நல்லத்துக்குடி ஆலந்துறையப்பர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
நல்லத்துக்குடி ஆலந்துறையப்பர் திருக்கோயில், நல்லத்துக்குடி, மயிலாடுதுறை அஞ்சல், நாகப்பட்டினம் மாவட்டம் – 609001.
இறைவன்
இறைவன்: ஆலந்துறையப்பர் இறைவி: குயிலாடு நாயகி, குயிலாண்ட நாயகி
அறிமுகம்
நல்லத்துக்குடி ஆலந்துறையப்பர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.தமிழ்நாடு மயிலாடுதுறை – நெடுமருதூர் சாலையில் இவ்வூர் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து 2 கி. மீ. தொலைவு. நகரப் பேருந்து செல்கிறது. மயிலாடுதுறையிலிருந்து கோடங்குடி செல்லும் பேருந்தில் சென்றால் கோயிலருகே இறங்கலாம். நல்லக்குடி என்பது நல்லத்துக்குடி என்று தற்போது அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள இறைவன் ஆலந்துறையப்பர் ஆவார். இறைவி குயிலாடு நாயகி, குயிலாண்ட நாயகி ஆவார். முன் மண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் உள்ளனர். இடது புறம் இறைவி சன்னதி உள்ளது. இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்.
புராண முக்கியத்துவம்
இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் நேரே நந்தி மண்டபத்தில் நந்தியுர் பலிபீடமும் இருக்கக் காணலாம். அதையடுத்துள்ள வாயிலைக் கடந்து மூலவர் கருவறைக்குச் செல்லலாம், மூலவர் ஆலந்துறையப்பர் மேற்குப் பார்த்து கருவறையில் எழுந்தருளியுள்ளார். அம்பாள் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளாள். கருவறை சுற்றிப் பிராகாரத்தில் நவக்கிரக சந்நிதி, பைரவர், சூரியன், காக வாகனத்துடன் சனி பகவான் ஆகியோர் உள்ளனர். தட்சிணாமூர்த்தியும் இடது காலை மடித்து வைத்துக் கொண்டு, வலது காலை தொங்கவிட்டு முயலகன் மீது வைத்தபடி காட்சி அளிக்கிறார். இத்தலத்தில் அம்பிகைக்கு குயிலாண்டநாயகி என்று பெயர். மயிலாடுதுறையிலும், திருமயிலையிலும் மயில் வடிவில் சிவபெருமானை வழிபட்ட அம்பிகை இத்தலத்தில் குயில் வடிவில் இறைவனை வழிபட்டுள்ளாள். குயில் வடிவில் வழிபட்டதால் அம்பிகைக்கு குயிலாண்டநாயகி, குயிலாடுநாயகி எனும் திருநாமம். வில்வ மரம் தல விருட்சமாகவும், சூரியனால் தோற்றுவிக்கப்பட்ட சூரிய தீர்த்தமும் உள்ள இத்தலத்து இறைவனை சூரியன் வழிபட்டுள்ளான். சூரிய புஷ்கரணியில் நீராடி இவ்விறைவனை வழிபடுவோர் தொழு நோய் முதலிய சரும நோய்கள் நீங்கப்பெற்று குணமடைவர் என்று சொல்லப்படுகிறது. இவ்வூர் குயிலாலந்துறை என வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. குயில்கள் இனிதமர்ந்து கூவும் செழுஞ் சோலையினிடையே உள்ள ஆலந்துறையைக் “குயிலாலந்துறை” என்று அப்பர் தனது தேவாரத்தில் குறித்தார். மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள நல்லக் குடியிலே கோயில் கொண்ட இறைவன் பெயர் ஆலந்துறையப்பர் என்றும், இறைவியின் பெயர் குயிலாண்டநாயகி என்றும் வழங்குதலால், திருநாவுக்கரசர் குறிப்பிட்ட குயிலாலந்துறை எனும் வைப்புத் தலம் இதுவே எனக் கொள்ளப்படுகின்றது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நல்லத்துக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி