பக்தர்களின் வேண்டுதல்களை, செவி சாய்த்து கேட்கும் ஈசன்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோவில். இத்தல இறைவனின் புராணப் பெயர், ‘புடார்க்கினியீஸ்வரர்’ என்பதாகும். அம்பாளின் திருநாமம், கோமதி அம்மன். மூலவரின் திருமேனி மீது காயம்பட்ட வடு உள்ளது. இதனால் சுயம்புவாக தோன்றிய இந்த மூலவரின் மீது சந்தனாதித் தைலம் மட்டுமே பூசி பூஜை செய்கிறார்கள். அபிஷேகம் எதுவும் கிடையாது.
“நாறும் பூவின் நடுவில் நிற்பவனே நினை தரிசிக்க எனக்கு அருள்புரிவாயோ..” என்று கேட்ட கருவூர் சித்தருக்காக, சுயம்புவான இத்தல மூலவர் சற்றே சாய்ந்து காட்சியளித்தார். அந்த சாய்வு நிலையிலேயே மூலவரை நாம் தரிசிக்கலாம். தேடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை, செவிசாய்த்து கேட்பவர் என்பதாகவும் இதனை பொருள் கொள்ளலாம்.