Friday Dec 27, 2024

நல்லூர் கந்தசுவாமி கோவில், இலங்கை

முகவரி

நல்லூர் கந்தசுவாமி கோவில், நல்லூர், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை

இறைவன்

இறைவன்: முருகன் இறைவி: வள்ளி மற்றும் தெய்வானை

அறிமுகம்

இலங்கை நாட்டின் வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டம், யாழ்ப்பாணம் நகரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில், நல்லூர் திருத்தலம் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து வடக்கே 355 கி.மீ. தொலைவில் நல்லூர் இருக்கிறது. கருவறையில் முருகப்பெருமானின் ஆயுதமான வேல்தான் மூலவராக வழிபடப்படுகிறது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழும் வெற்றிவேலைத்தான், இந்தக் கோயிலில் வழிபடு தெய்வமாக எழுந்தருளச் செய்திருக்கிறார் முருகப் பெருமான். திருவிழாக்களின்போது இந்த ‘வேல்’ வடிவத்தையே அலங்கரித்து, வாகனங்களில் எழுந்தருளச் செய்து வீதிவலம் வருகின்றனர். கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளிலும் பெரிய கோபுரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது கோயில். கிழக்கு கோபுரம் ஐந்து நிலைகளுடனும், தெற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் ஏழு நிலைகளுடனும் காட்சியளிக்கின்றன. தெற்கு கோபுரத்தின் அருகில் திருக்குளம் அமைந்திருக்கிறது. கிழக்கு கோபுரத்தின் முன்பு, அழகிய வேலைப்பாடுகளைக்கொண்ட தோரண வளைவு ஒன்றும் உள்ளது.

புராண முக்கியத்துவம்

‘யாழ்ப்பாண வைபவ மாலை’, ‘கைலாய மாலை’ ஆகிய நூல்களில், யாழ்ப்பாணத்தை ஆண்ட கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சர்களுள் ஒருவரான புவனேகவாகு என்பவர் இந்தக் கோயிலைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், `15-ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த, ‘கோட்டே’ சிங்கள அரசரின் பிரதிநிதியாக இருந்து, பிற்காலத்தில் ‘ஶ்ரீசங்கபோதி’ என்னும் பட்டம் பெற்ற புவனேகவாகு என்னும் ‘செண்பகப் பெருமாள்’ என்பவரால் கட்டப்பட்டது’ என்றும் சிலர் கூறுகிறார்கள். இதற்குச் சான்றாகக் கோயிலில் சொல்லப்படும் கட்டியத்தைச் சுட்டிக்காட்டுகின்றனர். இன்னும் சிலர், `புவனேகவாகு தன்னுடைய காலத்தில் ஏற்கெனவே இருந்த கோயிலைப் புதுப்பித்துக் கட்டியிருக்கலாம்’ என்றும் கூறுகின்றனர். 17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துகீசியர்களின் தளபதியாக இருந்த ‘பிலிப்பே டி ஒலிவேரா’ யாழ்ப்பாணத்தைத் தலைநகரமாக மாற்றினார். நல்லூர் கந்தசுவாமி கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கவும் செய்தார். அங்கே ஒரு தேவாலயமும் கட்டினார். பின்னர் வந்த டச்சுக்காரர்கள் அந்த தேவாலயத்தை தங்கள் மரபுக்கு உரிய முறையில் வழிபடக்கூடிய தேவாலயமாக மாற்றிக்கொண்டனர். 19-ம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் மீண்டும் இந்துக் கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டபோது, நல்லூர் கந்தசுவாமி கோயிலும் நிர்மாணிக்கப்பட்டது. பின்னர், தமிழ் இலக்கியத்துக்கும் ஆன்மிகத்துக்கும் பெரும் தொண்டாற்றிய யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் இந்தக் கோயிலின் பூஜைமுறைகளை நெறிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. கோயிலின் வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்திய ஆறுமுக நாவலருக்கு அவருடைய நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் ஒன்றும் கோயிலுக்கு இடப்புறம் அமைந்துள்ளது. கோயிலின் நீண்ட அழகிய பிராகாரங்களில் மரவேலைப்பாடுகளுடன் கூடிய வண்ணப்பூச்சுகள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானை, குழந்தை கிருஷ்ணன், சூரியன், சூலம் ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன. மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். ஆறுமுக சுவாமியின் உற்சவ மூர்த்தம் மிகவும் அழகாக அமைந்திருக்கிறது. மணிமண்டபத்தின் நுழைவாயிலில் வெளிப்புறம் திரும்பிப் பார்த்தபடி நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே, அமர்ந்தநிலையில், ஆறுமுக நாவலரின் திருவுருவச் சிலை உயிரோட்டத்துடன், கையில் புத்தகம் வைத்துக்கொண்டு படிப்பதுபோல் அமைந்திருக்கிறது. மண்டபச் சுவர்களில் அறுபத்து மூவர் திருவுருவங்கள் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டிருக்கின்றன. இந்த மண்டபத்தில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு தேவாரப் பாடல்கள் பண்ணோடு கற்றுக் கொடுக்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் சிலாவிக்கிருகத்திற்குப் பதிலாக வேல் அமைக்கப்பட்டுள்ளது. இதனைச் சுற்றி பிள்ளையார் முதலான பரிவாரத் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாலயம் கிழக்கிலும், தெற்கிலும் வாசல்களைக் கொண்டுள்ளது. இவற்றின் மேல் பெருங்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் தெற்குப் புறத்தில் உள்ள தீர்த்தக்கேணி நன்கு திட்டமிடப்பட்டு, படிக்கட்டுகளும் மண்டபங்களும் கொண்டதாய் அமைக்கப்பட்டுள்ளது. முருகனின் மூர்த்தங்களில் ஒன்றான தண்டாயுதபாணிக்கு அங்கு சிறு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் மடாலயங்கள் உள்ளன.

திருவிழாக்கள்

தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பூஜை இடம்பெறுகின்றமையும், மாலையில் பள்ளியறைப் பூஜை இடம்பெறுகின்றமையும் இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். திருவிழா காலங்களில் மட்டுமல்லாமல் தினமும் மாலையில் முருகப் பெருமானை ஊஞ்சற் பாட்டுப்பாடி, அழகிய சிறு மஞ்சத்தில் ஏற்றி பள்ளியறையில் துயில்கொள்ளச் செய்வதும், மறு நாள் அதிகாலையில் திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சி பாடி, முருகனைத் துயிலெழுப்பி அதே சிறு மஞ்சத்தில் அழைத்து வந்து மூலஸ்தானத்தில் அமர்த்துவதும் சிறப்பான மரபாகும். இங்கு, ஆவணி அமாவாசையைத் தீர்த்தமாகக் கொண்டு இருபத்தைந்து நாட்களுக்கு மகோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆடி அமாவாசையின் ஆறாம் நாள் கொடியேற்றத் திருவிழாவுடன் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகிறது. மகோற்சவ காலங்களில் மெய்யடியார்கள் காவடியாட்டம்|காவடி எடுத்தல், தீச்சட்டியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல், முதலான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர். இக்காலத்தில் புராண படனம் செய்தல், சமயப் பிரசங்கம் செய்தல், திருமுறைகள் ஓதுதல், ஓதுவார்களை அழைப்பித்து ஓதுவித்தல் முதலான சமய நிகழ்ச்சிகள் மக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக நடத்தப்படுகின்றன.

காலம்

15 ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஜவ்வினா

அருகிலுள்ள விமான நிலையம்

ஜவ்வினா

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top