Thursday Dec 26, 2024

பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி (குபேரலிங்கேஸ்வரர்) திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,

பெரம்பூர், தரங்கம்பாடி தாலுக்கா,

நாகப்பட்டினம் மாவட்டம் –  609 406.

போன்: +91- 4364 -253 202, 94866 31196

இறைவன்:

சுப்பிரமணிய சுவாமி, குபேரலிங்கேஸ்வரர்

இறைவி:

வள்ளி, தெய்வானை, ஆனந்தவல்லி அம்பாள்

அறிமுகம்:

 நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து சங்கரன்பந்தல் வழியே நாகப்பட்டினம் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பெரம்பூர் எனும் கிராமம். பிரம்பு மரங்கள் அடர்ந்த பகுதியாக திகழ்ந்ததால் இந்த ஊர் பிரம்பூர் எனப்பட்டு பெரம்பூர் என ஆனது. கோயில் தல விருட்சம் பிரம்பு மரம். சுமார் இராண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் கருவறையில் மூலவராக சுப்ரமணியரும் சன்னதிக்கு பின்புறம் வடமேற்கு திசையில் குபேரலிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அம்பாளின் திருநாமம் ஆனந்தவல்லி அம்பாள்.

புராண முக்கியத்துவம் :

 தட்சனின் மகளாக தாட்சாயணி என்னும் பெயரில் பார்வதிதேவி பிறந்து சிவனை மணந்தாள். ஒரு சமயம் தட்சன், சிவனை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினான். இதில் பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் கலந்து கொண்டார். இதனால் அவருக்கு சாபம் ஏற்பட்டது. பிரம்மா சிவனிடம் சாப விமோசனம் வேண்டினார். மன மிரங்கிய சிவன் பூலோகத்தில் தீர்த்தம் உண்டாக்கி என்னை வழிபட்டால் சாபம் நீங்கும் என்றார். அதன்படி வழுவூர் என்னுமிடத்தில் வீரட்டேஸ்வரர் என்னும பெயரில் சிவலிங்கம் எழுப்பி வழிபட்டு பிரம்மா சாபம் நீங்கப்பெற்றார். அத்துடன் இத்தலத்தின் அருகில் உள்ள பிரம்ம மங்களபுரத்தில் (பெரம்பூர்) தந்தைக்கு உபதேசம் செய்த சுப்பிரமணியரை வணங்கி ஞான உபதேசமும் பெற்றார். தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்திய சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். அவனது உடலின் ஒரு பகுதி மயிலாக மாற்றப்பட்டது. அது இத்தலத்திற்கு வந்து ஞான உபதேசம் பெற்றது.

தந்தை ஸ்தானத்தில் மகன்: பொதுவாக சிவன் கோயில்களில் சிவன் சன்னதிக்கு பின் புறம் வட மேற்கு திசையில் முருகனுக்கு தனி சன்னதி இருக்கும். ஆனால் இத்தலத்தில் முருகன் குருவாக விளங்குவதால், முருகனின் மூலஸ்தானத்திற்கு பின்புறம் வட மேற்கு திசையில் தனி சன்னதியில் குபேரலிங்கேஸ்வரரும், ஆனந்தவல்லி அம்மனும் வீற்றிருந்து அருளுகின்றனர். இதனால் இத்தலத்தில் தந்தை ஸ்தானத்தில் மகனும், மகன் ஸ்தானத்தில் தந்தையும் அருளுவதாக கூறப்படுகிறது. இது போன்ற அமைப்புள்ள கோயில்களை காண்பது மிகவும் அரிது. முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் ஆறுமுகத்துடன் திகழ்கிறார். பெரும்பாலான முருகன் கோயில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால் இங்குள்ள மூலஸ்தானத்தில் முருகனின் வாகனமான மயிலின் தலைப்பகுதி இடது பக்கம் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.மயிலுக்கு இத்தலத்தில் தான் உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது. தெய்வானை இங்கு தனி சன்னதியில் அருளுகிறாள்.

நம்பிக்கைகள்:

திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்து பலன் அடைகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

      ஞானகுரு: தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்த சூரபத்மனை முருகப்பெருமான் அழித்தார். மயிலாகவும், சேவலாகவும் மாறிய சூரபத்மன் முருகனின் ஞான உபதேசம் பெற விரும்பினான். பிரம்மனுக்கும், மயிலுக்கும் முருகன் ஞான உபதேசம் செய்ததால், இத்தல முருகன் ஞான குருவாக விளங்குகிறார். பெரும்பாலான முருகன் கோயில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால் இங்கு முருகனின் இடது பக்கம் திரும்பியிருப்பது சிறப்பம்சமாகும்.

ஆறுமுகன்: மூலஸ்தானத்தில் முருகப்பெருமான் ஆறுமுகம், 12 திருக்கரங்களுடன், மயில் மீது அமர்ந்தபடி, வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். இங்கு முருகப்பெருமான் ஞான குருவாக விளங்குகிறார். எனவே குக தட்சிணாமூர்த்தி, குக சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர். அப்பர் தேவாரத்தில் இத்தலம் தேவார வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. தை ஞாயிற்றுக் கிழமைகளில் இங்குள்ள துர்க்கைக்கு விசேஷமான முறையில் விளக்கு பூஜை செய்யப்படுகிறது.

கோயில் பிரகாரத்தில் ஆதி விநாயகர், மகாவிஷ்ணு, ஐயப்பன், துர்க்கை, பிரம்மபுரீஸ்வரர், ஆனந்தவல்லி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, பிரம்மா, நந்தி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கிழக்கு நோக்கிய நிலையில் ஐந்து நிலைகளுடன் கூடிய பிரமாண்ட கோபுரம். இரண்டு பிரகாரங்கள், அர்த்தமண்டபம், மகாமண்டபம் என கோயில் பெரியதாக அமைந்துள்ளது. கோயில் வாசலில் விநாயகருக்கும் இடும்பனுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. மிளகு செட்டியார் என்பவர் இத்தலத்தில் தங்கி இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளார். எனவே அவரது சிலை நந்திக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது. திருவாதிரை நாளில் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறத

திருவிழாக்கள்:

பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், சித்ரா பவுர்ணமி, தனுர்மாத பூஜை, தைப்பொங்கல்.

காலம்

2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெரம்பூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top