Sunday Nov 24, 2024

பாமியன் புத்தர் சிலை

முகவரி

பாமியன் புத்தர் சிலை, பாமியன் பள்ளத்தாக்கு, ஆப்கனிஸ்தான்

இறைவன்

இறைவன்: கெளதம புத்தர்

அறிமுகம்

பாமியன் புத்தர் சிலைகள் எனப்படுவன, மத்திய ஆப்கனிஸ்தானின், பாமியான் மாகாணத்தின் ஹசாரஜாத் பகுதியில் உள்ள பாமியன் பள்ளத்தாக்கில், மலைச் சரிவுகளில் செதுக்கப்பட்டிருந்த இரு பாரிய (மிகப்பெரிய) புத்தர் சிலைகளைக் குறிக்கும். ஒன்றைப் பெரிய புத்தர் மற்றொன்றைச் சிறிய புத்தர் எனவும் அழைப்பர். ஆறாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இச் சிலைகள், காபுலில் இருந்து வடமேற்கே 230 கிமீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 2500 மீட்டர்கள் உயரத்தில் அமைந்திருந்தன. இச் சிலைகள் இந்திய, கிரேக்கக் கலைகளின் கலப்புப் பாணிக்குச் (காந்தாரக்கலை) சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கின. பருமட்டான உடல் அமைப்பு மணற்கல் பாறையில் நேரடியாகவே செதுக்கப்பட்ட பின்னர், மண்ணையும், வைக்கோலையும் கலந்து நுணுக்க வேலைப்பாடுகள் செய்து அதன் மேல் சாந்து பூசி முடிக்கப்பட்டிருந்தது. இந்த மேல் வேலைப்பாடுகளும் சாந்தும் எப்போதோ கரைந்து போய்விட்டன. எனினும், நிறப் பூச்சுக்களைப் பூசி, முகம், கைகள், உடையின் மடிப்புகள் என்பவற்றை வெளிப்படுத்தும் முயற்சிகள் செய்யப்பட்டிருந்தன. பெரிய சிலை சிவப்பு நிறத்திலும், சிறியது பல்வேறு நிறங்களிலும் காணப்பட்டன. சிலைகளின் கைகளின் கீழ்ப்பகுதி, மண், வைக்கோல் கலவையாலேயே செய்யப்பட்டது, ஆனால், முகத்தின் மேல் பகுதிகள் பெரிய மரத்தாலான முகமூடிகளால் ஆனதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. படங்களில் காணப்படும் வரிசையாக அமைந்த துளைகள் வெளிப் பூச்சுக்களை நிலைப்படுத்துவதற்காக மர ஆணிகள் செலுத்தப்பட்டிருந்த இடங்கள் ஆகும். இஸ்லாமிய ஷாரியாச் சட்டத்தின் படி சிலைகள் தடை செய்யப்பட்டு இருப்பதாகக் கூறி, தலிபான்களின் தலைவரான முல்லா முகம்மத் ஓமார், இப் புத்தர் சிலைகளை உடைக்க ஆணையிட்டதாகச் சொல்லப்படுகின்றது. அவ்வாணையை ஏற்று அந் நாளைய தலிபான் அரசு 2001 ஆம் ஆண்டில் இச் சிலைகளை வெடிவைத்துத் தகர்த்து விட்டது. சுவிட்சர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் இச் சிலைகளை மீள அமைப்பதற்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளன.

புராண முக்கியத்துவம்

பாமியன், இந்தியாவின் காந்தார அரசின் கீழ் இருந்தது. இது, கி.பி பதினோராம் நூற்றாண்டு வரை, சீனாவின் சந்தைகளையும், மேற்காசியப் பகுதிகளையும் இணைத்த பட்டுப் பாதையில் அமைந்திருந்தது. இவ்விடம், பல இந்து, பௌத்த துறவி மடங்களின் அமைவிடமாக இருந்ததுடன், சமயம், மெய்யியல், இந்திய-கிரேக்கக் கலை ஆகியவற்றின் மையமாகவும் விளங்கியது. இரண்டாம் நூற்றாண்டு முதல், ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு நிகழும் வரை இப்பகுதி ஒரு புத்த சமயத் தலமாக விளங்கியது. இப்பகுதி மடங்களில் புத்த சமயத் துறவிகள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் வாழிடங்கள் மலைச் சரிவுகளில் குடையப்பட்ட சிறிய குகைகள் ஆகும். பல துறவிகள் தங்கள் குகைகளைப் புத்தர் சிலைகளாலும், ஒளிர் நிறங்கள் தீட்டப்பட்ட சுவரோவியங்களாலும் அழகூட்டியிருந்தனர். இவற்றுள் முதன்மையானவை பாரிய, நிற்கும் புத்தர் சிலைகளான வைரோசனர் சிலையும், சாக்கியமுனி சிலையும் ஆகும். இவற்றுள் முதல் சிலை 55 மீட்டர்களும் அடுத்தது 37 மீட்டர்களும் உயரம் கொண்டவை. இவையே உலகின் மிகப்பெரிய நிற்கும் புத்தர் சிலைகள் ஆகும். இப் பகுதியின் மிகப் பிரபலமான பண்பாட்டுச் சின்னங்களாக விளங்கிய இச் சிலைகள் இருந்த இடமும், சூழவுள்ள பண்பாட்டு நிலத்தோற்றம், தொல்லியல் எச்சங்கள் அனைத்தும் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. சிறிய சிலை கி.பி 507 ஆம் ஆண்டிலும், பெரியது 554 ஆம் ஆண்டிலும் அமைக்கப்பட்டவை ஆகும். இவை குஷாணர்கள் மற்றும் ஹூணர்களால் அவர்கள் பேரரசுகள் உச்சநிலையில் இருந்தபோது உருவாக்கப்பட்டவை. மேற்குறிப்பிட்ட இனத்தவரே தற்கால ஆப்கனிஸ்தானில் அதிகமாகத் துயரங்களுக்கு உள்ளாகிய ஹசாரா இனத்தவரின் முன்னோர்களாவர். ஹசாரா இனத்தினரின் உடலமைப்பும், முக அமைப்பும், அங்குள்ள குகைகளிலும் பிற சின்னங்களிலும் காணப்படும் சுவரோவியங்களில் காண்பவற்றை ஒத்தவையாக உள்ளன. கி.பி 630 ஆம் ஆண்டில் இப் பகுதியூடாகச் சென்ற சுவான்சாங் என்னும் சீனப் பயணி, பாமியனை ஒரு பௌத்த மையமாக விவரித்துள்ளார். இவரது கூற்றுப்படி இங்கே பத்துக்கு மேற்பட்ட துறவி மடங்களும், ஆயிரத்துக்கு மேற்பட்ட துறவிகளும் இருந்ததாகத் தெரிகிறது. இரண்டு புத்தர் சிலைகளும், பொன்னாலும், மணிகளாலும் அழகுபடுத்தப் பட்டிருந்ததாகவும் அவரது குறிப்புக்கள் காட்டுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இவ்விடத்தில் படுத்த நிலையில் இவ்விரண்டையும் விடப் பெரிய புத்தர் சிலையொன்று இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு காலத்தில் முற்றாகவே அழிந்து விட்டதாகக் கருதப்படுகின்றது. மார்ச் தொடக்கம் முதலாக, டைனமைட்டு வெடி பொருள்களைப் பயன்படுத்திப் பல வாரங்களாக உடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது பல படிகளாக இடம்பெற்றது. முதலில், விமான எதிர்ப்புப் பீரங்கிகளையும், கனரகப் பீரங்கிகளையும் பயன்படுத்தி சிலைகளைத் தாக்கினர். பின்னர் தாங்கி எதிர்ப்புக் கண்ணிவெடிகளை அடிப்பகுதியில் வைத்து வெடிக்க வைத்தனர். மேலும் அப்பகுதி மக்களில் சிலரை மலை மீது ஏற்றி சிலைகளில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த பிளவுகளில் வெடிபொருள்களைப் பொருத்தி வெடிக்கவைத்தனர்.

காலம்

2 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

ஆப்கானிஸ்தானின் தொல்பொருள் ஆய்வு மையம்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பாமியன்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பாமியன்

அருகிலுள்ள விமான நிலையம்

பாமியன்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top