Thursday Dec 19, 2024

பரிசல்துறை அய்யாளம்மன் திருக்கோவில், திருச்சி

முகவரி

பரிசல்துறை அய்யாளம்மன் திருக்கோவில், பரிசல்துறை, காவேரி கரை, திருச்சி மாவட்டம் – 621005.

இறைவன்

இறைவி: அய்யாளம்மன்

அறிமுகம்

திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் காவிரி கரையோரம் பரிசல் துறையில் அய்யாளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி காட்சி தரும் இந்த ஆலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கோவில் முன்பு இரண்டு குதிரை சிலைகள் கம்பீரமாக உள்ளன. ஆலயத்திற்குள் நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. வடக்கு பிரகாரத்தில் கருப்பண்ணசாமி அருள்பாலிக்கிறார். சுமார் 300 ஆண்டுகள் பழமையான அரசமர பொந்தில் சூல உருவில் இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். கிழக்கில் மதுரை வீரன், பொம்மி, வெள்ளையம்மாளும், தெற்கில் சப்த கன்னியர் திருமேனிகளும் உள்ளன. கருவறையில் இறைவி அய்யாளம்மன் கருணை ததும்பும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.

புராண முக்கியத்துவம்

கேரள மாநிலம் ஒரு ஆலயத்தில் ஏழு அம்மன்களை பக்தியோடு முறையாக ஆராதனை செய்து வந்தார் ஒரு பூசாரி. அவருக்கு தேவையான ஆலய பராமரிப்பு பணிகளை அவரது மனைவி கவனித்து வந்தார். இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதனால் வருத்தம் அடைந்த அவர்கள், ஒருநாள் அம்மன் முன் அமர்ந்து தங்களது குறையைக் கூறி வேண்டினர். அவர்களின் வேண்டுதலுக்கு மனம் இரங்கிய அம்பாள், அந்த தம்பதியரின் முன் தோன்றி, ஒரு எலுமிச்சை பழத்தைக் கொடுத்து, இருவரையும் உண்ணும்படி கூறி மறைந்தாள். இரண்டு பேரும் அந்தப் பழத்தின் சாற்றை, அம்மன் சொன்னபடியே பருகினர். அம்மன் அருள்படி வெகு விரைவிலேயே அந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டானது. அவர்களுக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. ஆனால் அந்தக் குழந்தை நெடுநாள் நிலைக்கவில்லை. குழந்தை வளர்ந்து சிறுவன் ஆனான். பல நேரங்களில் தந்தையுடன் அவனும் ஆலயம் செல்வதுண்டு. அப்படி ஒரு நாள் அந்த சிறுவன் தந்தையுடன் ஆலயம் சென்றான். இரவு அர்த்த சாம பூஜையை முடித்த பூசாரி, கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டு விட்டார். சிறுவன் கோவிலின் ஒருபுறம் படுத்து உறங்கிக் கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை. வீட்டிற்குச் சென்றதும், மனைவி பிள்ளையைக் காணாது பதறினாள். அப்போது தான் ஆலயத்திலேயே மகனை விட்டு வந்ததை பூசாரி உணர்ந்தார். அர்த்தசாம பூஜைக்குப் பின் ஆலயக் கதவை திறக்கக்கூடாது என்று ஒரு விதி உண்டு. அதனால் கதவைத் திறந்து மகனை அழைத்துவர பூசாரி அஞ்சினார். அவரது மனைவியோ, ‘இப்போதே மகனை அழைத்து வாருங்கள்’ என்று கூச்சலிட்டாள். இதனால் செய்வதறியாது திகைத்த பூசாரி, ஆலயத்திற்குச் சென்று, கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார். அங்கே உறங்கிக்கொண்டிருந்த மகனை எழுப்பினார். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘அர்த்தசாம பூஜை முடிந்த பிறகு எதற்காக நடையைத் திறந்தாய்’ என்றது அந்தக் குரல். பூசாரியோ, ‘தாயே.. மகனை இங்கேயே வைத்து பூட்டிச் சென்று விட்டேன். அவனை அழைத்துச் செல்லவே மீண்டும் நடையை திறக்க வேண்டியதாயிற்று’ என்றார். ‘பிள்ளை பாசத்தால், இதுவரை கடைப்பிடித்து வந்த நடைமுறையை மாற்றிவிட்டாய். அதற்கு உன்னுடைய பிள்ளை பாசம் தான் காரணம். எனவே அந்தப் பிள்ளை உனக்கு இனி கிடையாது’ என்று கூறியது அந்த அசரீரி. மறுநொடியே சிறுவன் அங்கிருந்து மறைந்து போனான். மகனை இழந்த பூசாரிக்கு, அம்மனின் மீது கோபம் உண்டானது. பத்து நாட்கள் கோவிலில் பூஜை எதுவும் நடத்தவில்லை. அதற்கிடையில் ஏழு மரப்பெட்டிகளை தயார் செய்து, 11-ம் நாள் கோவில் நடையைத் திறந்து, கருவறையில் இருந்த ஏழு அம்மன் சிலையையும் ஒவ்வொரு பெட்டியில் வைத்து எடுத்து வந்தார். பின் அவற்றை ஒவ்வொன்றாக காவிரி ஆற்றின் மணலில் குழி தோண்டி புதைத்து விட்டு வீட்டுக்குத் திரும்பினார். சில நிமிடங்களிலேயே அங்கே கன மழை பெய்யத் தொடங்கியது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காவிரியின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. நீரோட்டத்தின் அசுரப் பாய்ச்சலில் மண் அரிப்பு ஏற்பட்டு, புதைக்கப்பட்டிருந்த பெட்டிகள் வெளிவந்தன. அவை ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டன. மிதந்து வந்த பெட்டிகள் ஸ்ரீரங்கம் அருகே கரை ஒதுங்கின. ஒரு பெட்டி மட்டும் காவிரியின் தென்புறம் உள்ள மேலச் சிந்தாமணி என்ற இடத்தில் ஒதுங்கியது. அன்று இரவு அந்த ஊரில் இருந்த ஒருவருக்கு அம்மனின் அருள் வந்தது. அவர் ‘நான் காவிரிக் கரையில் ஒதுங்கியிருக்கிறேன். நான் வைஷ்ணவியின் அம்சம். பக்தர்களின் ஐயங்களை நான் தீர்த்து வைப்பேன். எனக்கு ஒரு ஆலயம் கட்டுங்கள். என்னை ‘அய்யாளம்மன்’ என்று அழையுங்கள்’ என்று கூறினார். அருள்வாக்குப்படி ஊர் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, பெட்டியை எடுத்து வந்து கரையோரம் பரிசல் துறையில் அம்மனின் சிலையை பிரதிஷ்டை செய்து, அங்கேயே ஒரு ஆலயத்தை எழுப்பினர். அந்த ஆலயமே அய்யாளம்மன் ஆலயம் ஆகும். ஸ்ரீரங்கத்தின் கரையிலும், அருகாமையிலும் ஒதுங்கிய மற்ற ஆறு பெட்டிகளும், அந்தந்த ஊர் மக்களால் கரையேற்றப்பட்டு தனித்தனி ஆலயங்களாக கட்டப்பட்டன. இந்த ஆலயங்கள் திருவரங்கத்து அம்மன், செல்லாயி அம்மன், காஞ்சாயி அம்மன், மாணிக்க நாச்சியார், மண்ணாயி அம்மன் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

நம்பிக்கைகள்

குழந்தை பேறு வேண்டுவோர் அன்னைக்கு எலுமிச்சை பழ மாலையும், திருமண வரம் வேண்டுவோர் அன்னைக்கு புடவை சாத்தியும் வழிபாடு செய்தால், வேண்டுதல் விரைவில் நிைறவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. தன்னை ஆராதிக்கும் பக்தர்கள் மனதில் எழும் பயத்தையும், குழப்பத்தையும் நீக்கி அவர்கள் வாழ்க்கை ஒளிமயமாக அமைய அய்யாளம்மன் அருள்புரிகிறாள்.

திருவிழாக்கள்

மேலச் சிந்தாமணியில் உள்ள அய்யாளம்மன் ஆலயத்தில் தினமும் இரண்டு கால பூஜை நடக்கிறது. இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. ஆடி 18-ல் அன்னைக்கு வளையல் அலங்காரம், சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை காப்பு கட்டி திருவிழா போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும். சித்திரை விழாவின் முதல் 8 நாட்கள் பக்தர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. மறுநாள் அம்மன் ஊர்வலம் புறப்படும். 10-ம் நாள் தேர் திருவிழா தொடங்கி மூன்று நாட்கள் கோலாகலமாக விழா அரங்கேறும். இந்த திருவிழா 20 நாட்கள் நடைபெறும். இது தவிர 9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா இங்கு பிரசித்தி பெற்றதாகும். 9 நாட்களும் இத்தல அன்னையை, விதவிதமாக அலங்கரிப்பார்கள். இதை காணவே ஏராளமான மக்கள் ஆலயம் வருவார்கள். இந்த 9 நாட்களும் அன்னைக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறும். மேலும் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பரிசல்துறை

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top