Friday Dec 27, 2024

நாணல்காடு ஸ்ரீ திருக்கச்டீஸ்வரர் திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி

நாணல்காடு ஸ்ரீ திருக்கச்டீஸ்வரர் திருக்கோயில், நாணல்காடு, தூத்துக்குடி மாவட்டம் – 628252

இறைவன்

இறைவன்: ஸ்ரீ திருக்கச்டீஸ்வரர் இறைவி: ஸ்ரீ சிவகாமசுந்தரி

அறிமுகம்

திருநெல்வேலி – தூத்துக்குடி நாலுவழிச் சாலையில் செல்லும் புறநகர் பேருந்தில் ஏறி, வல்லநாட்டில் இறங்க வேண்டும். அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் நாணல்காடு என்ற இடத்தில் இந்த ஆலயம் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகா சமேத ஸ்ரீ திருக்கச்டீஸ்வரர் ஆலயம். காஞ்சிபுரத்தில் திருக்கண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதுபோலவே தென்னகத்தில் திருகண்டீஸ்வரர் அருளும் இடம் இது. இதுவே ‘தென்காஞ்சி’ என அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் மிக பிரபலமாக இருந்தது இந்த ஆலயம். தற்போது மஞ்சனத்தி மரங்களும், முட்புதர்களும் மண்டிக் கிடக்க, கோபுரம் எதுவும் இல்லாமல் காட்சி அளிக்கிறது. திருப்பணி கண்டு 100 வருடங்களை கடந்து விட்டது. இடிந்து கிடக்கும் சுவரும், சாய்ந்து விழத்துடிக்கும் சுற்றுபுறச்சுவரும் கொண்டதாகவே விளங்குகிறது. ஆனாலும் இத்தல இறைவனின் கீர்த்தி மிகப்பெரியது. எனவேதான் வெள்ளிக்கிழமை இக்கோவிலுக்கு வந்து, மூன்று மணி நேரம் அமர்ந்து, குரு ஓரை காலத்தில் சிவனுக்கும் சனீஸ்வரனுக்கு அபிஷேகம் செய்தால் கேட்ட வரம் கிடைக்கிறது.

புராண முக்கியத்துவம்

தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாகக் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்தனர். திடீரென்று வாசுகி நஞ்சை கக்கியது. அனல் தகிக்கும் அந்த நஞ்சு பரவினால் உலக உயிர்கள் துன்பத்தில் துவளும் என்பதால், சிவபெருமான் அந்த விஷத்தை பருகினார். இந்த பிரபஞ்சமே ஈசனின் அசைவில்தான் உள்ளது. அவர் உடலில் விஷம் சென்றால், உலக உயிர்கள் அழிந்து போகும் என்பதை உணர்ந்த அம்பாள், ஈசனின் கழுத்தை அழுத்திப் பிடித்தார். இதனால் விஷம் உடலுக்குள் இறங்காமல், ஈசனின் கழுத்திலேயே நின்றது. இதனால் அவர் ‘திருகண்டீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். முற்காலத்தில் இவ்வூரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நாணல்களுடன் தர்ப்பையும் அடர்த்தியாகக் காணப்பட்டது. எனவே இத்தலம் ‘தர்ப்பாரண்யம்’ எனப் போற்றப்பட்டது. இவ்வூரில் சிவகாமி அன்னையும், சிவபெருமானும் வாழ்ந்து வந்ததாகவும், தாமிரபரணி கரையில் மஞ்சள் தேய்த்து அன்னை சிவகாமி அம்மை ஸ்நானம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் அசுரர்களின் சதியால் தாமிரபரணி நதி நீர் விஷமாகி விட்டது. அதைக்கண்ட சிவபெருமான், விஷமான நதியை தானே உண்டு, தேவர்கள் மற்றும் மக்களை காப்பாற்றினாராம். அப்போது தேவர்கள், “எந்த வேளையிலும் எவர் தடுத்தாலும், நதி நீர் விஷமாகாமல் தடுக்கப்படவேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். அதன்படியே வரம் கொடுத்தார் சிவபெருமான். கருணாகர பாண்டியன் என்ற அரசன், முறப்பநாடு சிவன் கோவிலில் திருப்பணி செய்து கொண்டிருந்தார். அவர் காலத்தில் நாணல் காட்டில் சரவண பொய்கையில் முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். அவர் மீது தீவிர பற்று கொண்டவர், கருணாகர பாண்டியனின் ஒரே மகள். சரவண பொய்கை கரையில் முருகப்பெருமானை வேண்டி வேல் வைத்து வணங்கி வந்தாள், மன்னனின் மகள். அரண்மனைக்கே செல்லாமல் இவ்விடமே கதி என காத்துக்கிடந்தாள். ஆண் வாரிசு இல்லாத நிலையில், கிடைத்த ஒரே மகளும் அரண்மனைக்கே வராமல் இருப்பது மன்னனுக்கு கவலையை தந்தது. இதனால் மகள் மீண்டும் அரண்மனை திரும்ப ஈசனை வேண்டி நின்றார், மன்னன். இந்த நிலையில் சிலர், மன்னனின் மகளை ஒழித்து கட்ட நினைத்தனர். அதற்காக பிரசாதத்தில் விஷம் கலந்து இளவரசிக்கு கொடுத்தனர். அப்போது இளவரசி வளர்த்த கிளி, விஷத்தினை உண்டு உயிரிழந்தது. மனமுடைந்த இளவரசி சிவபெருமானை நோக்கி தவமிருந்தாள். அவள் தவத்தினை மெச்சிய சிவன் கிளிக்கு உயிர் கொடுத்து, இளவரசியின் மனதை மாற்றி அரண்மனைக்கு அனுப்பி வைத்தார். எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கினால், மரணத்தை வெல்லலாம் என்று கருதப்படுகிறது. இக்கோவில் 14 அல்லது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் ‘கோனேரின்மை கொண்டான்’ என்ற வாசகம் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் பட்டப் பெயரினைப் பெற்றவன், வீரபாண்டியன். எனவே இந்த மன்னனின் காலத்தைச் சேர்ந்த கோவிலாக இருக்கக்கூடும் என்கிறார்கள்.

நம்பிக்கைகள்

இவ்வூரில் கவிராயர் ஒருவர் வந்து உணவு கேட்டதாகவும், அவருக்கு யாரும் உணவளிக்காததால், “இங்குள்ள மக்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்காமல் போவது” என்று சாபமிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சாபத்தில் இருந்து விடுபட நினைத்த மக்கள், இந்த ஆலயத்தின் வளாகத்தில் சந்தான கோபால கிருஷ்ணன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, குழந்தைப் பேறுபெற்றுள்ளனர். அதேப்போல் இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கினால், மரணத்தை வெல்லலாம் என்று நம்பப்படுகிறது. இவ்வூர் தாமிரபரணி கரையில் உள்ள தீர்த்தம் ‘சப்தரிஷி தீர்த்தம்’ ஆகும். இங்கு சப்த ரிஷிகளும் வந்து சிவபெருமானை வணங்கி நிற்கிறார்கள். எனவே சனிக்கிழமைகளில், தாமிரபரணியில் நீராடி, சனிபகவானுக்கு கறுப்பு நிற வஸ்திரம் சாத்தி, எள் தீபம் ஏற்றி, அச்சுவெல்லம் நைவேத்தியம் செய்தால், சனி தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

சிறப்பு அம்சங்கள்

பாலாபிஷேகத்தில் நீல நிறமாக மாறும் மூலவரின் திருமேனி. சிவபெருமானால் ஈஸ்வரப் பட்டம் பெற்ற சனிபகவான், தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தாமிரபரணி கரையில் தர்ப்பை வனமும் (நாணல்காடு) உள்ளது. எனவே இத்தலம் ‘தென் திருநள்ளாறு’ என்றும் போற்றப்படுகிறது. இந்தப் பகுதியில் தவழ்ந்தோடும் தாமிரபரணி, வடக்கிலிருந்து தெற்காகப் பாய்ந்து செல்வதால், ‘தட்சிண கங்கை’ என்று சிறப்பித்து கூறுகிறார்கள். திருநள்ளாறு மற்றும் காசிக்குச் செல்ல முடியாதவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து திருக்கண்டீஸ்வரரை வழிபட்டால், காசிக்கும், திருநள்ளாறுக்கும், காஞ்சிக்கும், திருச்செந்தூருக்கும் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும்.

திருவிழாக்கள்

இந்த ஆலயத்தில் பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி மற்றும் திருவாதிரை திருவிழாக்கள் மிகவும் விசேஷமாக நடைபெறுகின்றன. பிரதோஷ நாளில் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரமும், வன்னி இலை மாலை, வில்வ மாலை சாத்தி, வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கிறது. செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சிவகாமி அம்பிகைக்கு அபிஷேகம் செய்து, பச்சை சாத்தி, பிச்சிப்பூ அல்லது மல்லிகைப்பூ மாலை சாத்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

காலம்

14 ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வல்லநாடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

தூத்துக்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Videos

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top