Monday Nov 25, 2024

பஸாரா ஞானசரஸ்வதி அம்மன் திருக்கோயில், தெலங்கானா

முகவரி

பஸாரா ஞானசரஸ்வதி அம்மன் திருக்கோயில், பஸாரா, ஆதிலாபாத் மாவட்டம் – 504101 தெலங்கானா மாநிலம் தொலைபேசி எண் 48752 – 243503

இறைவன்

இறைவன்: சூர்யேஸ்வர சுவாமி இறைவி: ஞானசரஸ்வதி

அறிமுகம்

தெலுங்கானா பகுதியில் உள்ள ஆதிலாபாத் எனும் நகரில் இருந்து சுமார் நாற்பது கிலோ தொலைவில் உள்ளது பஸாரா எனும் சிறிய கிராமம். ஹைதிராபாத்தில் இருந்து சென்றால் சுமார் இருநூறு கிலோ தொலைவு தூரத்தில் உள்ளது. அங்கு உள்ளதே வரலாற்றுப் புகழ் பெற்ற ஞான சரஸ்வதி ஆலயம். மிகவும் புராதனமான கோயில் என்று பெயர்பெற்றது இந்த பஸாரா ஞானசரஸ்வதி கோயில். இக்கோயிலின் தெய்வமாக இருப்பவள் கலைமகளான சரஸ்வதி தேவி ஆவாள். அவள் இங்கு ஞானசரஸ்வதி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறாள். சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் என்று தல வரலாறு கூறுகிறது. இக்கோயிலின் தீர்த்தமாக அருகில் ஓடும் கோதாவரி நதி இருக்கிறது. இந்த ஆலயத்தில் முப்பெரும் தேவியர் இருப்பினும், இங்கு முக்கியமாக வணங்கப்படுபவள் ஞான சரஸ்வதிதேவியே! வியாச முனிவருக்கு முதன்முதலில் தேவி முப்பெருந்தேவியரின் அம்சமாகக் காட்சிகொடுத்து குமராஞ்சலா மலைப்பகுதியில் தேவி ஆவிர்பவித்தபடியால், இந்த ஞான சரஸ்வதிதேவிக்கு கௌமாராச்சல நிவாசினி என்னும் திருநாமமும் உண்டு. 1956 -57 ஆம் ஆண்டுகள் வரை எவரும் சரிவர கவனிக்காமல் சிதைத்து கிடந்த அந்த ஆலயம் அதன் பின்னரே புதுப்பிக்கப்பட்டு பொலிவு பெற்று இன்று பலரும் சென்று வணங்கும் வழிபாட்டுத் தலமாகி உள்ளது.

புராண முக்கியத்துவம்

புராணங்களின் படி இந்த தலத்திற்கு பாரத நாட்டின் இரு பெரும் காவியங்களான ராமாயணம், மகாபாரதம் தந்த வால்மீகி மற்றும் வேத வியாசர் ஆகியோர் வந்து வழிபட்டுள்ளனர். வால்மீகி இங்குள்ள சரஸ்வதி தேவியை வணங்கிய பின்பே தனது ராமாயண காவியத்தை இயற்றியதாக கூறப்படுகிறது. வேத வியாசருக்கு இத்தலத்தில் காட்சி தந்த சரஸ்வதி தேவி லட்சுமி, சரஸ்வதி, சக்தி ஆகிய மூன்று தேவியர்களின் தன்மை கொண்ட ஒரு அம்மன் கோயிலை உருவாக்க சொல்லி, சரஸ்வதியின் கட்டளை படி வியாசர் உருவாக்கிய கோயில் தான் இந்த ஞானசரஸ்வதி தேவி கோயில் என கூறப்படுகிறது.

நம்பிக்கைகள்

இங்கு மூன்று தேவியருக்கும் தனி தனி சந்நிதிகள் இருந்தாலும் ஞானசரஸ்வதி தேவியே பிரதான தெய்வமாக வணங்கப்படுகிறார். எப்போதும் மஞ்சள் காப்புடன் இருக்கும் சரஸ்வதியின் மீதிருக்கும் மஞ்சளே பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. இப்பிரசாதத்தை சாப்பிடுவதால் கல்வி, கலைகளில் சிறக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஊரில் தத்தாத்ரேயருக்கு ஆலயம் இருப்பதால், பஸாரா கிராமம் தத்ததாம் எனப்படும் தத்தாத்ரேயர் தலமாகவும் கருதப்படுகிறது. சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ ந்ருஸிம்ம பாரதி (14-ஆம் நூற்றாண்டு) சுவாமிகள் பாத யாத்திரையாக இங்கு வந்த போது தத்தாத்ரேயரை பிரதிஷ்டை செய்தாராம். இந்த தத்தாத்ரேயரை வணங்க ஞானம் கைகூடுமென்று நம்பப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

நாட்டில் சரஸ்வதி தேவிக்கென அமைந்துள்ள மிகச் சில கோயில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள கோயில் கருவறையில் ஞானசரஸ்வதி தேவி வீணை , அட்சமாலை, ஏடு தாங்கி அருள்புரிகிறாள். இவள் அருகிலேயே மகாலட்சுமி காட்சி தர, மகாகாளி தனிச் சன்னதியில் ஆலயப் பிரகாரத்தில் வீற்றிருப்பது சிறப்பு. ஆலயத்தின் முன்புள்ள மூன்று நிலை ராஜகோபுரம் தாண்டி கொடி மரத்தைத் தரிசித்துவிட்டு உள்ளே நுழையும்போது, அங்கு சூர்யேஸ்வரசுவாமி சிவலிங்க ரூபத்தில் உள்ளார். இந்த லிங்கத்தின்மேல் தினமும் சூரிய கிரகணங்கள் படுவதாலேயே சூரியன் வழிபடும் சிவபெருமான் என்ற பொருளில் இவருக்கு ஸ்ரீ சூர்யேஸ்வர சுவாமி என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த பஸாரா ஆலயத்தைச் சுற்றி எட்டு புனித தீர்த்தங்கள் உள்ளன. அவை இந்திர, சூர்ய, வியாச, வால்மீகி, விஷ்ணு, விநாயக, புத்ர, சிவ தீர்த்தங்களாகும். வால்மீகி முனிவர் இத்தலத்து சரஸ்வதிதேவியை வழிபட்ட பின்னரே இராமாயணத்தை எழுத ஆரம்பித்தாராம். ஆலயத்தில் வால்மீகி முனிவரின் சன்னதியும் அருகில் அவரது சமாதியும் உள்ளன.

திருவிழாக்கள்

நவராத்திரி, வசந்த பஞ்சமி, சரஸ்வதி பூஜை, மகா சிவராத்திரி, மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜை, விஜயதசமி தினங்களில் இக்கோயிலில் குழந்தைகளுக்கு நடக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து தங்கள் பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொள்கின்றனர். அப்போது சரஸ்வதியை வணங்கி குழந்தைகளுக்கு எழுத்தறிவிப்பதால் குழந்தைகள் கல்வி மற்றும் கலைகளில் சிறப்பதாக கூறுகிறார்கள்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பஸாரா

அருகிலுள்ள இரயில் நிலையம்

பஸாரா

அருகிலுள்ள விமான நிலையம்

ஹைதராபாத்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top