பேரங்கியூர் திருமூலநாதர் திருக்கோயில், விழுப்புரம்
முகவரி
பேரங்கியூர் திருமூலநாதர் திருக்கோயில், பேரங்கியூர், விழுப்புரம் மாவட்டம் – 607 107.
இறைவன்
இறைவன்: மூலஸ்தானமுடைய மகாதேவர்
அறிமுகம்
சென்னையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் 10 கி.மீ. தொலைவில் பேரங்கியூர் அமைந்துள்ளது. திருவெண்ணெய்நல்லூர் வழியாகவும், உளுந்தூர் பேட்டை வழியாகவும் பேரங்கியூர் செல்லலாம். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்தில் இருந்து 10ஆவது கி.மீ.இல், தென்பெண்ணையாற்றின் தெற்கில் அமைந்துள்ளது கிராமம். பராந்தகச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட திருமூலநாதர் கோயில் இன்றும் நின்றுள்ளது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இந்த ஊரை பேரங்கூர், பேரிங்கூர் என்று குறிக்கின்றன. முதலாம் இராஜேந்திரனின் கல்வெட்டு “இராஜேந்திர சோழ வளநாட்டில் திருமுனைப் பாடி நாட்டில், பேரிங்கூர் பிரமதேயம் அமைந்திருக்கிறது” என்கிறது. கல்வெட்டுகளில் கோயில் பெயர் மூலஸ்தானமுடையார் கோயில் என்றும், இறைவன் மூலஸ்தானமுடைய மகாதேவர் என்றும் குறிக்கப்படுகின்றன. பராந்தகன் தொடங்கி பல்வேறு அரசர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. திருமூலநாதர் கோயிலில் முற்காலச் சோழர்களின் எழில்மிகு சிற்பங்கள் அமைந்துள்ளன. அவை தனிச்சிறப்புடையவை.திருமூலநாதர் கோயிலின் திருச்சுற்றில் உள்ள விநாயகர் சிற்பம் சிறப்பு வாய்ந்தது. பொதுவாக சிவபெருமான்தான் கையில் மான் ஏந்தியிருப்பார். ஆனால் இங்குள்ள விநாயகர் மான் ஏந்தி இருப்பது தனிச் சிறப்பிற்குரியது என்கின்ற னர் ஆய்வாளர் பெருமக்கள்.
புராண முக்கியத்துவம்
திருமூலநாதர் கோயில் கருவறை, அர்த்தமண்டபம் இரண்டும் கோயில் கட்டப்பட்டக் காலத்தவையாகும். முகமண்டபம் தற்காலத்தியது. இக்கோயில் தாங்குதளம் முதல் கொடுங்கை வரை கற்றளியாகும். விமானம் செங்கல்லும் சுதையும் கொண்டு கட்டப்பட்டதால் தற்போது விமானம் காணப்படவில்லை. இக்கோயில் முழுவதும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை வெளிப்புறச் சுவரில் அரைத்தூண்கள் நிற்கின்றன. கூரைப்பகுதியில் கொடுங்கைக்குக் கீழே பூதவரி செல்கின்றது. பூதகணங்கள் ஆடல்பாடலுடன் காட்டப்பட்டுள்ளன. கொடுங்கையில் கூடுமுகங்கள் காட்டப்பட்டுள்ளன. தேவகோட்டங்களின் மேற்புறம் மகரத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருவறை மேற்குச் சுவரில் தாங்குதளப் பகுதியில் அளவு கோல் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோல் 365 செ.மீ. நீளம் கொண்டது. சோழர்கள் காலத்தில் இந்த அளவுகோல் நிலம் அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பேரங்கியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விழுப்புரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி