Saturday Jan 18, 2025

பத்ராச்சலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி திருக்கோயில், தெலுங்கானா

முகவரி

பத்ராச்சலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி திருக்கோயில், பத்ராச்சலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், தெலுங்கானா – 507111.

இறைவன்

இறைவன்: வைகுண்ட இராமர் இறைவி: சீதா

அறிமுகம்

பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில் இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் இராமருக்காக அமைக்கப்பட்ட கோவிலாகும். பத்ராச்சலம் நகரமானது ஐதராபாத்தில் இருந்து கிழக்கே 325 கிலோ மீட்டர் தூரத்திலும் கம்பம் நகரத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. பத்ராச்சலம் நகரத்தில் அமைந்த கோவிலில் மூலவரான இராமருக்கும் அவர் துணைவி சீதைக்கும் திருக்கல்யாண உற்சவம் ஆண்டு தோறும் இராமநவமியன்று மிகுந்த சிறப்புடன் நடத்தப்படுகிறது. இந்தக் கோவிலானது பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த கஞ்சர்ல கோபண்ணா என்பவரால் கட்டப்பட்டது. நம் புராண இதிகாசமான இராமாயணத்திற்க்கும், பத்ராச்சலத்திற்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. இராமர், லட்சுமணன், சீதை மூவரும் வனவாசம் செல்லும்போது தங்கியிருந்த பர்ணசலை பத்திராசலத்திலிருந்து இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவர்கள் மூவரும் கடந்த சென்ற வழியில் தான் பத்ராசலம் இராமர் கோவில் இன்று அமைந்துள்ளது. பத்ராசல மலையை சுற்றி ஓடும் கோதாவரி நதியை இராமர், லட்சுமணன், சீதை கடந்ததாக வரலாறு கூறுகிறது.

புராண முக்கியத்துவம்

புராணத்தில் மேரு மற்றும் மேனகையின் மகனான பத்திரன் என்பவர் ராமனை நோக்கி தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இராமர் சீதையை மீட்டு வருவதற்காக கோதாவரி நதிக் கரையை கடந்தபோது நடந்த கதைதான் இது. பத்திரன் என்ற முனிவர் இராமபிரானின் அருளைப் பெருவதற்காக கோதாவரி நதிக்கரையில் தவம் இருந்து வந்தார். தன் இதயத்தில் அமரும்படி வேண்டி தவம் மேற்கொண்டு இருக்கின்றான். இந்த பத்திரனின் உண்மையான பக்தியை அறிந்த இராமர், ‘தன் மனைவி சீதையை தேடி செல்வதாகவும், சீதையை மீட்டு தர்மத்தை நிலைநாட்டிய பின்பு அயோத்தி திரும்பும் வழியில் உன் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறேன்’ என்று வாக்களித்து சென்றுவிட்டார். ஆனால் சீதையை மீட்டு திரும்பிய போது இராமரால் தன் வாக்கை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. தன் பக்தனான பத்திரனோ தவத்தை நிறுத்தவில்லை. இதனை அறிந்து கொண்ட இராமர், ‘திருமால் வைகுண்ட ராமனாக’ தன் பக்தனின் வேண்டுகோளுக்கு இணங்க அவதரித்தார். இராமர் தன் துணைவி சீதையுடனும், லக்ஷ்மணனும் சிலையாக அமர்ந்த இடம் பத்திரனின் தலை பகுதி என்பதால் இந்த மலைக்கு பத்திராசலம் என்ற பெயர் வந்தது. இந்த கோவிலில் இராமர் தனது 4 கரங்களுடன், சீதையை தனது இடது மடியிலும், லக்ஷ்மணனை வலது மடியிலும் அமர வைத்துக் கொண்டு காட்சி அளிக்கிறார்.

நம்பிக்கைகள்

கோபண்ணா என்பவர் பத்ராச்சலத்தில் வட்ட ஆட்சியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அரசின் பணியாளரான இவர், அரசாங்க பணத்தை எடுத்து இந்த கோவிலை கட்டி முடித்து விட்டார். இது அரசுக்கு எதிரான காரியம் என்பதால் கோபண்ணாவை, அரசாங்கம் கோல்கொண்டா சிறையில் சிறை வைத்து விட்டது. இராமரின் மீது கொண்ட பக்தியினால் இந்த செயலை செய்து விட்டார். தனது பக்தனை தண்டனையிலிருந்து காப்பாற்ற அந்தக் கடவுளான பத்ராசல இராமரே, கோவிலுக்கு செலவழித்த பணத்தை தெய்வ சக்தியால் சுல்தானுக்கு திருப்பிக் கொடுத்துவிட்டார். இராமரின் சக்தியையும், கோபண்ணாவின் பக்தியையும் கண்ட சுல்தான் சிறையில் வைத்திருந்த கோபண்ணாவை விடுதலை செய்து விட்டார். இராமரின் மீது இன்னும் அதிக பக்தி கொண்ட ‘கோபண்ணா பத்ராசல இராமதாசர்’ என்னும் பெயர் கொண்டு தெலுங்கில் பல பாடல்களை இராமரைப் போற்றும் வகையில் பாடியுள்ளார்.

திருவிழாக்கள்

ராமநவமி மற்றும் தசரா பண்டிகைகள் இந்தக் கோயிலில் மிகவும் கோலாகலமாகவும், ஆடம்பரமாகவும் கொண்டாடப்படும். ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாக்களில் இராவணின் உருவ பொம்மையை எரித்து பக்தர்கள் குதூகலத்துடன் விழாவை நிறைவு செய்வார்கள்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பத்ராச்சலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பத்ராச்சலம்

அருகிலுள்ள விமான நிலையம்

இராஜமுந்திரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top