நெருப்பூர் முத்தையன்சுவாமி (நரசிம்மர்) திருக்கோயில், தர்மபுரி
முகவரி
நெருப்பூர் முத்தையன்சுவாமி (நரசிம்மர்) திருக்கோயில், நெருப்பூர், தர்மபுரி மாவட்டம் – 636180
இறைவன்
இறைவன்: முத்தையன் (நரசிம்மர்)
அறிமுகம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த நாகமரை வனப்பகுதியில் இருக்கிறது 500 ஆண்டுகள் பழமையான நெருப்பூர் முத்தையன்சுவாமி கோயில். பாறைகளும், அரச மரத்தின் அகன்ற வேர்களும் பின்னிப்பிணைந்து கிடக்கும் இருண்ட குகை தான், முத்தையன் சுவாமியின் மூலஸ்தானம். ஆண்டு முழுவதும் வற்றாமல் சலசலத்து ஓடும் நீரூற்று. அதற்கு மத்தியில் நடுநாயகமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார் முத்தையன் சுவாமி. சுவாமியின் தலைக்கு மேல் வவ்வால்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதிர்வேட்டு, மேளதாளங்கள், பக்தர்களின் கூச்சல் என்று எதற்கும் மிரளாமல், இந்த வவ்வால்கள் இருப்பது வியப்பு. காக்கும் நரசிம்மரின் அவதாரமே இந்த முத்தையன் சுவாமி.
புராண முக்கியத்துவம்
ஒரு காலத்தில் காடுகளே மக்களின் வாழ்விடமாக இருந்தது. அப்போது கொடிய மிருகங்களின் தாக்குதலில் உயிர் பலியாவதும், தீயசக்திகள் அண்டுவதால் நோய்வாய்பட்டும் மக்கள் தத்தளித்தனர். இதேபோல் கடும் வறட்சியும் தலைவிரித்தாடியது. அப்படிப்பட்ட சூழலில் கண்ணீர் மல்க வழிபட்ட மக்களை காக்க காவல் தலைவனாக வந்து நின்றார் நரசிம்மர். கிராம மக்கள் தந்தையையும், மரியாதைக்குரியவர்களையும் அய்யன் என்று அழைப்பது வழக்கம். அந்த வகையில் தங்கள் குடும்பத்தில் மூத்தஅய்யன் என்று நரசிம்மரை வழிபட்டனர். மூத்தஅய்யன் என்பது காலப்போக்கில் முத்தையனாக மாறியது என்பது தலவரலாறாக கூறப்படுகிறது. ஊரைக்காக்கும் முத்தையன் சுவாமிக்கு உற்ற துணையாக இருப்பவர் ஆஞ்சநேயர் என்பதால் அவரும் சமமாக பாவிக்கப்படுகிறார்.
நம்பிக்கைகள்
சுவாமி திருவீதியுலா வரும் பாதையில், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் நெடுஞ்சாண் கிடையாக தரையில் படுத்துக் கொள்கின்றனர். சுவாமியை சுமந்து வரும் கோயில் பூசாரி, அவர்களை தாண்டிச்சென்று ஆசி வழங்குகிறார். இப்படி ஆசி பெறுவதால், துன்பங்கள் விலகி நன்மை சேரும், நோய், நொடிகள் நீங்கி, திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மக்களை அச்சுறுத்தும் நள்ளிரவில் காவல் தலைவனாக வலம் வருபவர் முத்தையன்சுவாமி. அவர் இருட்டில் அமர்ந்து, உயிர்களை கண்காணிக்கிறார். தன்னை நம்பி வரும் மக்களுக்கு வாழ்க்கை பிரகாசமாக அமைய வெளிச்சம் கொடுக்கும் ஒப்பற்ற சக்தியாக திகழ்கிறார் என்பது ஆண்டாண்டு காலமாய் முத்தையன் சுவாமியை வழிபடுபவர்களின் நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்
நரசிம்மரின் பஞ்சணையாக ஐந்துதலை நாகம் உள்ளது. இந்த குகைக்குள் ஐந்து தலைநாகம் ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது என்ற மிரட்சியான தகவலும் முத்தையன் சுவாமியை வழிபடும் உள்ளூர் கிராம மக்களிடம் உலவிக் கொண்டிருக்கிறது. முத்தையன் சுவாமிக்கு அருகில் ஆஞ்சநேயருக்கும் கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் ஒரே நேரத்தில் பூஜைகள் நடப்பது கூடுதல் சிறப்பு.
திருவிழாக்கள்
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி அமாவாசையில் முத்தையன் கோயிலில் நடக்கும் சிறப்பு வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நெருப்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தர்மபுரி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை