Thursday Dec 19, 2024

மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி திருக்கோயில், விருதுநகர்

முகவரி

அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், மடவார்வளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம். போன்: +91-4563-261 262

இறைவன்

இறைவன்: வைத்தியநாதசுவாமி இறைவி: சிவகாமி அம்பாள்

அறிமுகம்

வைத்தியநாதசுவாமி கோவில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது விருதுநகர் மாவட்டத்தின் மிகப் பெரிய சைவத்தலமாக விளங்குகிறது. இக்கோயில் விருதுநகர் மாவட்டத்தின் மிகப்பெரிய சிவத்தலமாக விளங்குகிறது. சிவனின் திருவிளையாடல்களில் 24 திருவிளையாடல்கள் இக்கோயிலில் நடத்தப்பட்டுள்ளது. இக்கோயிலின் வைத்தியநாதர் நோய் தீர்க்கும் பெருமான் என்பதால் இங்கு மகா அஷ்டமியன்று பக்தர்கள் சாப்பிட்ட இலைமீது அங்கப் பிரதட்சினம் செய்யும் வழக்கம் உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-இராஜபாளையம் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 1கிமீ தொலைவில் நகராட்சி எல்லைக்குள் இக்கோயில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

முன் காலத்தில் புனல்வேலி என்னும் பகுதியில் ஏழை சிவபக்தன் தன் மனைவியுடன் நாள் தோறும் சிறப்பாக சிவ பூஜை செய்து வந்தான். இவனது மனைவிக்கு பேறுகால நேரம் வந்ததும் தன் தாய்க்கு சொல்லி அனுப்பினாள். ஆனால் பத்து மாதம் முடிவடைந்ததும் தாய் வரவில்லை. எனவே தானே தன் தாய் இருக்குமிடத்திற்கு சென்றாள். சிறிது தூரம் சென்றதும் அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சிவ பக்தையான அவள், ஈசனே! காப்பாற்று என அழுது புலம்பினாள். இந்த அழு குரலைக்கேட்ட, தாயும் தந்தையுமான ஈசன் கர்ப்பிணியின் தாயாக மாறி சிறிதும் வலி ஏற்படாமல் சிறப்பாக பிரசவம் பார்த்தார். அப்போது அந்த பெண்ணுக்கு தாகம் ஏற்பட்டது. தாகத்திற்கு தண்ணீர் கொடுக்க தன் விரல் நுனியால் பூமியை கீற, அதிலிருந்து நீர் பீறிட்டு வந்தது. இந்த நீரே உனக்கு மருந்து என்று கூறியவுடன் அந்தப்பெண்ணும் நீரை பருகினாள். இது வரை தனக்கு பிரசவம் பார்த்தது வைத்தியநாதர் தான் என்பது அந்தப்பெண்ணுக்கு தெரியாது. இந்த சம்பவம் எல்லாம் முடிந்த பின் அந்த பெண்ணின் உண்மையான தாய் வந்து சேர்ந்தாள். அதற்குள் பிரசவம் முடிந்து விட்டதை ஆச்சரியத்துடன் தன் மகளிடம் கேட்ட போது, வைத்தியநாதப்பெருமான், அன்னை சிவகாமியுடன் விடை வாகனத்தில் காட்சி தந்தார். அத்துடன், “”பெண்ணே உனது தவத்தினால் தான் யாமே உனக்கு பிரசவம் பார்த்தோம். இந்த தீர்த்தம் உனது தாகம் தீர்த்து காயம் தீர்க்கவும் பயன் பட்டதால் இன்று முதல் இந்த தீர்த்தம் “காயக்குடி ஆறு’ என அழைக்கப்படும். இதில் மூழ்கி எழுந்து என்னை வழிபடுபவர்கள் எல்லா பயமும் நீங்கி சுகபோக வாழ்வை அடைவர்” என்று அருளினார்.

நம்பிக்கைகள்

வயிற்று வலி தீர்க்கும் வைத்தியநாதர் என்பதால் வயிறு சம்பந்தமான நோய்கள் மற்றும் கர்ப்பசம்பந்தமான நோய்களுக்கு வேண்டிக்கொள்கிறார்கள். சுகப்பிரசவம் நிச்சயம் நடக்கும் என்பதால் சிவனையும், அம்மனையும் அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

மதுரையை சேர்ந்த வணிகர்கள் கேரளா சென்று மிளகு வாங்கி வந்து அதற்கென கடமை செலுத்தாமல் ஏமாற்றி, மிளகை உளுந்தென பொய் சொல்லி மதுரை சென்று பார்த்த போது மிளகு எல்லாம் உளுந்தாக இருந்தது. அவர்கள் மதுரை சொக்கநாதரிடம் சென்று முறையிட்டபோது, அவர் வைத்தியநாதரை வணங்கினால் அருள் புரிவோம் என்று கூறினார். அதன்படியே நடக்கவும் செய்தது.இந்த வைத்தியநாத சுவாமி இத்தலத்தில்,சூரியன் பூசித்தது, துருவாசர் பூசித்தது, ஞான உபதேசம் பெற்றது, முனிவர் இருவர் பூசித்தது, திருநடனம் புரிந்தது, பிரம்ம தேவன் பூசித்தது, அக்கினி சன்மன் பூசித்தது, பாசதரன் முக்தி பெற்றது, வெண்குட்டம் தீர்ந்தது, அகத்தியர் பூசித்தது, அகத்தியர் மேன்மை பெற்றது, படிக்காசு வைத்தது, காசு வாசி வாங்கி கொடுத்தது, சந்திரன் சய நோய் தீர்த்தது, ஆ முகமானது- ஆ முகம் தீர்ந்தது, மிளகு பயறானது, பயறு மிளகானது, மட்குடம் பொற்குடமானது, வாணன் தலை வெடித்தது, தாதன் கண் பறித்தது, வணிகன் பொன் மடிப்பையை தந்தது, பாவையருக்கு திரவியம் கொடுத்தது, வலையனுக்கு கண் கொடுத்தது, பிரகசேனன் முக்தி பெற்றது போன்ற 24 திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். இத்தல இறைவனை பிரம்மன், இந்திரன், தேவர்கள், சூரியன், சந்திரன், துருவாசர், அகத்தியர் ஆகியோர் வழிபட்டதாலும், இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு சிவன் வீடுவீ பேற்றை அருளுவதாலும் இத்தலம் கைலாயத்திற்கு சமமாக கருதப்படுகிறது. ஆடல் பாடல்களில் வல்லவரான இருவர் இத்தல நாயகன் முன் ஆடிப்பாடி இறைவனை மகிழ்வித்ததால், இறைவனும் மகிழ்ந்து அவர்களுக்கு பொன், பொருள் தந்து வீடு கட்டித்தர ஆணையிட்டார். அன்று முதல் இந்த இடம் மடவார் வளாகம் என அழைக்கப்பட்டது. (மடவார்- பெண்கள், வளாகம்- இடம்).

திருவிழாக்கள்

சிவராத்திரி, பிரதோஷம், மற்றும் அம்மனுக்குரிய செவ்வாய், வெள்ளி, போன்ற நாட்களில் சிறப்பாக நடக்கிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஸ்ரீவில்லிபுத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஸ்ரீவில்லிபுத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top