பரவாக்கரை மாணிக்கேஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்
முகவரி :
பரவாக்கரை மாணிக்கேஸ்வரர் சிவன் கோயில்,
பரவாக்கரை, குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612201.
இறைவன்:
மாணிக்கேஸ்வரர்
இறைவி:
மரகதவல்லி
அறிமுகம்:
நாச்சியார்கோயில் – திருவீழிமிழலை சாலையில் கூந்தலூர் வந்து கருவேலி தாண்டி இரண்டு கிமீ தூரம் சென்றால் பரவாக்கரை அடையலாம். பரவா என்ற சொல்லுக்கு உயர்ந்தது; உன்னதமானது என பொருள். பரவாக்கரை என்றால் உயர்வான தலம் என பொருள். திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகருக்கு சிவனின் திருவடி தீட்சை ஆவுடையார்கோவிலில் கிடைத்தது. அவர் வழிபட்டதால் இந்த தல இறைவனுக்கு மாணிக்கேசுவரர் என பெயர் என்கின்றனர்.
இது 8ம் நூற்றாண்டில் நடந்த கதை. இவ்வூரில் இரு சிவன்கோயில்கள் இருந்திருக்கின்றன. இரண்டும் கொச்செங்கண்ணனார் அமைத்த மாடக்கோயில்கள் என கூறப்படுகிறது. தற்போது ஒரு கோயில் முற்றிலும் காணாமல் போய் லிங்கத்தடி திடல் என அழைக்கப்படுகிறது. இந்த கற்களை கொண்டு இவ்வூரிலேயே ஓர் பெருமாள் கோயில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இப்போதிருக்கும் சிவன் கோயிலை மாணிக்கவாசகர் வழிபட்டதாகவும், திருமூலர் உருவாக்கியதாகவும் கூறுகின்றனர். இக்கோயில் இறைவன் பெயர் மாணிக்கேஸ்வரர் இறைவியின் பெயர் மரகதவல்லி.
பல வருடங்களாக சிதைந்து கிடந்த இக்கோயிலை சில ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பணிகள் செய்திருக்கின்றனர். எனினும் மக்கள் வழிபாட்டிற்கு வருவது குறைவாகவே உள்ளதால் மீண்டும் பொலிவை இழந்து மரங்கள் முளைத்து காணப்படுகிறது. இறைவன் மேற்கு நோக்கியிருக்கும் சிறப்பு மிக்க திருக்கோயில். இறைவி தெற்கு நோக்கியுள்ளார். பிரதான வாயில் தென்புறமே உள்ளது. அதன் வழி உள்ளே சென்றதும் தென்மேற்கு மூலையில் தனி கோயில் கொண்டுள்ளார் விநாயக பெருமான். அடுத்து இறைவனின் எதிரில் உள்ள மண்டபத்தில் நந்தி இறைவனை நோக்கியவாறு உள்ளது. அதனை ஒட்டியபடி திருமூலருக்கு ஒரு மாடத்தில் சிலை வைத்துள்ளனர். இத்தலத்தில் இவர் இரு கோயில்கள் உருவாக்கியதற்காக இவ்வாறு வைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து கிழக்கு நோக்கிய முருகன் சன்னதி உள்ளது. பிரகாரமாக வலம் வரும்போது சண்டேஸ்வரர் சன்னதியும் வடமேற்கில் பைரவர் சன்னதியும் உள்ளது. கருவறை கோட்டங்களில் துர்க்கை, தென்முகன் தவிர சிலைகள் ஏதுமில்லை.
கோயில் பிரகாரங்கள் புல்லும் புதர்களும் மண்டிக்கிடக்கின்றன, கருவறை விமானங்கள் மரங்கள் முளைத்து கருவறை மண்டபத்தை பிளக்கும் எண்ணத்துடன் உள்ளன. எண்ணைகள் பிசுக்குடன் மூர்த்திகள், அழுக்கடைந்த வஸ்திரங்கள், காலத்துக்கு ஏற்ற பூஜைகள் இல்லை. கோயிலை சுற்றிய பகுதிகள் நெல் கொள்முதல் செய்யும் இடமாக மாறியுள்ளது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பரவாக்கரை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி