Saturday Jan 18, 2025

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர்-609 807 (திருப்பந்தணைநல்லூர்) கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: 91- 435-2450 595,+91- 435-2450 595, 98657 78045

இறைவன்

இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி: வேணுபுஜாம்பிகை, காம்பணையதோளி

அறிமுகம்

பசுபதீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடக்கரையில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் பசுபதீஸ்வரர், தாயார் காம்பணையதோளி. இத்தலத்தின் தலவிருட்சமாக சரக்கொன்றை மரமும், தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் அமைந்துள்ளன. இத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்தில் பந்தநல்லூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது பழங்காலத்தில் பந்தணைநல்லூர் என்று அழைக்கப்பெற்று வந்தது. மேலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 35வது சிவத்தலமாகும்.

புராண முக்கியத்துவம்

சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்தபோது பார்வதிக்கு பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது. இதனால் சிவன் 4 வேதத்தையும் 4 பந்துகளாக மாற்றி பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதியும் தொடர்ந்து விளையாடுகிறாள். இவள் விளையாடுவதால் சூரியன் மறையாமல் வெளிச்சம் தருகிறார். இருட்டே இல்லாமல் போனது. இதனால் மாலை வேளையில் முனிவர்கள் சந்தியாவந்தனம் செய்ய இயலாமல் போனது. அனைவரும் சூரியனிடம் செல்ல, பார்வதியின் கோபத்திற்கு நான் ஆளாக மாட்டேன் என கூறிவிடுகிறார். எனவே அனைவரும் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். சிவன் பார்வதியிடம் செல்கிறார். இவர் வந்ததை பார்வதி கவனிக்கவில்லை. கோபம் கொண்ட சிவன், பார்வதியை பசுவாக சபிக்கிறார். வருந்திய பார்வதி சாபவிமோசனம் வேண்டுகிறார். சிவன் பந்தை காலால் எத்த, அது பூமியில் சரக்கொன்றை மரத்தின் அடியில் விழுகிறது. இந்த மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்திற்கு பால் சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். பந்து அணைந்த தலம் ஆதலால் “பந்தணை நல்லூர்’ ஆனது. பார்வதியை காப்பாற்ற மகாவிஷ்ணு இடையர் வடிவில் அப்பசுவை அழைத்துக்கொண்டு இத்தலம் வருகிறார். பகல் பொழுதில் பசுவை மேய விட்டு, மாலையில் அருகிலுள்ள கன்வ மகரிஷி ஆசிரமத்தில் பால் கொடுத்து வந்தார். ஒரு நாள் பசு புற்றிலிருந்த லிங்கத்தை பார்த்து, அதன் மேல் பாலை சொரிந்து விடுகிறது. அன்று மாலை மகரிஷிக்கு பால் இல்லை. இதற்கான காரணம் அறிய பசுவின் பின்னால் விஷ்ணு செல்கிறார். புற்றின் மீது பால் சொரிவதை கண்டவுடன் பசுவை அடிக்கிறார். பசு துள்ளி குதித்து புற்றில் காலை வைக்க, பசுவும் இடையனாக வந்த விஷ்ணுவும் சுய உருவம் பெருகின்றனர். சாப நிவர்த்தி பெற்றவுடன் தன்னை திருமணம் செய்ய சிவனிடம் வேண்டுகிறார். அதற்கு சிவன் வடக்கு நோக்கி தவமிருந்து என்னை வந்து சேர் என்கிறார். அதன்படி செய்து அம்மன் சிவனை திருமணம் செய்கிறார். சிவன் மூலஸ்தானத்தில் கல்யாண சுந்தரராக அருள்பாலிக்கிறார். 7 நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்கள். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்மன் வடக்கு நோக்கி தவக்கோலத்திலும் உள்ளனர். நுழைவு வாயிலில் கோட்டை முனியாண்டவர் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் நவலிங்கங்கள், முருகன், கஜலட்சுமி, அன்னபூரணி, சரஸ்வதி, சட்டைநாதர், தெட்சிணாமூர்த்தி, நேர்கோட்டில் நவகிரகங்கள் உள்ளன. இத்தல விநாயகர் நிருதி கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

நம்பிக்கைகள்

கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் பார்வை நிச்சயம். பித்ருக்களால் ஏற்படும் தோஷம், திருமணத்தடை, மனநிலை பாதிப்பு, பயந்த சுபாவம், கடனால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.

சிறப்பு அம்சங்கள்

பசுவின் பதியாக வந்ததால் சிவன் பசுபதீஸ்வரர் ஆனார். சுவாமியின் திருமணத்தை நவகிரகங்கள் நேர்கோட்டில் நின்று தரிசிப்பதால், அனைத்தும் அனுக்கிரக மூர்த்திகளாக விளங்குகின்றன. நவகிரக தோஷம் உள்ளவர்கள் சுவாமி, அம்மன், நவகிரக்தை சுற்றுவது நலம். நடராஜருக்கு இங்கு தனி சபை கிடையாது. விஷ்ணு தனி கோயிலில் ஆதிகேசவப்பெருமாளாக அருள்பாலிக்கிறார். காம்பேலி மன்னன் தன் மகனுக்கு பார்வை பெற்ற தலம். பெருமாள், கன்வர், வாலி, இந்திரன், பிரம்மா, சூரியன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். ராமலிங்க அடிகளாரும், பட்டீஸ்வரம் மவுன குருசாமியும் பாடியுள்ளனர்.

திருவிழாக்கள்

மாசி மகம், பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பந்தநல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top