Thursday Dec 26, 2024

நெய்யாற்றங்கரை கிருஷ்ணர் கோயில்

முகவரி :

நெய்யாட்டின்கரா ஸ்ரீகிருஷ்ண ஸ்வாமி கோவில் அருகில் கிருஷ்ண சுவாமி கோவில், ஆலும்மூடு, நெய்யாட்டின்கரா, திருவனந்தபுரம், கேரளா 695121

இறைவன்:

நெய்யாற்றங்கரை கிருஷ்ணர்

அறிமுகம்:

நெய்யாற்றங்கரை கிருஷ்ண சுவாமி கோயில் என்பது கேரளத்தின், திருவனந்தபுரம் நகரத்திற்கு தெற்கே 20 கி.மீ. தொலைவில் நெய்யாற்றிங்கரையில் அமைந்துள்ள ஒரு கிருஷ்ணர் கோயில் ஆகும்.

கிருஷ்ணருக்கு அமைந்துள்ள முக்கியமான கோயில்களில் ஒன்றான இந்தக் கோயில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் கோவிலின் முதன்மைத் தெய்வம் உன்னிகண்ணன் (நவநீத கிருஷ்ணன்) வடிவத்தில் உள்ளார். திருக்கையில்வெண்ணை (வெண்ணெய்) என்பது கோயிலின் தெய்வமான நெய்யாற்றங்கரை உன்னிகண்ணனின் தனித்துவமான ஒரு பிரசாதமாகும்.இந்தக் கோயில் திருவிழாவில் உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான நெய்யாற்றங்கரை மோகனச்சந்திரன் மற்றும் நெய்யாற்றங்கரை வாசுதேவன் ஆகியோர் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.

புராண முக்கியத்துவம் :

நெய்யாற்றங்கரை கிருஷ்ணசுவாமி கோயில் கி.பி 1750 – கி.பி 1755 க்கு இடையில் அப்போதைய சுதேச நாடான திருவிதாங்கூரின் மன்னரான அனிஷம் திருநாள் மாரத்தாண்ட வர்மரால் கட்டபட்டது. இந்த கோயிலைக் கட்டியதன் பின்னணியில் உள்ள வரலாறு / புராணக்கதை என்னவென்றால், அப்போதைய ஆட்சியாளரான அனிஷம் திருநாள் மார்த்த்தாண்டவர்மர் கோயில் தற்போது உள்ள இடத்தில் அவரது எதிரிகளான “எட்டுவீட்டில் பிள்ளைமார்”களால் சூழப்பட்டார். மன்னர் ஒரு பாதுகாப்பான இடத்தில் மறைந்துகொள்ள இடம்தேடினார். அந்த நேரத்தில், அங்கு இருந்த ஒரு சிறுவன், அரசரை அருகில் இருந்த பெரிய பலா மரத்தில் இருந்த பெரிய மரப்பொந்தில் ஒளிந்துகொள்ளுமாறு கூறினான். இதன்படி நடந்த மன்னர் தன் எதிரிகளிடமிருத்து தப்பினார். பின்னர், மன்னன் அச்சிறுவன் யார் என்பதை அறிய முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் கிருஷ்ணர் / உன்னிகிருஷ்ணரே தன் உயிரைக் காப்பாற்றினார் என்று மன்னர் தீவிரமாக நம்பினார். இதனால் நன்றிக்கடனாக அவர் கிருஷ்ணருக்காக ஒரு கோவிலைக் கட்ட முடிவு செய்தார். இதன்படி அவர் பலா மரப் பொந்தில் மறைந்திருந்த இடத்திற்கருகில் நெய்யாற்றங்கரை கிருஷ்ணார் கோயில் உருவானது. அரசரின் உயிரைக் காப்பாற்ற உதவிய பிரமாண்ட பலா மரம் “அம்மாச்சி பிளவு” (தாய் / பாட்டி பலா மரம்) என்று அறியப்பட்டது. கி.பி. 1970-75 வரை, இந்த மரத்தின் கிளைகள் பெரிய அளவிலான பலா பழங்களைத் தாங்கியிருந்ததாக இருந்தன. ஆனால் அரசர் ஒளிந்திருந்த மரப் பொந்தைப் பாதுகாப்பதற்காக இந்த கிளைகளை வெட்ட வேண்டியிருந்தது. தற்போது, வெற்று அடிமரம் (தொல்லியல் துறையால்) பாதுகாக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் இதைக்கண்டு செல்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

மிகவும் பசுமையான பரந்த நிலப்பகுதியில் அமைந்துள்ள நெய்யாற்றங்கரை கிருஷ்ணர் கோயிலானது திருவனந்தபுரம் மாவட்டத்தின் குருவாயூர் என்று கருதப்படுகிறது. பாரம்பரிய கேரள கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோயில் அழகிய கலைச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயிலின் பிரதான கோபுரத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசிக்கும் காட்சியைக் கொண்டுள்ளது. கோயில் கருவறை பாரம்பரிய கேரள பாணியில் கட்டப்பட்டுள்ளது. இப்போது ஸ்ரீ கோவிலின் (கருவறை) கதவுகள் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. ஸ்ரீ கோவிலுக்கு முன்னால் ஒரு பெரிய கோபுரம் உள்ளது. பிரதான வளாகத்தின் உள்ளே, விநாயகர், தர்மசாஸ்தா போன்ற தெய்வங்கள் உள்ளனர். பிரதான கோயில் வளாகத்திற்கு வெளியே, நாகராஜன் வழிபடுகிறார். தற்போது, யாத்ரீகர்கள் வெயிலில் துன்பமுறாமல் இருப்பதற்காக கோயில் பிரகாரத்தைச் சுற்றிலும் நடைப்பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதை உன்னிகண்ணனின் பக்தர்களின் உதவியுடன் ஆலோசனைக் குழு செய்கிறது.

கருவறையின் சுவர்கள் கிருஷ்ணர் மற்றும் பல்வேறு கடவுள்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

கோயிலில் “நெய்யாற்றங்கரை கண்ணன்” என்ற பெயரிடப்பட்ட யானை உள்ளது.

திருவிழாக்கள்:

இந்த கோவிலில் அஷ்டமி ரோகிணி, விஷூ, நவராத்திரி, மண்டலபூசை ஆகியவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன. கோயிலின் முக்கிய திருவிழா அதன் ஆண்டுத் திருவிழா ஆகும், இது மீனத்தின் போது. இது கொடியேற்றத்துடன் தொடங்குகிறது, அன்று கோயிலின் பிரதான அர்ச்சகர் கோபுரத்தின் மேல் ஒரு புனிதக் கொடியை ஏற்றி வைப்பார், இது திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கிறது. விழாவானது ஆராட்டுடன் முடிகிறது.

காலம்

1750 – 1755

நிர்வகிக்கப்படுகிறது

திருவிதாங்கூர் தேவசம் போர்டு.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நெய்யாற்றங்கரை

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவனந்தபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top