பின்னலூர் சுப்பிரமணியர் திருக்கோயில், கடலூர்
முகவரி :
பின்னலூர் சுப்பிரமணியர் திருக்கோயில்,
பின்னலூர்,
கடலூர் மாவட்டம் – 608704.
இறைவன்:
சுப்பிரமணியர்
இறைவி:
வள்ளி தெய்வானை
அறிமுகம்:
கடலூர் மாவட்டம் பின்னலூர் கிராமத்தில் சுப்ரமணியர் கோயில் உள்ளது. சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கடலூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
அந்தக் காலத்தில் விவசாயத்தை பிரதானமாக கொண்ட இந்த கிராமத்தில் சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு முருகப்பெருமானின் அடியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். முருகனை காண கோயில் கோயிலாக சென்று வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக அயல்நாட்டுக்கு வேலை செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அவருடைய நினைவு முருகனை சுற்றி இருந்தன. அந்த சமயத்தில் அங்கு ஒரு வயதான பெரியவர் ஒருவர் அவரை சந்தித்து ஊருக்கு சென்று உன் சக்திக்கு உட்பட்ட ஒரு முருகன் ஆலயம் கட்டு என்று கூறிய அவர் மறைந்துவிட்டார்.
ஊருக்கு சென்று கோயில் கட்டுவது என்றெல்லாம் யோசிக்காமல் பல தடைகளை தாண்டி தன் கிராமத்தை வந்தடைந்தார். முதல் வேலையாக கீற்றுக் கொட்டகை ஒன்றினை அமைத்து அங்கு முருகன் சிலையை வைத்து வழிபடத் தொடங்கினார். முருகன் மேல் உள்ள பற்றின் காரணமாக அவரை மக்கள் குப்புசாமி சித்தர் என அழைக்கத் தொடங்கினர். பிற்காலத்தில் ஓடுகள் வேய்ந்த கட்டடமாக மாறியது. வயது மூப்பு காரணமாக சித்தர் மரணமடையவே அருகிலேயே அவரது உடலை அடக்கம் செய்து அனுஷ்டானம் நிறுவினார்கள்.
சிறிது காலத்திலேயே பராமரிப்பது நின்று கோயில் சிதிலமைய ஆரம்பித்தது. பின்னர் புதியதாக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சிலை நிறுவப்பட்டு ஏப்ரல் 8-ம்நாள் 2022 அன்று கோயிலுக்கு குடமுழுக்கு வைபவம் நடைபெற்றது.
நம்பிக்கைகள்:
இத்தல முருகனை வழிபட்டால் எப்பேர்ப்பட்ட தடையும் விலகி திருமணம் கைகூடுகிறது. அவர்கள் திருமணம் முடிந்தவுடன் தம்பதி சமேதராக இவ்வாலயத்திற்கு வந்து சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி கொள்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத நாட்களில் சுப்பிரமணியருக்கு அபிஷேக ஆராதனை செய்து சேவல், கொடி வைத்து வழிபடுகிறார்கள். அப்படி செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கொடுக்கிறான் குமரன் என பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.
வேலை வேண்டுவோர் வேலனிடம் தங்கள் கல்வி சான்றிதழ் வைத்து பூஜை செய்தால் அவர்களுக்கு உரிய வேலை கிடைக்கிறது. அப்படி கிடைத்த வேலையின் முதல் மாத சம்பளத்தில் காணிக்கை வழங்குவதும் உண்டு.
கஷ்டம், மனக் கஷ்டம் என எந்தக் கஷ்டமாக இருந்தாலும் சஷ்டி கிருத்திகை தினங்களில் முருகனுக்கு பன்னீரால் மனம் குளிர அபிஷேகம் செய்து தேனும் தினைமாவும் சமர்ப்பித்து பூஜை செய்தால் அனைத்து கஷ்டங்களும் நீங்குகிறது.
சிறப்பு அம்சங்கள்:
கோயிலுக்கு மேற்கு வடக்கு என இருவாயிகள் உள்ளன. வடக்கு வாசல் முகப்பில் தந்தை அருகலிருக்க முருகப் பெருமான் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சி உள்ளது. பிரதான வாசல் மேற்கு வாசல் திகழ்கிறது. முன்னாள் பலிபீடம் மயில் அமர்ந்திருக்க அருகில் நந்தி மற்றும் சிவலிங்கத்துடன் குப்புசாமி சித்தரின் அனுஷ்டானம் ஆதிமுருகன், சரஸ்வதி, விநாயகர், நாகர்கள் சன்னதியும் அமைந்துள்ளது.
வாசலருகே திருமடத்தில் விநாயகர் இடும்பன் மகா மண்டப முகப்பில் திருமண கோலத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் உருவமும் மகாமண்டபத்தில் வள்ளலார், ஐயப்பன் சன்னதியும், அர்த்தமண்டபத்தில் ஐம்பொன்னாலான உற்சவர் சிலையும் உள்ளது. தொடர்ந்து கருவறையில் மூலவர் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சமேதராக நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி அற்புத காட்சி தருகிறார் கருவறை விமானத்தில் முருகனை வழிபட்ட அருளாளர்கள் சித்தர்கள் வடிவங்களோடு அறுபடை வீடுகளும் சுதை உருவமாக இடம்பெற்றுள்ளது. கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை மற்றும் ஓவியமாக அறுபடை வீடுகளும் உள்ளது.
திருவிழாக்கள்:
பங்குனி மாத பூச நட்சத்திரம் அன்று குப்புசாமி சித்தர் அவர்களின் குரு பூஜை நடைபெறும். அன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கந்தசஷ்டி, கவசம் கந்தகுரு கவசம் என இரண்டு பக்தர்களால் பாராயணம் செய்யப்படும். பங்குனி உத்திரம் பத்து நாள் உற்சவமாக நடைபெறும் 10 நாட்களும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறும். அன்று பல விதமான காவடிகள் பக்தர்கள் சுமந்து சுமந்து வருவார்கள். சிறப்பு அன்னதானமும் நடைபெறும். வைகாசி விசாகம் நாள் உற்சவமாக சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, அன்னதானம் என அனைத்தும் நடைபெறும். நட்சத்திர நாட்களிலும், தைப்பூசத்தன்று வள்ளலார் சஷ்டி, கிருத்திகை மற்றும் சித்ரா பவுர்ணமி ஆகிய தினங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பின்னலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி