பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் கொண்ட கல்வெட்டுகள் – புகைப்படத் தொகுப்பு
எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் சரித்திர புகழ்பெற்றது. இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன.
இந்திய தொல்பொருள் ஆய்வு துறை சார்பில் எழுதப்பட்டுள்ள தென் இந்திய கல்வெட்டுகள் குறித்த புத்தகங்கள் மற்றும், தமிழ்நாடு தொல்லியில் துறை சார்பில் வெளியிட்டுள்ள கல்வெட்டு குறித்த புத்தகங்களில் இந்த கல்வெட்டுகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறுகிறார் வரலாற்று ஆர்வலரும் சோழ மண்டல வரலாற்று தேடல் குழு தலைவருமான உதயசங்கர். பின்வரும் தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
பொன்னியின் செல்வன் கதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவன் பெயர் தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டினில் உள்ளது. வல்லவரையன் வந்தியத்தேவன் பற்றிய கல்வெட்டுகள் தஞ்சை பெரிய கோவில், பிரம்மதேசம்,குந்தவை ஜீனாலயம், விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோவில் போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன.
அவை அனைத்தும் வந்தியத்தேவனின் ஆறு மனைவிகள் அளித்த நிவந்தங்களே. மேற்கண்ட தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டும் வந்தியத்தேவனின் மனைவியும் அருமொழியின் தமக்கையுமான குந்தவை பிராட்டியார் அளித்த நிவந்தக் கல்வெட்டே. தஞ்சை பெரிய கோவிலுக்கு எண்ணற்ற பொன்னும் மணியும் அள்ளிக் கொடுத்ததுடன் தனது தாய் தந்தையான வானவன் மாதேவி மற்றும் சுந்தர சோழரது செப்புச் சிலைகளையும் செய்து கோவிலுக்கு அளித்துள்ளார் குந்தவை.
குந்தவையை குறிப்பிடும் இடங்களிலெல்லாம் வல்லவரையர் வந்தியத்தேவர் மஹாதேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவை என்றே குறிப்பிடப்படுகிறார். இந்த ஒரு வரியை வைத்தே கதை நாயகனாக உருவாக்கி வந்தியத்தேவருக்கு அழியாப்புகழை அளித்து விட்டார் அமரர் கல்கி.
பழுவூர் குறுநில மன்னர் பழுவேட்டரையர் பெயர் பழுவூர் கோவில் கல்வெட்டில் உள்ளது. பொன்னியின் செல்வனில் அண்ணன் தம்பியாக இரு பழுவேட்டரையர்கள் காட்டப்பட்டிருப்பர்.
உண்மையில் அவ்வாறு இரு பழுவேட்டரையர்கள் இருந்திருப்பதையும் உடையார்குடி கல்வெட்டின் மூலம் அறிகிறோம். இங்கேஅளிக்கப்பட்டுள்ள கல்வெட்டு பழுவூர் அவனிகந்தர்வ ஈஸ்வரம் கோவிலில் உள்ளது. பழுவூரை தலை நகராகக் கொண்டு சிற்றரசர்களாக இருந்த பழுவேட்டரையர்களில் சிலர் கண்டன் மறவனார், மறவன் கண்டனார், கண்டன் சத்ருபயங்கரர் போன்றோராவர். ராஜராஜர் காலத்திற்கு பிறகு பழுவேட்டரையர் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை.
சிவநெறிச் செல்வர் ஸ்ரீ கண்டராதித்தர் பெயர் திருநல்லம் கல்வெட்டினில் உள்ளது. ஸ்ரீராஜராஜருக்கு அருமொழி எனும் இயற்பெயர் இருப்பது திருவாலங்காடு செப்பேடு, திருவிந்தளூர் செப்பேடு போன்ற செப்பேடுகள் மூலமும் வேறு சில கல்வெட்டாதாரங்கள் மூலமும் தெரிய வருகிறது.
அருமொழிதேவ ஈஸ்வரம் எனும் கோவில் ராஜராஜ சோழராலேயே குடந்தை அருகே பண்டைய பழையாறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்ததற்கு நமக்கு திருநரையூர் கல்வெட்டு ஆதாராமா உள்ளது. அருமொழி தெரிஞ்ச கைக்கோளப்படை, அருமொழி சதுர்வவேதி மங்கலம், அருமொழிசேரி, அருமொழி வாய்க்கால் என அவரது பெயர் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேற்காண் கல்வெட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ளது. இதில் ராஜராஜரது பெயருடன் அருமொழிதேவ வாய்க்கால் எனும் வாய்க்கால் பகுதி நிலங்களின் எல்லையை குறிக்கும் போது குறிப்பிடப்படுகிறது. அருமொழி எனக் கல்வெட்டுகளிலும், அருண்மொழி எனச் செப்பேடுகளிலும் குறிப்பிடப்பட்டாலும் இலக்கண விதிப்படி அமரர் கல்கி அவர்கள் எடுத்தாண்ட அருள்மொழி என்னும் பெயரும் சரியே.
ஸ்ரீ மதுராந்தக தேவரான உத்தம சோழர் பெயர் திருக்கோடிக்கா கல்வெட்டினில் உள்ளது. ராஜராஜரது தந்தை சுந்தர சோழருக்கு பராந்தகன் எனப் பெயரும் உண்டு. அரிஞ்சய சோழரின் மகனாதலால் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டில் அரிஞ்சிகை பிராந்தகர் என்றும் அவர் குறிப்பிடப்படும் சிறப்பான கல்வெட்டு உடையார்குடி அனந்தீஸ்வரர் கோவிலில் உள்ளது.
இக்கல்வெட்டில் அரிஞ்சயரது பட்டத்தரசியும் சுந்தர சோழரது தாயுமான வீமன் குந்தவை ( சோழர் வரலாற்றில் வரும் முதல் குந்தவை) நிறைய தானங்கள் அனந்தீஸ்வரர் கோவிலுக்கு வழங்கியுள்ள செய்தி பதிவாகியுள்ளது.
வானவன்மாதேவி பெயர் உடையார்குடி கல்வெட்டினில் உள்ளது. இக்கல்வெட்டில் வரும் வானவன்மாதேவி சுந்தர சோழரது பட்டத்தரசியாவார். சுந்தர சோழர் இறந்த பின் அவருடன் சிதையேறி உயிர் துறந்த மாதரசி வானவன்மாதேவி. அவரது பெயரில் வானவன்மாதேவி சதுர்வேதி மங்கலம், வானவன் மாதேவி வாய்க்கால், வானவன்மாதேவி வதி என பல இடங்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
உடையார்குடியிலுள்ள இக்கல்வெட்டு வானவன்மாதேவி வாய்க்கால் ஒன்றை குறிப்பிடுகிறது. கண்டியூர் அருகே வானவன்மாதேவிக்கும், சுந்தரசோழருக்கும் பள்ளிப்படை இருந்திருப்பதை கண்டியூர் கோவில் கல்வெட்டாதாரங்கள் மூலம் அறிகிறோம்.
வீரபாண்டியன் தலைக் கொண்ட கோப்பரகேசரியான ஆதித்த கரிகாலர் கல்வெட்டு குடந்தை நாகேஸ்வரன் கோவில் கல்வெட்டினில் உள்ளது. சிவநெறிச் செல்வராக அறியப்படும் கண்டராதித்த சோழர் முதலாம் பராந்தகரின் புதல்வர். இவரது பட்டத்தரசியே எண்ணற்ற கோவில் திருப்பணிகள் செய்திட்ட செம்பியன்மாதேவியார்.
மேற்கெழுந்தருளிய தேவர் எனப் பெயரும் கொண்ட கண்டராதித்தர் எழுதிய திருவிசைப்பா திருமுறைகளுள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு உள்ள கோவில் குடந்தை அருகேயுள்ள திருக்கோடிக்காவல் ஆகும். பல கோவில்களிலும் சிவலிங்கத்தை வணங்குவது போல் இவரது சிலை செம்பியன்மாதேவியாரால் அமைக்கப்பட்டிருக்கும்.
சோழப் பேரரசி பல கோவில்களை கற்றளியாக்கிய மாதரசி ஸ்ரீ செம்பியன்மாதேவியாரின் பெயர் திருநல்லம் கல்வெட்டினில் உள்ளது. கண்டராதித்த சோழரின் பட்டத்தரசியான செம்பியன்மாதேவியார் எண்ணற்ற கோவில்களில் திருப்பணி செய்து கற்றளியாக மாற்றிக் கட்டிய பெருமையுடையவர்.
மழவரையர் எனும் சிற்றரசர் மகளான இவர் பராந்தகர், கண்டராதித்தர், அரிஞ்சயர்,சுந்தர சோழர்,உத்தம சோழர், இராஜராஜ சோழர் எனும் சோழப்பேரரசர்கள் காலத்தில் வாழ்ந்து திருப்பணி செய்திட்ட பெருமைக்குரியவர். தான் திருப்பணி செய்திட்ட பெரும்பாலானக் கோவில்களில் சிவலிங்கத்தை வணங்குவது போல் தனது சிலையுடன் தனது கணவரது சிலையையும் சேர்த்து அமைப்பது அவரது வழக்கம். இக்கல்வெட்டு உள்ள கோவில் குடந்தை அருகேயுள்ள திருநல்லம் எனப்படும் கோனேரிராஜபுரம் கோவிலாகும்.
ஸ்ரீராஜராஜ தேவரது பெயர் அவரது இயற்பெயரான அருமொழியுடன் (அருள்மொழி வர்மரின் பெயர் கல்வெட்டில் அருமொழி என்று உள்ளது) தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டில் உள்ளது. வல்லவரையர் வந்தியத்தேவர் மஹாதேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் எனக் கல்வெட்டுகளில் குறிக்கப்படும் குந்தவை பிராட்டியார் பல கோவில்களிலும் எண்ணற்ற நிவந்தங்கள் அளித்துள்ளார்.
குறிப்பாக சோழர்களின் ஈடு இணையில்லாத பெருமையான தஞ்சை பெரிய கோவிலுக்கு அவர் பொன்னும் மணியும் என நிறைய நிவந்தங்கள் அளித்துள்ளார். அத்துடன் தனது பெற்றோரான சுந்தரசோழர் மற்றும் வானவன்மாதேவிக்கு செப்புச்சிலைகள்,உமா பரமேஸ்வரி, தட்சிணமேரு விடங்கர் போன்ற இறை உருவங்களை செப்புச் சிலைகளாக செய்து வழிபாட்டிற்காக பெரிய கோவிலுக்கு அளித்துள்ளார். இக்கல்வெட்டு அவரது இந்த நிவந்தத்தை குறிப்பிடும் தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டே.
வல்லவரையன் வந்தியத்தேவன் மஹாதேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார். கல்வெட்டுகளில் வீரபாண்டியன் தலைக் கொண்ட கோப்பரகேசரி எனக் குறிப்பிடப்படும் ஆதித்த கரிகாலர் சுந்தர சோழரின் மூத்த மகனும் ராஜராஜர் மற்றும் குந்தவையின் அண்ணனும் ஆவார்.
இளவரசராக பட்டம் சூட்டப்பட்ட பின் ஆறு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்த அவர் சோழ அரசின் உயரதிகாரிகளாக இருந்த சில பிரம்மராயர்களால் கொல்லப்பட்ட தகவலை உடையார்குடி அனந்தீஸ்வர் கோவில் கல்வெட்டு விளக்குகிறது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு குடமூக்கு என அழைக்கப்பட்ட கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் உள்ளது.
அரிஞ்சய சோழரது மகனும் ஆதித்த கரிகாலர், குந்தவை, அருமொழிவர்மர் ஆகியோரது தந்தையுமான சக்கரவர்த்தி இரண்டாம் பராந்தகரான சுந்தர சோழர் பெயர் உடையார்குடி கோவில் கல்வெட்டினில் உள்ளது.
பிற்கால சோழ அரசை பேரரசாக உருமாற்றியது ஆதித்த சோழரின் மகனான முதலாம் பராந்தக சோழரது ஆட்சிக் காலத்திலே தான். மதுரை கொண்ட கோப்பரகேசரி என கல்வெட்டுகளில் அழைக்கப்பட்ட பராந்தகரது ஆட்சிக் காலத்தில் கோவில்களில் முற்காலச் சோழர் கலை செழித்து வளர்ந்தது
தஞ்சை மாவட்டம் திருப்புள்ளமங்கை கோவில் அவரது சிறப்பான கோவில் கட்டடக்கலைக்கும் குறுஞ்சிற்பங்களுக்கும் பெயர் பெற்ற கோவிலாகும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு உடையார்குடி அனந்தீஸ்வரர் கோவிலில் உள்ளது. 90 சாவா மூவாப் பேராடுகள் கோவிலில் நொந்தா விளக்கெரிக்க அளிக்கப்பட்ட தகவலை விளக்குகிறது.
ஆதித்த கரிகாலரரை கொன்ற துரோகிகளான சோமன், ரவிதாஸனான பஞ்சவன் பிரம்மாதிராஜன், அவன் தம்பி பரமேஸ்வரனான இருரேமுடிசோழ பிரம்மாதிராஜன், அவர்கள் உடன்பிறந்த மலையனூரான் ஆகியோரை குறிப்பிடும் முக்கியமான உடையார்குடி கல்வெட்டு. பொன்னியின் செல்வனில் பாண்டிய ஆபத்துதவிகளாகக் காட்டப்பட்டிருக்கும் சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகியோர் உண்மையில் சோழப் பேரரசின் உயரதிகாரிகளாக இருந்தவர்கள்.
பிரம்மராயர் எனும் பட்டம் பெற்றவர்கள். அவர்களது பெயர்கள் துரோகிகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ள உடையார்குடி அனந்தீஸ்வரர் கோவில் கல்வெட்டு இது. ராஜராஜ சோழரது திருமுகம் எனக் குறிப்பிடப்படும் திருவோலை ஆணையின்படி பதிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டின் மூலமே மேற்காண் அதிகாரிகளின் அனைத்து சொத்துகளுமே கோவில் பெயரில் கையகப்படுத்தப்பட்ட தகவல் நமக்கு கிடைக்கிறது.
சோழன் தலைக் கொண்ட வீரபாண்டியன் என பெருமையுடன் போடத்தொடங்கி பின் ஆதித்த கரிகாலரால் தலையிழந்த வீரபாண்டியனின் வட்டெழுத்துக் கல்வெட்டு சாலைகிராமத்தில் உள்ளது. ஆதித்த கரிகாலரால் தலை வெட்டப்பட்ட பாண்டியன் வீரபாண்டியன் என்பவராவார்.
சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் ஏற்கனவே நடந்த போர் ஒன்றில் சோழ இளவரசர் ஒருவரைக் கொன்று சோழன் தலைக் கொண்ட வீரபாண்டியன் எனக்குறிப்பிடத் தொடங்கினார் வீரபாண்டியன் என்பதை சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் கோவிலில் உள்ளது. இவரை சேவூர் போர்க்களத்தில் வென்ற ஆதித்த கரிகாலர் அவரது தலையை வெட்டி வீரபாண்டியன் தலைக் கொண்ட கோப்பரகேசரி எனும் பட்டம் பெற்றார்.
மதிரை கொண்ட கோப்பரகேசரி முதலாம் பராந்தக சோழர்…உடையார்குடி கல்வெட்டில் உள்ளது.இரண்டாம் பராந்தகரான சுந்தர சோழருக்குப் பின் ஆட்சிக்கு வருபவர் கண்டராதித்தர் குமாரனும் ராஜராஜர் சிற்றப்பனுமான உத்தம சோழரே. அவர் சிம்மாசனம் ஏற ஆசைப்பட்டதால் அரியணையை விட்டுக்கொடுத்ததாக திருவாலங்காடு செப்பேடு கூறுகிறது.
ஸ்ரீ மதுராந்தக தேவரான உத்தமசோழர் கோப்பரகேசரி எனும் பட்டம் தாங்கியவர். இங்கேயுள்ள கல்வெட்டு இவரது ஆட்சியில் செம்பியன்மாதேவியாரால் திருப்பணி செய்யப்பட்ட குடந்தை அருகே உள்ள திருக்கோடிக்காவலில் உள்ள நிவந்தக் கல்வெட்டாகும்.