பெரியகுருவாடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
பெரியகுருவாடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில்,
பெரியகுருவாடி, மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614101.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
உமாபரமேஸ்வரி
அறிமுகம்:
திருவாரூர் அருகில் உள்ள லெட்சுமாங்குடி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து தண்ணீர்குன்னம் வழியாக 10 கிமீ தொலைவில் உள்ள பெரிய குருவாடிக்கு செல்லலாம்.
கருங்கற்களைக் கொண்டே கட்டிய கோயில் இது. உலகம் செழிக்கத் தம் திருமுடியில் இருந்து கங்கையைப் பூமியில் விடுவித்த சிவபெருமானின் ‘கங்கா விசர்ஜன’ திருவுருவத்தைக் கருவறையில் சிவலிங்க மூர்த்தத்துக்குப் பின்புறம் பிரதிஷ்டை செய்திருக்கிறார். காலம் பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி ஆகும். மேலும், காவிரியைத் தம் கமண்டலத்தில் இருந்து விடுவித்த அகத்தியரைப் போற்றும் வகையில் கோயிலுக்கு `அகத்தீஸ்வரம்’ என்னும் பெயரையும் சூட்டினார்.
இறைவன் அகத்தீஸ்வரர் இறைவி உமாபரமேஸ்வரி. பரம்பரையாக வேளாளர்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்த இந்தக் கோயில், காலப்போக்கில் சிதிலம் அடைந்து விட்டது. சிதிலம் அடைந்த ஆலயத்தைப் புதுப்பிக்க விரும்பி, ஊர்மக்கள் ஒரு திருப்பணி கமிட்டி ஏற்படுத்தி, குடமுழுக்கும் கண்டுள்ளனர்.
கிழக்கு நோக்கிய இறைவன் கருவறையில் அகத்தீஸ்வரர் உடன் கங்காவிசர்ஜனர் உள்ளார் இடைநாழி, அர்த்தமண்டபம் என உள்ளது. அர்த்தமண்டபத்தில் அகத்தியர் இறைவனை வழிபடும் கோலம் காலடியில் பகீரதன் இருக்கும் ஓவியம் வரையப்பட்டு உள்ளது. இதனை தாண்டி மகாமண்டபம் ஆகியவை இருந்திருக்க கூடும். இவ்விடம் இப்போது காலியாக உள்ளது அதனை தாண்டி நான்கு தூண்கள் கொண்ட நந்தி மண்டபமும் பலிபீடமும் உள்ளது.
கருவறை வாயிலில் உள்ள மாடங்களில் விநாயகரும் முருகனும் உள்ளனர். கோஷ்டங்களில் தென்புறம் தக்ஷணமூர்த்தி அற்புதமான அழகுடன் காட்சி தருகிறார். மேற்கில் லிங்கோத்பவரும் வடக்கில் துர்க்கையும் உள்ளனர். சிற்றாலயங்களில் விநாயகர் மற்றும் ஜேஷ்டாதேவி, முருகன் ஆகியோர் உள்ளனர். சண்டேசர் வழமையான இடத்தில் உள்ளார். கோஷ்டத்தில் இருக்கவேண்டிய நர்த்தன விநாயகரை சிற்றாலயத்தில் வைத்துள்ளனர்.
வடகிழக்கில் ஒரு தகர கொட்டகை மண்டபத்தில் கை கூப்பிய நிலையில் ஒரு அடியாரின் சிலை உள்ளது யாதென தெரியவில்லை. புதிய சேர்க்கையாக நவகிரகங்கள் உள்ளன. கோயிலின் தென்புறம் பெரிய குளம் ஒன்றுள்ளது. இங்கு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், பித்ரு தோஷங்கள் நீங்கிவிடுவதாக ஐதீகம். மேலும், திருப்பாற்கடலில் முதலில் தோன்றிய ஜேஷ்டா தேவி மாந்தன் மாந்தியுடன் உள்ளார் இவரை வழிபாட்டு வாகன விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரியகுருவாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி