ளது.) இசைத் தூண்கள்: மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு ஆடி வீதியில், கல்லில் இசை வெளியிடும் 5 இசைத் தூண்கள், ஆயிரங்கால் மண்டபத்தில் 2 இசைத் தூண்கள் ஆக மொத்தம் 7 இசைத் தூண்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளன. தெருக்களுக்குத் தமிழ் மாதப் பெயர்கள்: மதுரை மீனாட்சியம்மன் கோயிலைத் தாமரை மொட்டைப் போல் கற்பனை செய்து கொண்டால், அதைச் சுற்றியுள்ள தெருக்களைத் தாமரை இதழ்கள் ஆகக் கூறலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும், சுற்று வீதிகளுக்கு ஆடி வீதிகள் என்று பெயர். கோயிலுக்கு வெளியில், முதல் சுற்று, சித்திரை வீதிகள்; சித்திரை வீதிகளுக்கு அடுத்த வெளி சுற்று, ஆவணி வீதிகள்; அதற்கு அடுத்த வெளி சுற்று, மாசி வீதிகள்; அதற்கு அடுத்து இறுதி சுற்று, வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது. (உதாரணமாக, கீழ ஆடி வீதி, மேல ஆடி வீதி, வடக்கு ஆடி வீதி, தெற்கு ஆடி வீதி). இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில், குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள், அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில் தான் நடைபெறும். சிறப்புகள் : சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார். சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். குலசேகர பாண்டியன் காலத்தில் இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார். சுந்தரேசுவரர் , சொக்கநாதர், சோமசுந்தரர் எனும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இது குறித்து திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன. இக்கோவிலின் தல மரம்: கடம்பம், புனித நீர்: பொற்றாமரைக்குளம் மற்றும் வைகை. பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது. நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேசுவரர், சொக்கநாதர் என்றும் அறியப்படுகிறார். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கமாக இருக்கிறது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றி ஆடி வீதிகளும், அதற்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என சதுர அமைப்பிலான தமிழ் மாதப் பெயர்களினான தெருக்கள் இருக்கிறது. மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேசுவரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது. இங்குள்ள சிவன் சுந்தரேசுவரர் என அழைக்கப்படுகிறார். தேவாரக் காலத்தில் திருவாலவாய் என அழைக்கப்பட்டது. இக்கோயிலின் வெளிப்பகுதியில் கோயிலைச் சுற்றி வருவதற்காக மின்கலத்தில் இயங்கும் வண்டிகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் இந்த வண்டிகளின் மூலம் கோயிலைச் சுற்றி வருவதில் மகிழ்ச்சி கொள்கின்றனர்.

திருவிழாக்கள்

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில், சித்திரைத் திருவிழா, முடிசூட்டுவிழா, திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், இந்தக் கோயிலில், தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

காலம்

2000 – 3000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மதுரை

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top