மணலூர் புன்னைவன நாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
மணலூர் புன்னைவன நாதர் சிவன்கோயில்,
மணலூர், கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611109.
இறைவன்:
புன்னைவன நாதர்
இறைவி:
அம்பிகை சுந்தரவள்ளி
அறிமுகம்:
கீவளூர் – கச்சனம் சாலையில் தெற்கில் பத்து கிமீ தூரம் வந்தால் பாண்டவை ஆறு குறுக்கிடுகிறது, அதன் வலதுபுற தென் கரையில் ஒரு கிமீ தூரம் சென்றால் 105.மணலூர். இவ்வூர் மணலூர் என்றும் மாணலூர் எனவும் அழைக்கப்படுகிறது. சிறியது பெரியதுமாக நான்கைந்து குளங்கள், ஊரை சுற்றி பசுமையான நெல்வயல்கள் பிரதான சாலையில் கொஞ்சம் வீடுகள் இரு பிரிவாக சில தெருக்கள் இது தான் மணலூர். பெரிய குளத்தின் கிழக்கு பகுதியில் மேற்கு நோக்கிய சிவன் கோயில், பழம்கோயில் சிதைந்து போனதன் பின்னர் புதிதாக உருவாகி உள்ளது இக்கோயில் என உணரமுடிகிறது. புன்னை மரக்காட்டில் இருந்த இறைவன் என்பதால் புன்னைவன நாதர் எனவும் அம்பிகை சுந்தரவள்ளி எனவும் பெயர் கொண்டுள்ளனர். இறைவன் மேற்கு நோக்கிய கருவறை கொண்டு நடுத்தர அளவிலான லிங்கமூர்த்தியாக உள்ளார்.
முகப்பில் கான்கிரீட் மண்டபமாக உள்ளது. அதில் நந்தியும் பலிபீடமும் உள்ளது. கருவறை கோஷ்டங்கள் என இல்லை. இறைவனின் இடதுபுறம் விநாயகர் தனி திருக்கோயில் கொண்டுள்ளார் இவர்தான் குடை விநாயகர் என பெயர் பெற்றவர். இறைவனின் வலதுபுறம் வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளார். கோயிலுள் நுழையும் நுழைவாயிலின் இருபுறமும் சிறிய மண்டபங்கள் அமைக்கப்பட்டு அதில் பழம் திருக்கோயிலுக்கான மூர்த்திகள் உள்ளன. இடதுபுறம் இரு விநாயகர்களும் அதன் நடுவில் பைரவரும் கிழக்கு நோக்கி உள்ளனர். வலதுபுறம் கிழக்கு நோக்கிய விஷ்ணு துர்க்கை, சனி பகவான், தெற்கு நோக்கியபடி தக்ஷணமூர்த்தி சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் அவர்களது உரிய இருப்பிடத்தில் வைக்கப்படாமல் இருப்பது வருத்தத்துக்கு உரியது.
புராண முக்கியத்துவம் :
இவ்வூர் சிவன் கோயிலில் குடை விநாயகர் எனும் ஒரு பிரபலமான விநாயகர் உள்ளார். அதற்க்கு மக்கள் சொல்லும் கதையை கேளுங்கள். சிவபக்தர் ஒருவர் நித்தம் தானதருமங்களை செய்து வந்தார் தானம் பெறுவோர்கள் அதிகமாக அதிகமாக அவரால் நிறைவாக வழங்கமுடியாமல் சிரமப்பட்டார். அதனால் கேட்பவர்க்கு கேட்கும் அளவிற்கு வழங்க தேவையான பொன்னும் பொருளும் வேண்டும் என வேண்டி தவம் செய்தாராம், கிரகங்கள் அனைத்தும் சேர்ந்து யோசித்தன, ஒவ்வொருவரும் இவ்வாறு வேண்டி நின்றால் என்னாவது என எண்ணி அவரது தவத்தை கலைக்க மழையை பொழிந்தன, சிவபக்தரோ நான் வேண்டுவது எனக்கல்ல ஊருக்காக தானே என விநாயகரை நினைத்து மழையை நிறுத்த வேண்டினார் விநாயகரும் இவ்வூர் மேல் மழை பெய்யாமல் காத்தாராம். இப்படி ஒரு கதையை இங்குள்ளோர் குடை விநாயகருக்கு விளக்கம் சொல்கின்றனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மணலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி